Advertisment

அப்பாயிண்ட்மென்ட் வேண்டும்: பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாட்டு மக்களை இந்த பேட்டி பெரிதும் கவலை கொள்ள வைத்தது

author-image
WebDesk
Apr 17, 2018 14:30 IST
அப்பாயிண்ட்மென்ட் வேண்டும்: பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கி தர கேட்டு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

Advertisment

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

காவிரி நதி நீர் இறுதி தீர்ப்பை செயல்படுத்தாத காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் நாட்டு மக்களின் சார்பாக இந்த கடிதத்தை பிரதமருக்கு எழுதுகிறேன்.

தமிழ்நாட்டின் உணர்வுகளை தங்களிடம் நேரடியாக தெரிவித்து, காவிரி நதி நீர் பிரச்சினையில் தாங்கள் உடனடியாக தலையிட வேண்டும் என்பதற்காக தங்களை சந்திக்க இக்கடிதம் மூலம் நேரம் கேட்கிறேன்.

5.2.2007 அன்று வெளியிடப்பட்ட “உச்சநீதிமன்ற டிகிரி” அந்தஸ்தைப் பெற்ற காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு தேவையான செயல் திட்டத்தை ஆறு வாரங்களுக்குள் உருவாக்குமாறு மத்திய அரசுக்கு 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தங்களுக்கு தெரியும்.

பல பத்தாண்டுகளாக நீடிக்கும் இந்த காவிரி நதி நீர் பிரச்சினைக்கு இறுதி தீர்வு எட்டப்படும் வகையில் அந்த தீர்ப்பு அமைந்திருந்தது.

இதைத் தொடர்ந்து உரிய காலக்கெடுவிற்கு செயல் திட்டத்தை வகுக்க மத்திய அரசை வலியுறுத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தி.மு.க. அழைப்பு விடுத்தது. மக்களின் அழுத்தத்தின் காரணமாக வேறு வழியின்றி தமிழ்நாடு அரசே 22.2.2018 அன்று அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி அதில் அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்று மூன்று முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

அவற்றில் ஒன்று பிரதமரை அனைத்துக் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவது என்பதாகும். இதைத் தொடர்ந்து 15.3.2018 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இது தமிழ்நாட்டில் உள்ள ஏழரை கோடி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தீர்மானம் என்று நாங்கள் நம்புகிறோம்.

அனைத்துக் கட்சி கூட்டத்திலும், தமிழ்நாடு சட்டமன்றத்திலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தங்களுக்கு அனுப்பப்பட்டதாக தமிழ்நாடு அரசு எங்களிடம் தெரிவித்தது. ஆனால் நிதித்துறை மத்திய இணை அமைச்சரோ “பிரதமரை அனைத்துக் கட்சி தலைவர்கள் சந்திக்க முதலமைச்சரிடம் இருந்து கடிதம் வந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை” என்று பேட்டியொன்றில் தெரிவித்தார்.

தமிழ்நாட்டு மக்களை இந்த பேட்டி பெரிதும் கவலை கொள்ள வைத்தது. இந்த தருணத்தில் 29.3.2018 அன்று உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மேலும் மூன்று மாத காலம் அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த “விளக்க மனு” அநீதியானது, அநியாயமானது மட்டுமின்றி எவ்வித காரணமும் இல்லாதது என்பதை அறிந்த தமிழ்நாட்டு மக்கள் மிகப் பெரிய கொந்தளிப்பிற்கு உள்ளானார்கள்.

தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிகளால் 1.4.2018 அன்று நடைபெற்ற சாலை மறியல், 5.4.2018 அன்று மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட முழு கடையடைப்பு, 7.4.2018 அன்று இரு கட்டங்களாக நடைபெற்று 13.4.2018 அன்று ஆளுநர் மாளிகையில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவுடன் முடிவுற்ற “காவிரி உரிமை மீட்பு நடை பயணம்” உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களும், மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களும் மாநிலம் முழுவதும் நடைபெற்றன.

உண்மையில் இன்றைய சூழ்நிலையில் மாநில அரசு தமிழ்நாட்டின் உணர்வுகளை மத்திய அரசுக்கு முறைப்படி தெரிவித்து, அழுத்தம் கொடுத்து, காவிரி உரிமைகளை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்கள் இழந்து விட்டார்கள்.

அதனால்தான் தமிழ்நாட்டில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் ஏற்படப் போகும் பேராபத்தையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழ்நாட்டில் தன்னெழுச்சியாக புறப்பட்டிருக்கும் மக்களின் உணர்வுகளையும் தங்களிடம் நேரடியாக தெரிவிப்பதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் சந்திக்க நான் நேரம் கேட்கிறேன்.

ஆகவே தமிழ்நாட்டு மக்களின் சார்பாக உணர்வுகளை தெரிவிக்க அனைத்துக் கட்சி தலைவர்களுடன் வந்து சந்திக்க நேரம் கோரும் அதே நேரத்தில் கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளை நான் தங்களிடம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

1. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள “விளக்கம் கேட்கும்” மனுவை திரும்பப் பெறுமாறு மத்திய நீர் வளத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுங்கள்.

2. மே 3 2018 அன்று வரும் வழக்கு விசாரணைக்காகவோ, கர்நாடக தேர்தலுக்காகவோ காத்திருக்காமல் உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிடுங்கள்.

3. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராகவும் அவமதிக்கும் வகையிலும் பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சரையும், மத்திய நீர் வளத்துறை செயலாளரையும் கண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

#Dmk #Cauvery Management Board
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment