/tamil-ie/media/media_files/uploads/2018/03/dmk-meeting..jpg)
MK Stalin, Meeting, Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary
மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் ஆய்வில் பல ஆலோசனைகளை கட்சி நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். அதில் ஒன்று, ‘உதயநிதிக்கு இளைஞர் அணி பதவி கொடுங்கள்’ என்பது!
மு.க.ஸ்டாலின், திமுக செயல் தலைவராக கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். இதன் ஒரு கட்டமாக மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். நேற்று (மார்ச் 9) கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகளையும், இன்று (மார்ச் 10) திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளையும் ஸ்டாலின் சந்தித்தார்.
மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலில் ஊராட்சி, வார்டு அளவிலான நிர்வாகிகளையும், பிறகு ஒன்றிய, பேரூர்,நகர நிர்வாகிகளையும், தொடர்ந்து அணிச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளையும் சந்திக்கிறார். இதில் 3-வது அமர்வில்தான் மாவட்டச் செயலாளர் அனுமதிக்கப்படுகிறார்.
மு.க.ஸ்டாலினிடம் வெளிப்படையாக எந்தப் புகாரையும் தெரிவிக்க கட்சியினருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எனினும் பெரும்பாலான நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர் மூலமாகவே அழைத்து வரப்படுவதால், மா.செ.க்கு எதிராக மூச்சு விடவே பயப்படுகிறார்கள். குறிப்பிட்ட நிர்வாகிகள் சிலர், ‘கடந்த ஓராண்டாக திமுக இளைஞரணியின் செயல்பாடு இல்லை. எனவே உதயநிதியை இளைஞரணி பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும்’ என கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
திமுக இளைஞரணி அலுவலக பெயரை தன் பெயரில் தாங்கிய நிர்வாகி ஒருவர்தான் நிர்வாகிகள் சிலரை தனியே அழைத்து, உதயநிதி தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தும்படி எடுத்துக் கொடுக்கிறாராம். ஸ்டாலினின் விருப்பத்திற்கேற்ப இது நடப்பதாகவும், எனவே எந்த நேரமும் உதயநிதி பொறுப்புக்கு வரலாம் என்றும் பேசப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் நடத்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கட்சியினருடன் ஆய்வு முடிந்த பிறகு ஒவ்வொரு நிர்வாகியையும் தனது அருகில் நிறுத்தி தோள் மீது கை போட்டு போட்டோ எடுத்துக் கொள்கிறார் ஸ்டாலின். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 300 நிர்வாகிகள் இப்படி ஸ்டாலினுடன் போட்டோ எடுக்கிறார்கள்.
‘இந்த போட்டோ உங்க வீடு தேடி வரும்’ என அந்த நிர்வாகிகளுக்கு ஸ்டாலினே கனிவாக உத்தரவாதம் கொடுக்கிறார். அதாவது, ஒவ்வொரு நிர்வாகியிடமும் கையெழுத்து பெற்றுக்கொண்டு போட்டோவை ஒப்படைக்கும் பொறுப்பை மாவட்டச் செயலாளர்களிடம் விட்டிருக்கிறார் ஸ்டாலின்.
நிர்வாகிகள் மத்தியில் ஸ்டாலின் பேசுகையில், ‘இப்போதைய ஆட்சியை கவிழ்த்துவிட்டு, இந்த எம்.எல்.ஏ.க்களை வைத்து நாம் ஆட்சி நடத்த முடியாது. இவர்களுக்கு ‘கட்டிங்’ கொடுத்து ஆட்சியை தக்க வைத்திருக்கிறார்கள். அதை நாம் செய்தால், மக்கள் அதிருப்தி அடைவார்கள்.
இனி நாம் ஆட்சிக்கு வந்தால், 30 ஆண்டுகளுக்கு எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத அளவுக்கு இருக்க வேண்டும். ஜனநாயக முறையில் மக்களை சந்தித்து வெற்றி பெற்றால்தான் அது சாத்தியம். இன்னும் 10 நாளில் நீதிமன்ற வழக்குகளில் ஒரு முடிவு வரும். பிறகு ஜனாதிபதி ஆட்சி 6 மாதங்கள் நடைபெறலாம். தேர்தலை சந்திக்க நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும்’ என்றே பெரும்பாலான கூட்டங்களில் ஸ்டாலின் பேசுகிறார்.
ஸ்டாலினின் அனுசரணையான அணுகுமுறை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளை சற்று உற்சாகப்படுத்தவே செய்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.