நதி நீர் இணைப்பு திட்டம்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழக விவசாயிகள் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சொல்லொனாத் துயரினை ஒவ்வொரு நாளும்சந்தித்து வருகின்றனர்.

நதி நீர் இணைப்புத் திட்டங்களில் உடனடி கவனம் செலுத்த வேண்டுமென பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் இணைப்பு பிரச்னைகளால் தமிழகம் இன்றைக்கு மிக மோசமான சூழலை அனுபவித்து வருகிறது என்பதையும், தமிழக விவசாயிகள் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சொல்லொனாத் துயரினை ஒவ்வொரு நாளும்சந்தித்து வருகின்றனர் என்பதையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

பொய்த்து விட்ட பருவ மழை மற்றும் மாநிலங்களில் இருந்து உரிய நீரினை பெறுவதற்கு போராட்டம் வறட்சி போன்றவை விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையையும், அவர்களது வாழ்வாதாரத்தினையும் பெரிதும் பாழ்ப்படுத்தியுள்ளது எனவும் தனது கடிதத்தில் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

மறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம், கடந்த 2002-ஆம் ஆண்டில் நிகழ்த்திய சுதந்திர உரையை பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ள ஸ்டாலின், நீர் மேலாண்மை தான் தற்போது நமது நாட்டிற்கு மிக அவசியத் தேவை எனக் குறிப்பிட்டுள்ளதுடன் அதற்காக நமது கண் முன் இருக்கும் ஒரே தீர்வு நதி நீர் இணைப்பு மட்டுமே என்றும் கூறியுள்ளார்.

கடந்த 1972-ஆம் ஆண்டில் மத்திய நீராதார அமைச்சர் கே.எல்.ராவ், தொலைநோக்குப் பார்வையுடன் முன் வைத்த நதி நீர் இணைப்புத் திட்டம் பற்றிய விரிவான அறிக்கையின் மீதான தொடர் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமான தீர்வை இதுவரை எட்டவில்லை எனவும், நதி நீர் இணைப்புக்கு திமுக எடுத்த நடவடிக்கைகளையும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் தமிழக நதி நீர் இணைப்புத் திட்டங்களை அதிவேகமாக நிறைவேற்றப்பட வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. மாநிலங்களுக்கு இடையிலான நதிகளை இணைப்பதோடு, மாநிலங்களுக்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்களையும் நிறைவேற்ற பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள ஸ்டாலின், தேசிய ஒருமைப்பாட்டினை மேலும் வலுவாக்கவும், தேசிய வளர்ச்சி மற்றும் தேசிய பொருளாதாரம் மேம்படவும் மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதால் நதி நீர் இணைப்புத் திட்டங்களில் பிரதமர் உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

×Close
×Close