திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி சிலைத் திறப்பு விழா நேற்றைய (17.12. 18) தினம் சென்னை அண்ணாஅறிவாலயத்தில் நடைப்பெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கருணாநிதி சிலையை திறந்து வைத்தார்.
சிலைத் திறப்பு நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
திரைத்துறையை பொருத்தவரையில் நடிகர் ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு, விவேக் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். சிலைத் திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார். மோடி ஆட்சி, கஜா புயல் நிவாரணம், பிரதமரின் செயல்பாடுகள் என அடுத்தடுத்து விமர்சித்து ஆவேசமாக உரையாற்றினார்.
இதில் ஸ்டாலின் கூறிய கருத்து தற்போது தேசிய கருத்தாக மாறி விமர்சனங்களை சந்தித்துள்ளது. ”நாட்டுக்கு நல்லாட்சி அளிக்க, ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிகிறேன். ராகுல் காந்தியே வருக… நாட்டிற்கு நல்லாட்சி தருக” ஸ்டாலின் கூறிய இந்த கருத்து தான் தமிழக அரசியலில் இன்றைய டாக் ஆஃப் டவுன்.
ஸ்டாலினின் இந்த கருத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி உட்பட பலரும் தங்களது பதில் விமர்ச்னத்தை முன்வைத்துள்ளனர்.
இதோ அரசியல் தலைவர்களின் ரியாக்ஷன்கள்:
1. முதல்வர் எடப்பாடி பழனிசாமி:
”ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது ஸ்டாலினின் விருப்பம். கூட்டணி அறிவிக்கப்பட்ட பிறகே யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியும்”
2. இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா :
”ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தது பற்றி மதச்சார்பற்ற கட்சிகள் ஆலோசிக்கும் வரும் நாட்களில் இது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்”
3. மார்க்சிஸ்ட் மாநிலசெயலர் கே.பாலகிருஷ்ணன்
”தேர்தல் முடிவுகளுக்கு பிறகே பிரதமர் வேட்பாளரை முன்மொழிவது வழக்கம்.மதச்சார்பற்ற கட்சிகள் வெற்றி பெறும்போது பிரதமர் வேட்பாளர் பற்றி பரிசீலிக்கும் சூழல் வரும். பிரதமர் வேட்பாளருக்கான தகுதி உடையவர்தான் ராகுல்காந்தி”
4. வைகைச்செல்வன் :
மாநில தேர்தல் முடிவுகளை வைத்து ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளார் ஸ்டாலின் ராகுலை பிரதமராக ஏற்பார்களா என்பது மக்கள் கையில்தான் உள்ளது.
5. திருமாவளவன் :
”ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தது மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க முடியும். ராகுல் காந்தி தலைமையில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் அணி திரள்வார்கள். ஜனநாயகம், அரசமைப்பு சட்டத்தை காக்க பாஜக ஆட்சிக்கு வருவதை தடுப்பது அவசியம்”
6. பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்:
”ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் கட்சியே தயங்குகிறது. காங்கிரஸ் கூட்டணியில் சேர ஏணைய கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. ”