இனியும் தாமதம் வேண்டாம் முதல்வரே... உடனே முடிவெடுங்கள்! - முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாக பட்ஜெட் கூட்டத்திற்கு முன்பே கூட்டிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்

காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு குறித்து, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறுவார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தங்களிடம் தொலைபேசி மூலம் பேசியபோதும், 22.02.2018 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

மத்திய அரசு காவிரி விவகாரத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதால், தமிழக அரசின் நிலைப்பாட்டினை மேலும் தெளிவுபடுத்திடும் பொருட்டு, சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று தங்களை 03-03-2018 அன்று நேரில் சந்தித்த போதும் வலியுறுத்தினேன்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு மதிப்பளித்திடும் வகையில், அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்தித்திட மறுத்துள்ள பிரதமர், ‘மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தியுங்கள்’, என்று கூறியதாக என்னிடம் தெரிவித்தீர்கள். ஆனால், இப்போது அதற்கும் வாய்ப்பு மூடப்பட்டுவிட்டது. இன்று அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை – கண் துடைப்பு நாடகத்தை கர்நாடகத் தேர்தல் லாபத்திற்காக, மத்திய அரசு நடத்தியுள்ளது.

பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்பது, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் என்றாகி, இன்றைக்கு நீர்வளத்துறைச் செயலாளரை மட்டுமே சந்திக்க முடியும் என்று, மிக முக்கியமான இந்தப் பிரச்சினையில் ஜனநாயக ரீதியாக அவசியம் அளிக்க வேண்டிய வாய்ப்பினைக் குறுக்கியும் சுருக்கியும், தமிழகத்தின் ஒட்டு மொத்த உணர்வை மத்திய அரசு அவமதித்துள்ளது. மத்தியில் உள்ள பாஜக அரசு அனைத்துக் கட்சித் தலைவர்களைச் சந்திக்க விரும்பாதது மக்களாட்சி நெறிமுறைகளுக்கு முரணானது. மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வராதது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது மட்டுமல்லாமல், உச்சநீதிமன்ற அவமதிப்பாகவும் ஆகிவிடும் ஆபத்து ஏற்பட்டு விடும்.

“காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இல்லை” என்ற மத்திய நீர்வளத் துறைச் செயலாளரின் பிழையான வாதத்தை தமிழக தலைமைச் செயலாளர் எதிர்த்தாரா, விளக்கம் அளித்தாரா என்பது தெளிவாகவில்லை. முதலமைச்சரான தாங்களும் தவறான இந்தக் கருத்துக்கு, இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆகவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், ‘ஆலோசனை – கருத்து கேட்பு’ என கர்நாடகத் தேர்தலுக்காகக் கண்துடைப்பு நாடகம் நடத்தும் மத்திய அரசைக் கண்டித்து, மேலும் தாமதப்படுத்தாமல் வாரியம் அமைப்பதற்குத் தேவையான அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசரமும் அவசியமுமாகிறது.

எனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் – பொது மக்களின் குடிநீர்த் தேவையையும் பாதுகாத்திட, தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாக பட்ஜெட் கூட்டத்திற்கு முன்பே கூட்டிட வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close