'ஸ்டாலினுடன் பேச விடவில்லை… இறந்து போக நினைக்கிறேன்' முகநூலில் நெல்லை கண்ணன் ஷாக்
79 வயதுக் கிழவன் நொந்து போயுள்ளேன். யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை என நெல்லை கண்ணன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்க்கடல் என அழைக்கப்படும் நெல்லை கண்ணன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவர். ஆரம்பக்காலத்தில் கருணாநிதி எதிர்ப்பு கொள்கை கொண்ட நெல்லை கண்ணன், அவருக்கு எதிராக பல இடங்களில் பேசியுள்ளார். 1996இல் சேப்பாக்கம் தொகுதியில் அன்றைய திமுக தலைவர் மு. கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர். ஆனால், அண்மைக்காலமாக ஸ்டாலினையும், திமுகவையும் பாராட்டி பேசி வருகிறார்.
Advertisment
இந்நிலையில் நெல்லை கண்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில், 79 வயதுக் கிழவன் நொந்து போயுள்ளேன். யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை என பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, வேறு வழியில்லை எழுத வேண்டியிருக்கின்றது. மிகச் சிறப்பான முதல்வர் என உலகம் போற்றுகின்றது. அதனை யாரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.
விருது வழங்கும் விழாவில் என்னை தானே பிடித்து தன் பக்கத்தில் அமர வைத்து என்னிடம் காட்டிய தாயுள்ளத்தை உயிர் உள்ள வரை மறக்க மாட்டேன். அன்று என் கரங்களைப் பற்றி தன் மடியில் வைத்துக் கொண்டு, 'இனி நீங்கள் கண் கலங்கி நான் பார்க்கக் கூடாது' என்றார். இனி நான் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வேன். என்னை நீங்கள் எப்போதும் அழைக்கலாம் என்றார். இன்று ஒரு கடிதத்திற்கும் கூட விடை இல்லை. நேரில் பேச அனுமதிக்கவில்லை.
79 வயதுக் கிழவன் நொந்து போயுள்ளேன். யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை. அவரது உதவியாளர் வெண்ணந்தூர் தினேஷ் அனுமதிக்கவே மறுக்கிறார். இதனாலேயே இறந்து போகலாம் எனக் கருதுகின்றேன். மரணம் தானே உறுதி" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவு திமுக வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், விரைவில் நெல்லை கண்ணனை, ஸ்டாலின் அழைத்து பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil