கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த வழக்கை 15 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கே 13 வயது மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன், பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியைகள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, அந்த பள்ளியில் என்.சி.சி முகாம் நடத்துவதற்கு எந்த அனுமதியும் அளிக்கப்படவில்லை என்றும் என்.சி.சி-க்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மாநில என்.சி.சி நிர்வாகம் விளக்கம் அளித்தது. இதனால், இந்த பள்ளியில் நடத்தப்பட்டது போலி என்.சி.சி முகாம் என்பது தெரியவந்தது.
மேலும், இந்த தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட என்.சி.சி முகாம் போல, வேறு பள்ளிகளிலும் என்.சி.சி முகாம் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இது தொடர்பாக, காவல்துறையும், பள்ளிக் கல்வித்துறை சார்பிலும் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றம் செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த வழக்கை 15 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த வழக்கை 15 நாட்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான சிவராமன் மற்றும் அவருக்கு உதவியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“