கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்: கருணாநிதி பாணியில் முதல் முறையாக தொண்டர்கள் சந்திப்பு

கோபாலபுரம் இல்லம், திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த இடம்!

கோபாலபுரம் இல்லத்தில் முதல் முறையாக கருணாநிதி பாணியில் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களை சந்திக்கிறார். இதனால் திமுக.வினர் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

கோபாலபுரம் இல்லம், திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த இடம்! அரை நூற்றாண்டு காலமாக திமுக.வை கட்டிக்காத்த கருணாநிதி, தனது முக்கிய அரசியல் நடவடிக்கைகளை இங்கிருந்தே ஆலோசித்து முன்னெடுத்தார்.

கோபாலபுரம் இல்லத்தில் முன் அனுமதி பெற்று வருகிறவர்களை மட்டுமல்லாது, திடீரென கிளம்பி வருகிற சாதாரண தொண்டர்களையும்கூட கருணாநிதி சந்திப்பது வழக்கம்! கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டதில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நடைமுறை இல்லை.

கருணாநிதி மறைவுக்கு பிறகு கோபாலபுரம் இல்லம் இன்னும் களை இழந்தது. தனது மனைவி தயாளு அம்மாள் காலத்திற்கு பிறகு கோபாலபுரம் இல்லம், அறக்கட்டளை சார்பில் மருத்துவமனையாக்கப் படும் என ஏற்கனவே கருணாநிதி உயில் எழுதி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் தயாளு அம்மாள் தற்போது அங்கு வசித்து வரும் நிலையில் கருணாநிதி பாணியில் அங்கேயே தொண்டர்களை சந்திக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறார். திமுக கொள்கைபரப்பு செயலாளர் ஆ.ராசா, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், திமுக சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் ஆகியோரை நேற்று கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார் மு.க.ஸ்டாலின். பழு தூக்குதல் உள்ளிட்ட போட்டிகளில் சாதனை படைத்த வீரர்கள் சிலரையும் அங்கு சந்தித்து வாழ்த்து கூறினார். எனவே கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலினின் பார்வையாளர்கள் சந்திப்பு நேற்றே தொடங்கிவிட்டது.

மு.க.ஸ்டாலின் சென்னையில் இருக்கும் நாட்களில் பெரும்பாலும் இதை கடைபிடிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close