DMK MK Stalin - Durga Stalin - Minster K Ponmudi Tamil News: தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி நடந்து வருகிறது. தி.மு.க அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பொது இடங்களில் பேசுவது சர்ச்சையை உருவாக்கி விடுகிறது. குறிப்பாக, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் பொதுமேடை பேச்சுக்கள் பல சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பி விடுகிறது.
சர்ச்சை பேச்சு
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அரசியல் ஆலோசனை கூறுவார் என்று அமைச்சர் பொன்முடி சமீபத்திதில் பேசியுள்ளது தி.மு.க வட்டாரத்தில் பெரும் புயலையும், புதிய சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
அண்மையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், சாந்தகுமாரி எழுதிய 'கதை சொல்லும் குறள்' என்ற நூல் வெளியீட்டு விழா, நடைபெற்றது. இந்த புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வெளியிட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய பொன்முடி திருக்குறளுக்கு, திருவள்ளுவருக்கு தி.மு.க அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டார்.
அதைத் தொடர்ந்து துர்கா ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். அப்போது அமைச்சர் பொன்முடி பேசுகையில், “மனைவி அமைவதெல்லாம் வரம். முதலவர் அரசியலுக்கும் ஆலோசனை சொல்லும் திறமைமிக்கவர்” என்று பேசினார்.
அரசியல் தலையீடு
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இருப்பதாக சமீப காலமாக விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. அமைச்சரவை மாற்றம் நடந்ததற்கு பின்னணியில் கூட இதே விமர்சனங்களே வைக்கப்பட்டன. அமைச்சரவை மாற்றம் நடைபெறுவதற்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த அமைச்சர் துரைமுருகன், இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நீங்கள் சித்தரஞ்சன் சாலைக்கு சென்று தான் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பொதுவாக, முதல்வரிடம் கேளுங்கள், தலைவரிடம் கேளுங்கள் என்று கூறும் அமைச்சர் துரைமுருகன், 'சித்தரஞ்சன் சாலை' என்று முதல்வரின் இல்லம் அமைந்திருக்கும் சாலையை குறிப்பிடுவது அமைச்சரவை மாற்றத்தில் குடும்பத்தினர் தலையீடு இருப்பதை சூசகமாக சொல்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த சூழலில் தான் அமைச்சர் பொன்முடி துர்கா ஸ்டாலினை புகழ்ந்து பேசுவதாக எண்ணி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் என்கிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil