திருமுருகன் காந்தி : சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
திருமுருகன் காந்தி, ஸ்டாலின் சந்திப்பு:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து ஐ.நா. சபையில் பேசியதற்காக, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி நாடு திரும்பியதும் பெங்களூர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி 2 மாதங்களுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்த திருமுருகன் காந்திக்கு கடுமையான உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் திருமுருகன் காந்திக்கு வயிற்று வலி, வாயு பிரச்னை, மூச்சுத் திணறல், அல்சர் போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகள் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து கடந்த 1-ம் தேதி எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றங்கள் அவருக்கு ஜாமீன் வழங்கின. தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை இன்று (4.10.18) காலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.