தமிழ்நாட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தவறான வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சந்தித்து பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தூத்துக்குடி விமான நிலையம் சென்றார். விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் காவல்கிணறு பகுதியில் உள்ள கையுறை தயாரிப்பு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சந்தித்தபோது அவர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “தமிழ்நாட்டில் பணியாற்றுவதில் உங்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது. உங்களது பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது. அதிகாரிகள் உங்களுக்கு துணை நிற்பார்கள்” என்று உறுதி அளித்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பேசிய புலம்பெயர் தொழிலாளர்கள், “தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இதே பாதுகாப்பை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கோரிக்கையைக் கேட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடான சந்திப்பு குறித்து மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “காவல்கிணறு பகுதியில் கையுறை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களுடன் உரையாடினேன். அவர்களிடம் சகோதரவுணர்வும் தமிழ்நாட்டில் பணிபுரிகிறோம் என்ற பாதுகாப்புணர்வுமே மேலோங்கியுள்ளது. இதுதான் தமிழ்நாடு. உழைப்பவர்க்கு என்றும் உறுதுணையாக இருப்பதே நம் பண்பாடு.” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரப்பப்பட்டு வரும் சூழ்நிலையி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகக் கூறியது கவனம் பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"