தமிழக நெடுஞ்சாலைப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு: கட்கரியிடம் ஸ்டாலின் உறுதி

தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்கள் தொடர்பான அனைத்து பணிகளையும் விரைவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக நெடுஞ்சாலைப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு: கட்கரியிடம் ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தெரிவித்த கருத்துக்களையொட்டி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, “2022-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான Business Line Countdown நிகழ்ச்சியின்போது தாங்கள் சிறப்புரை ஆற்றியபோது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஊடகங்களின் வாயிலாக நான் அறிந்தேன்.

பல்வேறு பிரச்சினைகளை நீங்கள் எடுத்துரைத்து, அவற்றைச் சமாளிப்பதில் மாநில அரசின் ஒத்துழைப்பைக் கோரியிருந்தீர்கள். முந்தைய ஒரு சந்தர்ப்பத்திலும், இதுபோன்ற பிரச்சினைகளை எடுத்துக்காட்டி நீங்கள் எனக்கு கடிதம் எழுதியிருந்தீர்கள். அப்போது நாங்கள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்து நான் விரிவாக பதிலளித்திருந்தேன்.

எனது அரசு பொறுப்பேற்ற பிறகு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்களுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். எங்களைப் போன்ற தொழில்மயமான மாநிலத்திற்கு, சாலை இணைப்பின் முக்கியத்துவத்தை நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம். எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்துத் துறைகளுக்கும் உரிய அறிவுரைகளை நான் வழங்கியுள்ளேன்.

பொதுப் பணித் துறை அமைச்சர் , 2021 அக்டோபர் 12 ஆம் தேதி புதுதில்லியில் உங்களைச் சந்தித்து, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்திட எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறித்து உங்களுக்கு விளக்கினார். மேலும், அந்தக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, மாவட்ட ஆட்சியர்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஒப்பந்ததாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன், 2021 டிசம்பர் 16 ஆம் தேதி கூட்டுக் கூட்டத்தைக் கூட்டினார்.

டெல்லியின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்பொது மேலாளரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஒருநாள் முழுவதும் நடைபெற்ற கூட்டத்தில், அனைத்துப் பிரச்சினைகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரம் கண்டறியப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 80 விழுக்காடு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின்கீழ் நிலம் கையகப்படுத்துவதற்கான நில மதிப்பீட்டை அங்கீகரிக்கும் முறை முறைப்படுத்தப்பட வேண்டும். சில சந்தர்ப்பங்களில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நிலம் கையகப்படுத்துவதற்கான தகுதிவாய்ந்த ஆணையம் (CALA) நிர்ணயித்த மதிப்பீட்டையோ அல்லது மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்பட்ட நடுவர் முடிவுகளுக்கோ ஒப்புக்கொள்ளவில்லை, இது திட்டச் செயல்முறையை முடக்கியுள்ளது.

இதேபோல், பல சந்தர்ப்பங்களில் மண்-கிராவல் எடுப்பதற்குத் தேவையான அனுமதி விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்கள் இல்லாமல் வழங்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், ஏரிகள் , குளங்களில் தண்ணீர் தேக்கமாவதால் அல்லது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களில் இருப்பதால், சாத்தியமற்ற இடங்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்தகைய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் முன் ஆராயப்பட வேண்டும்.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கு, மாநில அரசு தனது சிறந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது என்பது தெள்ளத் தெளிவாகும், மேலும், இவை நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பல பிரச்சினைகளைத் தீர்க்க உதவியுள்ளன என்பதை அறிய முடிகிறது.

மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அதன் விளைவாக துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியின்போது தாங்கள் உரையாற்றியது சற்று வியப்பாக இருந்தது. இருப்பினும், அனைத்துப் பணிகளையும் விரைவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு எனது அரசு, தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று நான் மீண்டும் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mk stalin letter to nitin gadkari regarding tn road projects

Exit mobile version