நாமக்கல் கைது... மு.க.ஸ்டாலின் போராட்டம்... 7 ஆண்டு ஜெயில்!: எச்சரிக்கும் ஹெச்.ராஜா

நாமக்கல் திமுக.வினரைப் போல ஸ்டாலினை ரிமான்ட் செய்ய வேண்டும். ஏ.சி. மண்டபத்தில் வைத்து விடுவிக்கக் கூடாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருக்கிறார்.

நாமக்கல் திமுக.வினரைப் போல ஸ்டாலினை ரிமான்ட் செய்ய வேண்டும். ஏ.சி. மண்டபத்தில் வைத்து விடுவிக்கக் கூடாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருக்கிறார்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணத்தின் போது திமுக.வினர் கருப்புக் கொடி காட்டினர். அப்போது கருப்புக் கொடிகளை ஆளுனர் கார் மீது வீசியதாக தெரிகிறது. இதையொட்டி போராட்டம் நடத்திய திமுக.வினர் 192 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாமக்கல் திமுக.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று (ஜூன் 23) சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுனர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடத்தினார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

மு.க.ஸ்டாலின் போராட்டம் குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் கருத்து தெரிவித்தார். முகநூல் பக்கத்தில் ஹெச்.ராஜா வெளியிட்ட பதிவு ஒன்றில், ‘ஒரு எதிர்கட்சி தலைவருக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும். இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 124ன் படி ஜனாதிபதி/ஆளுநரின் மரியாதைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைக்கும். எனவே நாமக்கல் காவல்துறை செயல் சட்டப்படி சரி.

1978 ல் அரசியல் சட்டத்தை எரித்ததற்காக கருணாநிதியை கைது செய்தால் இரத்த ஆறு ஓடும் என்று திமுக மிரட்டிய நிலையில், எம் ஜி ஆர் அவர்கள் கருணாநிதியை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார். தமிழகம் அமைதியாக இருந்தது.

பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே அஞ்சாமல் இருந்தவர் யாரு? என்று திமுக ஒரு பாட்டு எழுதியது. அவ்வளவுதான். அன்று எம் ஜி ஆர் அவர்கள் காட்டிய துணிவை தற்போதைய அரசும் காட்ட வேண்டும்’ என கூறியிருக்கிறார்.

ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில், ‘காலையில் கைது செய்து கல்யாண மண்டபத்தில் A/C ல் வைத்து விடுதலை செய்வதை விட்டு விட்டு ஒருமுறை இவரையும் நாமக்கல் திமுக வினரை போல் ரிமாண்ட் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்.’ என கூறியிருக்கிறார்.

ஹெச்.ராஜா டிவிட்டரில் மற்றொரு பதிவில், ‘ஆத்திகராக இருந்தால் முழுமையாக இந்துக்களை மதிக்க வேண்டும். கோவிலில் யாகம் ஏற்பாடு செய்வது, ஆனால் பொட்டு வைத்தால் அதை அழிப்பது என்பது இந்து நம்பிக்கையை அவமதிப்பதாகும். சிறுத்தையின் புள்ளிகளை ஒருபோதும் அழிக்க முடியாது. திமுக ஒருபோதும் இந்து உணர்வுகளை மதிக்காது.’ என கூறியிருக்கிறார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close