மு.க.ஸ்டாலின் நியமித்த 12 பேர் படை: சீனியர்கள் ஷாக்!

மு.க.ஸ்டாலின் லண்டன் சென்றுவிட்டாலும், அவர் அமைத்துச் சென்ற 12 பேர் குழு பற்றிய பேச்சே கட்சியில் ஹைலைட்டாக இருக்கிறது.

திமுக பூத் கமிட்டி பணிக்கு 12 எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்களை தவிர்த்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தலும் இணைந்து வரலாம் என்கிற எதிர்பார்ப்பில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன.

திராவிட முன்னேற்றக் கழகம் மாநிலம் முழுவதும் பூத் கமிட்டி பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது. பூத் கமிட்டி பணிகளுக்காக 12 எம்.எல்.ஏ.க்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்திருக்கிறார்.

திமுக பூத் கமிட்டி பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பெயர்கள் வருமாறு:

1. அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திருவெறும்பூர்).

2. இ.கருணாநிதி (பல்லாவரம்)

3. டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி)

4. எஸ்.ஆஸ்டின் (கன்னியாகுமரி)

5. வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்)

6. கோவி செழியன் (திருவிடைமருதூர்)

7. எழிலரசன் (காஞ்சீபுரம்)

8. இன்பசேகரன் (பென்னாகரம்)

9. மு.பெ.கிரி (செங்கம்)

10. ஈஸ்வரப்பன் (ஆற்காடு)

11. தாயகம் கவி (திரு.வி.க.நகர்)

12. ரவிச்சந்திரன் (எழும்பூர்)

மு.க.ஸ்டாலின் லண்டன் செல்வதற்கு முன்பு இவர்கள் 12 பேரையும் தனது இல்லத்திற்கு அழைத்தார். அப்போது, ‘சீனியர்களைக் கூட ஈடுபடுத்தாமல், முக்கியமான ஒரு பணியை உங்களிடம் ஒப்படைக்க இருக்கிறேன். எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். மாநிலம் முழுவதும் திமுக பூத் கமிட்டிகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு உங்களிடம் தரப்படுகிறது’ என கூறியிருக்கிறார்.

திமுக.வின் அமைப்பு ரீதியான 65 மாவட்டங்களை 6 மண்டலமாக ஸ்டாலின் பிரித்திருக்கிறார். ஒவ்வொரு மண்டலத்திற்கும் மேற்படி 12 எம்.எல்.ஏ.க்களில் இருந்து தலா இருவர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த அறிவிப்பை திமுக அதிகாரபூர்வமாக செய்யவில்லை. ஆனால் 12 எம்.எல்.ஏ.க்களும் 6 குழுக்களாக பிரிந்து அந்தத்த குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் பூத் கமிட்டி வேலையை ஆரம்பித்துவிட்டனர்.
உதாரணத்திற்கு சென்னை உள்ளிட்ட வடக்கு மண்டலத்திற்கு கோவி செழியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் பொறுப்பாளர்கள்! இவர்கள் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பூத் கமிட்டி பணிகளை துரிதப்படுத்துவது சம்பந்தமாக பேசினார்கள். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திலும் இதேபோல செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். திங்கட்கிழமை சென்னை தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அறிவுரை வழங்க இருக்கிறார்கள்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தெற்கு மண்டலத்திற்கு இ.கருணாநிதி, மு.பெ.கிரி ஆகியோர் பொறுப்பாளர்கள்! தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 65,000 பூத்களுக்கும் தலா 20 பேர் கொண்ட பூத் கமிட்டியை உறுதி செய்வதுதான் இவர்களது பணி!

திமுக அமைக்கும் 20 பேர் கொண்ட பூத் கமிட்டியில் 9 பேர் கட்சியின் பிரதான அமைப்பைச் சேர்ந்தவர்களாகவும், 5 பேர் இளைஞரணியை சேர்ந்தவர்களாகவும், 5 பேர் மகளிரணியை சேர்ந்தவர்களாகவும், ஒருவர் தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

பூத் வாரியாக தொலைபேசி எண் சகிதமாக இவர்களின் பட்டியலை தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும். முறையாக பூத் கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை மேற்படி குழுவினரே தொலைபேசி மூலமாக பூத் கமிட்டி உறுப்பினர்களை தொடர்புகொண்டு விசாரிப்பார்கள்.

அண்மையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சென்னைக்கு வருகை தந்து, பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்களை சந்தித்தார். வருகிற அக்டோபருக்குள் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் தலா 2 பொறுப்பாளர்களை அடையாளம் காணும்படி உத்தரவிட்டுச் சென்றிருக்கிறார்.

அமித்ஷாவின் வருகை தேர்தலுக்கான மணியோசை என்பதை புரிந்துகொண்டே திமுக தனது பணியை முடுக்கி விட்டிருப்பதாக கருதப்படுகிறது. இன்னொருபுறம் அரசியலுக்கு வரவிருக்கும் நடிகர் ரஜினிகாந்தும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் முழு மூச்சாக இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே திமுக.வில் 2-ம் கட்டத் தலைவர்களான கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, ஐ.பெரியசாமி உள்ளிட்டவர்களிடம் ஒப்படைக்காமல் இதர எம்.எல்.ஏ.க்களிடம் ஒப்படைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2-ம் கட்டத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமையை இது உருவாக்கும் என அவர்கள் தரப்பில் அதிர்ச்சி ஆகியிருக்கிறார்கள்.

வேறு சிலரோ, ‘ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களிடமே இந்தப் பொறுப்பை ஏன் ஒப்படைக்க வேண்டும்? எம்.எல்.ஏ.க்களை அவரவர் தொகுதிகளில் கவனம் செலுத்த கூறிவிட்டு, எந்தப் பதவியும் இல்லாமல் கட்சியில் துடிப்பாக செயல்படுகிறவர்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கலாம்’ என்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின் லண்டன் சென்றுவிட்டாலும், அவர் அமைத்துச் சென்ற 12 பேர் குழு பற்றிய பேச்சே கட்சியில் ஹைலைட்டாக இருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close