“மக்கள் படை திரளட்டும்; மத்திய – மாநில அரசுகள் நடுங்கட்டும்!” – தொண்டர்களை அழைக்கும் ஸ்டாலின்

தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, திமுக நடத்தும் முழு அடைப்பு போராட்டம் குறித்து பரப்புரை செய்ய தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் வஞ்சகத்தையும், மாநில அரசின் அடிமைத்தனத்தையும் கண்டு பொதுமக்கள் கடும் சினம் கொண்டுள்ளதை எந்தப்பக்கம் திரும்பினாலும் உணர முடிகிறது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தி, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறலாமா என மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை மாற்றாந்தாய் போக்குடன் நடத்தி வருகிறது. 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்தக்கெடு முடியும்வரை வாரியத்தை அமைக்க முன்வராமல், கெடு தேதி நிறைவடைந்தபிறகு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, வாரியம் என்ற வார்த்தைக்குப் பதில் “ஸ்கீம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு என்ன பொருள் எனக் கேட்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமையுடன் சித்து விளையாட்டு நடத்துகிறது.

இதற்கு முன், பலமுறை உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் எனத் தெளிவாக எடுத்துக்கூறி வாதாடியிருக்கும் மத்திய அரசு, இந்தமுறை ஸ்கீம் என்ற வார்த்தையைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு இருப்பதே தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிரான ஸ்கீமாகத்தான் தெரிகிறது. மத்திய அரசின் இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து நின்று, காவிரியில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்ட வேண்டிய அ.தி.மு.க. அரசு, மத்திய அரசு மனு தாக்கல் செய்யும் வரை காத்திருந்து, அதன்பின் பெயரளவுக்கு நீதிமன்றம் அவமதிப்பு வழக்குத் தொடுத்துள்ளது. அதில்கூட அழுத்தமான காரணங்களை எடுத்து வைக்க மாநில ஆட்சியாளர்களுக்கு தெம்பும் திராணியுமில்லை.

வஞ்சகத்தை முறியடித்து உரிமையை நிலைநாட்டி, நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் காவிரி டெல்டா பகுதிகள் மீண்டும் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்திட வேண்டும் என்ற நோக்கத்துடன், கழக தலைமைச் செயற்குழு கூட்டம் கடந்த 30ந் தேதி கூடியது. அதில், சென்னைக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்துவதுடன், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தும் வகையில், அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்துவது என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

அதன்படி, ஏப்ரல் 1ந் தேதியன்று, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில்,  மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பது குறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

பா.ஜ.க. அரசு, இப்போது “விளக்கம் கேட்கிறோம்” என்ற பெயரில் “மூன்றுமாத கால அவகாசம்” கோரியும், “நடுவர் மன்றம் உத்தரவிட்ட காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மாறாக வேறு ஒரு ஸ்கீமை மத்திய அரசு உருவாக்கலாமா” என்றும், தமிழகத்தின் காவிரி உரிமையை அடியோடு நீர்த்துப்போக வைக்கும் விளக்கத்தையும் உச்ச நீதிமன்றத்திடம் கேட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்புக்குள்ளாக்கும் இப்படியொரு அசாதாரண நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முன்னெடுக்க வேண்டிய தொடர் போராட்டங்கள் குறித்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானத்தில் விளக்கப்பட்டுள்ளது.

“முதல்கட்டமாக வருகின்ற 2018, ஏப்ரல் 5ஆம் தேதியன்று, மாநிலம் தழுவிய “பொது வேலை நிறுத்தம்” நடத்துவது எனவும், மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் இந்த பொதுவேலை நிறுத்தப்போராட்டத்தில், அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், தொழிற் சங்கங்கள், மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பேராதரவு தந்து, நமது மாநில வாழ்வாதார பிரச்சினைக்குத் துணை நிற்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன்; அடுத்த கட்டமாக, காவிரி டெல்டா பகுதியிலிருந்து தொடங்கி, அனைத்து கட்சி தலைவர்களும் – அனைத்துத் தரப்பினரும் பெருந்திரளாக பங்கெடுத்து, தமிழக ஆளுநர் மாளிகை நோக்கி, “காவிரி உரிமை மீட்புப் பயணம்” மேற்கொள்வதென்றும்; தமிழ்நாட்டிற்கு பிரதமர் வரும்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், வேண்டுமென்றே நடுவர் மன்றம் அமைக்காமல் இருக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, அனைத்து கட்சிகள் சார்பில், பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், “கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்” நடத்துவது என்றும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானிக்கிறது;

இது, கழகத்தின் தனிப்பட்ட போராட்டமல்ல, தமிழக மக்களின் வாழ்வுரிமைப் போர். அதனால், ஏப்ரல் 5ந் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கானப் பரப்புரையை விரைந்து மேற்கொண்டு அதில் விவசாயிகள், தொழிற்சங்கத்தினர், மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் என ஒட்டுமொத்த மக்கள் படை கிளர்ந்தெழும் வகையில், அனைவரையும் ஒருங்கிணைத்தும், தோழமைக் கட்சியினர் – பொதுநல அமைப்பினர் ஆகியோருடன் கரம் கோர்த்தும், முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிபெறச் செய்து மத்திய – மாநில அரசுகளின் முகமூடியைக் கிழித்தெறிந்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mk stalin penned letter to dmk party members

Next Story
காவிரி விவகாரம்: போராட்டக்களமாக மாறிய தமிழகம்.KOVAI ROAD ROKO
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com