29 சி எண் பேருந்தில் தான் பள்ளிக்கு சென்றேன்.. ரியூனியன் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்டாலின்
2022 ஆம் ஆண்டு பள்ளியின் ரியூனியன் நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது இளமைக் காலத்தில் ஒரு நாள் முதலமைச்சராக வருவேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை என்றார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சேத்துப்பட்டு, சென்னை கிறித்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சனிக்கிழமை வருகை தந்தபோது, தனது அண்ணன்களும் இந்த பள்ளியில் படித்ததை நினைத்துப் பெருமைப்படுவதாகக் கூறினார்.
Advertisment
2022 ஆம் ஆண்டு பள்ளியின் ரியூனியன் நிகழ்ச்சியில் பேசிய அவர், பள்ளிப்பருவம் என்பது யாருக்கும் மீண்டும் கிடைக்காத காலம். இந்த பள்ளியில் நான் படித்தபோது எனது தந்தை கலைஞர் கருணாநிதி, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.
பள்ளியில் அமைச்சரின் மகன் என்று நான் காட்டிக்கொள்வதை எனது தந்தை விரும்பமாட்டார்.
பள்ளிக் காலத்தை அசைபோடாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா?
இன்று என்னுடைய பள்ளிக்குச் சென்று தோழர்களைச் சந்தித்து மகிழ்ந்தேன்!
சில மணித்துளிகளில் பல ஆண்டு நினைவுகள் உருண்டோடி நெஞ்சை நனைத்தது!
கோபாலபுரம் இல்லத்தில் இருந்து, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வரை நடந்து சென்று அங்கிருந்து 29 சி எண் பேருந்தில் ஏறி ஸ்டெர்லிங் சாலையில் இறங்கி பள்ளிக்கு நடந்தே வந்தேன். தற்போதும் பேருந்தில்தான் வரவேண்டும் என்று நினைத்தேன், ஆனால் பாதுகாவலர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
ஒரு நாள் அரசியல் கட்சிக்கு தலைமையேற்பேன், முதலமைச்சராக வருவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. நீங்களும் கூட அப்படி நினைத்திருக்க மாட்டீர்கள். ஆனால், இது எல்லாம் நடந்தது. நான் முதலமைச்சராக வருவதற்கு இந்தப் பள்ளியும் ஒரு காரணம். இப்பள்ளியின் மாணவனாக இருந்ததில் பெருமை அடைகிறேன்.
முதல்முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மேயர் நான்தான். மேயராக இருந்தபோது இந்த பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். தற்போது முதலமைச்சராக வரவில்லை, முன்னாள் மாணவனாக, உங்கள் பழைய நண்பராக வந்துள்ளேன். எனது மூத்த சகோதரர்களான முத்து, அழகிரி ஆகியோரும் இப்பள்ளியில் படித்தவர்கள் தான்.
முதலமைச்சராக என்னை உருவாக்கியது இந்த பள்ளிதான். அனைத்தையும் அரசு மட்டுமே வழங்க முடியாது. அரசு பள்ளிகளில் படித்தவர்கள், முன்னாள் மாணவர்கள் அந்த பள்ளிகளுக்கு முடிந்த உதவிகளை வழங்க வேண்டும். அதற்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட இருக்கிறது என்றார்.
திமுக தலைவரும் மறைந்த முதலமைச்சருமான கருணாநிதியின் மகனான ஸ்டாலின், 1953ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி பிறந்தார், அவருக்கு சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் பெயர் சூட்டப்பட்டது.
கடந்த காலங்களில் மேயர், சட்டமன்ற உறுப்பினர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புகளில் பள்ளியின் ரியூனியன் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின், இப்போது முதலமைச்சராகவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“