அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

1058 பேரின் தேர்வுத்தாள்களிலும் முறைகேடு நடைபெற்றிருக்கிறது என்றால் மட்டுமே ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்வது முறையாக இருக்கும்

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த செப்டம்பர் 16 ஆம் நாளன்று நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, மதிப்பெண் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருப்பது, அதிமுக ஆட்சியில் எந்தளவிற்கு பணியாளர் நியமனங்களில் ஊழல் மலிந்து இருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. விடைத்தாள்களில் மதிப்பெண்கள் திருத்தப்பட்டு இருக்கின்ற மிகப்பெரிய மோசடி, ஏதோ ஒருசில ஊழியர்கள் மட்டத்தில் மட்டுமே நடைபெற்று விட்டது என்று சொல்வது நம்பக்கூடியதாக இல்லை. காரணம், தேர்வு முடிவுகளில் 130, 139, 146, 149 என அதிக மதிப்பெண் எடுத்து, சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்களின் மதிப்பெண்கள் 45, 48, 54 என குறைந்து இருப்பதும், ஏறத்தாழ 200 பேரின் மதிப்பெண்களில் நடைபெற்றுள்ள அதிர்ச்சியளிக்கும் குளறுபடிகளும் வெளிப்பட்டு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஊழல் சந்தி சிரித்தது.

லஞ்சம் கொடுத்து விரிவுரையாளர் பதவி பெற முயன்ற, இந்த மிகப்பெரிய ஊழல் வழக்கினை, சி.பி.சி.ஐ.டி. பிரிவு விசாரணைக்கோ அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கோ கடைசிவரை மாற்றவில்லை. சென்னை மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய குற்றப்பிரிவு மட்டுமே விசாரணை நடத்தி, கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்கள் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்களே தவிர, மாபெரும் மதிப்பெண் ஊழலுக்குத் துணை போன உயரதிகாரிகளையோ, அதில் சம்பந்தப்பட்ட முக்கிய நிறுவனங்களையோ அல்லது ஆளுங்கட்சியினரையோ தொடவில்லை.

“உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அறிவித்திருந்தாலும், இப்போது கீழ்மட்ட அளவிலான கைதுடன், ஆசிரியர் தேர்வு வாரிய முறைகேடு மூடிமறைக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் நேர்மையான முறையில் தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளது. 1058  விரிவுரையாளர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்வில், 1.33 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வெழுதியுள்ள நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்களின் தேர்வை ரத்து செய்வதை தவிர்த்துவிட்டு, நேர்மையாக தேர்வு எழுதியவர்களின் முடிவுகளை மட்டும் வெளியிட்டிருக்க வேண்டிய ஆசிரியர் தேர்வு வாரியம், இப்படி ஒட்டுமொத்தமாக தேர்வை ரத்து செய்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

156-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளும் வகையில், சி.பி.ஐ. வசம் இந்த வழக்கு விசாரணையை ஒப்படைக்காமல், சென்னை மாநகர போலீஸிடமே விட்டு வைத்தது ஏன்? கீழ்மட்டத்தில் சிக்கியவர்களை மட்டும் குண்டர் சட்டத்தில் அடைத்துக் கொண்டிருக்கும் மர்மமும் இதுவரை புரியவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளே கிடைக்காத இந்தச் சூழ்நிலையில், நேர்மையாக தேர்வெழுதி விட்டு, காத்திருந்த இளைஞர்களின் கனவுகள், தேர்வு ரத்து செய்யப்படுவதன் மூலமாக ஒட்டுமொத்தமாக கலைக்கப்படுவது மிகவும் கொடுமையானது.

இதனால் இளைஞர்களின் எதிர்காலமே இருள் சூழ்ந்து விடுவது மட்டுமின்றி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்து பணியாளர் தேர்வு ஆணையங்கள் மற்றும் வாரியங்களிலும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி விடும் ஆபத்து இருக்கிறது. 1058 பேரின் தேர்வுத்தாள்களிலும் முறைகேடு நடைபெற்றிருக்கிறது என்றால் மட்டுமே ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்வது முறையாக இருக்கும். ஆகவே, 156 பேருடைய தேர்வுத்தாளில்தான் முறைகேடா அல்லது 1058 பதவிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட அனைத்து தேர்வுத்தாளிலும் முறைகேடு நடந்திருக்கிறதா என்பதை அதிமுக அரசு உடனே வெளியிட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், அரசு பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்து நியமனங்களிலும் அதிமுக ஆட்சியில் வெளிப்படைத்தன்மை குறைந்து விட்டது என்பதும், சத்துணவு அமைப்பாளர் பதவியிலிருந்து க்ரூப் – 1 பதவிக்கான தேர்வு வரை, அதிமுக ஆட்சியில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுவது அவ்வப்போது செய்திகளாகி, இளைஞர்களை பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்குகின்றன என்பதை மறந்து விட முடியாது.

ஆகவே, ஒட்டுமொத்தமாக பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கான தேர்வுகளை ரத்து செய்வதற்கு பதிலாக, முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் நியமனங்களை மட்டும் ரத்து செய்துவிட்டு, நேர்மையாக தேர்வு எழுதியவர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற அதிமுக அரசு முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேபோல், சென்னை மாநகர காவல்துறையிடம் உள்ள மிகப்பெரிய இந்த ஊழல் வழக்கை, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி, இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு வேலை வாய்ப்பில் விபரீத ஊழலுக்கு துணை போன அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close