/tamil-ie/media/media_files/uploads/2018/03/a708.jpg)
"அம்பேத்கர் சட்டப் பல்கலையின் துணைவேந்தராக வெளி மாநிலத்தை சேர்ந்த - ஊழல் கறைபடிந்த - சங் பரிவார தத்துவங்களை பரப்பும் ஒருவரை - விதிகளை மீறி நியமனம் செய்திருப்பதை மாண்புமிகு ஆளுநர் திரும்பப் பெறவேண்டும்" என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில், "தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு இந்துத்வாவின் சீடரான, திரு. தம்மா சூர்ய நாராயண சாஸ்திரியை துணைவேந்தராக நியமித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு ஆளுநர் பன்வரிலால் புரோகித் அவர்கள், தமிழக ஆளுநராக பொறுப்பேற்றபோது, “ஆளுநர் மாளிகை அரசியலுக்கு பயன்படுத்தப்படமாட்டாது", என்று பேட்டியளித்தார். இந்நிலையில் சங் பரிவார் தத்துவங்களை, பொது ஊழியராக இருந்து பரப்பிய ஒருவரை, மதச்சார்பின்மைத் தத்துவத்தில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்த அண்ணல் டாக்டர் அம்பேத்கர் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக நியமித்திருப்பது பெரிய முரண்பாடு. மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சட்டம் 1996ல் குறிப்பிட்டுள்ள விதி 12(1) மற்றும் 12(2) படி, சர்ச் கமிட்டி இறுதிசெய்து கொடுக்கும் மூன்று பேரில் ஒருவரைத்தான் மாண்புமிகு ஆளுநர், வேந்தர் என்றமுறையில் நியமிக்க வேண்டும் என்று கூறுகிறது. அதுமட்டுமின்றி, ஒருவேளை சர்ச் கமிட்டி அளித்திருக்கும் மூன்று பெயர்களில் மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், அவர் முன்பு இருக்கும் ஒரே வழி, புதிதாக ஒரு சர்ச் கமிட்டியை நியமிக்க உத்தரவிடுவதுதானே தவிர, சர்ச் கமிட்டி பரிந்துரைத்த மூன்று பேரில் இல்லாத ஒருவரை துணைவேந்தராக நியமிப்பது அல்ல.
பல்கலைக்கழக வேந்தர் என்றமுறையில் மாண்புமிகு ஆளுநர் அவர்களே பல்கலைக்கழக சட்டத்தை மீறியிருப்பது ஆரோக்கியமான செயல்பாடு அல்ல. அதிலும் தி.மு.க. ஆட்சி இருந்தபோது, இதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான திரு. சூரிய நாராயண சாஸ்திரியை அதே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்திருப்பது, “சட்டத்தின் ஆட்சியை” மீறிய எதேச்சாதிகாரமான நடவடிக்கையாக அமைந்து, மாண்புமிகு ஆளுநரின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
சட்டப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் எண்ணற்ற இளைஞர்கள்தான் இந்த நாட்டின் நீதிபதிகளாகவும், பிரபல வழக்கறிஞர்களாகவும் உருவாகிறார்கள். அப்படிப்பட்ட புகழ்மிக்க ஒரு பல்கலைக்கழகத்திலேயே, ‘ஒழுங்கு நடவடிக்கைக்கு’ உள்ளானவரை, சங் பரிவார் நிழலில் வாழ்ந்து வந்த ஒருவரை, துணைவேந்தராக நியமிப்பது சட்டப்த்தின் ஆட்சிமீது பெருத்த அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதை மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஆகவே, ஆளுநர் மாளிகையை அரசியலுக்குப் பயன்படுத்த மாட்டேன் என்ற வாக்குறுதியை நிலைநாட்ட, சங் பரிவார அமைப்புகளுடன் தொடர்புள்ள, ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகி, கறைபடிந்திருக்கும் திரு. தம்ம சூர்ய நாராயண சாஸ்திரியை டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக நியமித்திருப்பதைத் திரும்பப் பெறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் திறமையானவர்கள் பலர் இந்தப் பதவிக்கு தகுதியானவர்களாக இருக்கும்போது, தமிழகத்திலிருந்து துணைவேந்தர் பதவிக்கு தகுதியான பலர் விண்ணப்பித்துள்ள நிலையில், இப்படி துணைவேந்தரை வெளிமாநில கல்லூரிகளில் இருந்து இறக்குமதி செய்து, தமிழகத்தை இழிவுபடுத்துவதைக் கட்டாயம் தவிர்க்கும்படியும் மாண்புமிகு ஆளுநர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தனது அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.