/indian-express-tamil/media/media_files/14t9ylrG7CS9n5lUJQjm.jpg)
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கேரள அரசு, சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை அனுமதி இல்லாமல் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியானது. இதனால், தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “காவிரிப் படுகையில் அமராவதி (பம்பார்) துணை படுகையில் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், இப்பணி நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு இன்று (23.05.2024) கடிதம் எழுதியுள்ளார்.
இந்த தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் ஏதும் தமிழ்நாடு அரசிடமும் அல்லது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கேரள நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கேட்டுள்ளவாறு இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம் மற்றும் கேரளாவின் பவானி மற்றும் அமராவதி (பம்பார்) துணை படுகைகளுக்கான பெருந்திட்டம் ஆகிய முழு விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சினை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு விவரங்கள் மிகவும் தேவை என்பதால் இந்த விவரங்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக அளிக்கவும் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையேயான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தவும் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வரை இந்த பணியை நிறுத்தி வைக்குமாறு கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.