காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதிக்கு அன்பு கடிதம் எழுதி நெகிழ வைத்த 8 வயது சிறுமியை ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நாளில் இருந்தே பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவர் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்களும் கருணாநிதியை சந்திக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தனர்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தி.மு.க தொண்டர்கள் மருத்துவமனை வாசலில் தொடர்ந்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், மூன்றாம் வகுப்பு பயிலும் மிச்செல் மிராக்ளின் என்ற சிறுமி, கருணாநிதி உடல்நலம் பெறவேண்டி சமீபத்தில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
August 2018
அவர், ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தில், `அன்புள்ள டாக்டர் கருணாநிதி தாத்தாவுக்கு, எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல்போனதாகக் கேள்விப்பட்டபோது, எனக்கு அழுகையாக வந்தது. அன்று இரவு தூங்குவதற்கு முன்னர் உங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். நான் பிரார்த்தனை செய்ததால், உங்களுக்கு உடல்நிலை சரியாகிவிட்டதாக மறுநாள் காலை என் அம்மா சொன்னார். அதைக் கேட்டதும் மகிழ்ச்சியாகப் பள்ளிக்குச் சென்றேன்’ என்று எழுதியிருந்தார்.
ஸ்டாலின் சர்ப்ரைஸ் விசிட்:
இந்தக் கடிதம், தி.மு.க ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது. சமூகவலைத்தளங்களிலும் வைரலாகியது. இந்நிலையில் கடிதம் எழுதிய சிறுமியை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளார். சிறுமி மிச்செல் மிராக்ளினின் வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் அவரிடம் உரையாடினார். சிறுமியிடம் `கலைஞரை எப்படித் தெரியும்? நான் யாரெனெத் தெரிகிறதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த சிறுமி ”செய்திகளில் உங்களையும், கருணாநிதியையும் பார்ப்பேன்” எனக் கூறி ஸ்டாலினை அசர வைத்தார்.
இதேபோல, அவர் படிப்பு சம்பந்தமாகவும் கேள்விகளைக் கேட்ட ஸ்டாலினிடம், கருணாநிதி தாத்தா வீட்டுக்கு வந்தவுடன் கூப்பிடுங்க, நான் பார்க்க வேண்டும்" எனக் கூறினார். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.