/indian-express-tamil/media/media_files/2025/04/02/pLM9surwSPs5puW49kBa.jpg)
வக்பு சட்டத்தில் திருத்தம் முன்வடிவினை முழுமையாக திரும்பப்பெறக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், இந்திய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையை வழங்குகிறது. உரிமையை நிலைநாட்டுவதும் பாதுகாப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் கடமையாகும். வக்பு அமைப்புகளைப் பாதுகாப்பதில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துங்கள்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தில் உத்தேச திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (2.4.2025) கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையை வழங்குகிறது என்றும் அந்த உரிமையை நிலைநாட்டுவதும் பாதுகாப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் கடமையாகும். வக்பு சட்டம் 1995-ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாததுடன் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்கு கடுமையான பாதிப்புகளை விளைவிப்பதாக இருக்கிறது” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள வக்பு சட்டத்தில் உள்ள அம்சங்கள் நீண்டகாலமாகச் சிறந்த பயன்பாட்டில் உள்ளதாகவும், வக்பு சொத்துக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் உள்ளன என்றும், வக்பு சட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள், வக்பு சொத்துக்களை நிருவகிப்பதிலும், பாதுகாப்பதிலும் வக்பு வாரியங்களின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் பலவீனப்படுத்தும் வகையிலும் உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போதுள்ள சட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் முன்மொழியப்பட்டுள்ள பெரிய அளவிலான திருத்தங்கள், அச்சட்டத்தின் நோக்கத்தையே நீர்த்துப்போகச் செய்துவிடும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக, மாநில வக்பு வாரியங்களில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை கட்டாயமாக சேர்ப்பது என்பது முஸ்லிம் சமூகத்தின் மத மற்றும் தொண்டு அறக்கட்டளைகளை சுயாதீனமாக நிருவகிக்கும் திறனை மற்றும் மத சுயாட்சியை குறைத்து மதிப்பிடுவதாக அமைவதுடன் 'வக்பு பயனர்' விதியை நீக்குவது பல வரலாற்று அடிப்படையிலான வக்பு சொத்துக்களின் உரிமைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று மு.க. ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறைந்தது ஐந்து ஆண்டுகள் இஸ்லாத்தை கடைப்பிடித்தவர்கள் மட்டுமே வக்புக்கு சொத்துக்களை நன்கொடையாக வழங்கமுடியும் என்ற நிபந்தனை முஸ்லிம் அல்லாதவர்கள் வக்புக்கு சொத்துக்களை நன்கொடையாக வழங்குவதைத் தடுத்துவிடும் என்றும் இது நாட்டின் மத நல்லிணக்கக் கலாச்சாரத்திற்கு இடையூறாக இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள ‘வக்பு சட்டம் – 1995’ போதுமானதாகவும், வக்புகளின் நலன்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க தெளிவான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாலும், வக்பு சட்டம், 1995இல் இதுபோன்ற திருத்தங்கள் இப்போது தேவையில்லை என்பதே எங்கள் கருத்து என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேற்கூறிய அனைத்தையும் கருத்தில்கொண்டு, வக்பு (திருத்த) சட்டம், 2024ஐ முழுமையாக திரும்பப்பெற ஒன்றிய அரசை வலியுறுத்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 27.3.2025 அன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது என்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தின் நகலை இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளதாகவும், சிறுபான்மை முஸ்லிம் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், வக்பு அமைப்புகளைப் பாதுகாப்பதிலும் தாங்கள் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.