ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடைசிநாள் பிரசாரத்தில், தந்தை பெரியாரின் பேரனும், ஈ.வி.கே.சம்பத் மகனுமான ஈ.வி.கே.எஸ். சம்பத்துக்கு கலைஞரின் மகன் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கடைசி நேர பஞ்ச் பேச்சு பலன் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு தி.மு.க – காங்கிரஸ் தரப்பில் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் சனிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து, திராவிட இயக்கத்துடனான அவரது குடும்பத் தொடர்பை வலியுறுத்துவது ஆளும் கூட்டணிக்கு பெரும் வெற்றியை அளிக்கும் என்று தி.மு.க நம்புகிறது.
அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த இடமான மேற்கு கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஈரோட்டில் சனிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 பேரணிகளை நடத்தினார். 2021-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என வாக்காளர்களுக்கு உறுதியளித்தார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை விரைவில் நிறைவேற்றப்படும். தனது அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளதாக மு.க. ஸ்டாலின் கூறினார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்ட மு.க. ஸ்டாலின், மறைந்த திருமகன் ஈ.வெ.ரா செய்து முடிக்காமல் விட்டுச் சென்ற பணிகளை முடிக்க அவருடைய தந்தை காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இருக்கிறார். கடந்த ஜனவரி தொடக்கத்தில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வே.ரா (46) மரணமடைந்ததை அடுத்து பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் பிரசாரம் செய்த மு.க. ஸ்டாலின் தனது உரையில், திராவிட இயக்கத் தலைவர் பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனின் தந்தை ஈ.வி.கே. சம்பத்தைப் பற்றிய நினைவுகளையும் நினைவு கூர்ந்தார். “கலைஞரின் மகன் சம்பத்தின் மகனுக்காக இங்கே ஓட்டு கேட்க இங்கு வந்துள்ளேன்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு முறை தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தி.மு.க வட்டாரம் நம்புகிறது. ஆனால், பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க-வின் கே.எஸ். தென்னரசு கடும் போட்டியை கொடுத்து வருகிறார். கடந்த வாரம் அ.தி.மு.க உட்கட்சிப் பூசலில் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனப்து செல்லும் என்ற சட்டப்பூர்வமான வெற்றியும் அ.தி.மு.க-வுக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கில் 2.26 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 50,000 பேர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அ.தி.மு.க-பா.ஜக கூட்டணிக்கு முக்கிய நெருக்கடி காரணியாக அமையும்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரசாரத்தில், இடதுசாரி மற்றும் தலித் கட்சிகளின் கூட்டணி இளங்கோவனுக்குப் பின்னால் அணி திரண்டுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆதரவும் உள்ளது. மற்ற முக்கிய வேட்பாளர்களில் நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் எஸ் ஆனந்த் ஆகியோரும் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இரோடு இடைத்தேர்தலில், மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் கடந்த கால இடைத்தேர்தல் முடிவுகள் பொதுவாக ஆளும் ஆட்சிக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. இந்த தேர்தலில் தி.மு.க அமைச்சர்கள் இளங்கோவனுக்காகவும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தென்னரசுவுக்காகவும் பிரச்சாரம் செய்தனர். ஈரோடு கிழக்கு பிரசாரத்தின் போது, தனது மேற்கு கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஈரோட்டில் பழனிசாமி முகாமிட்டுள்ளார். ஸ்டாலினின் மகன் உதயநிதியும் ஒரு முக்கிய முகமாக வலம் வந்தார்.
தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, தேர்தல் நடத்தை விதிகளை (எம்.சி.சி) மீறியதாக 41 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 725 தேர்தல் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 75 வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 238 வாக்குச் சாவடிகளில் 32 வாக்குச் சாவடிகள் பாதிக்கப்படக்கூடியவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர், நுண் பார்வையாளர்கள், வெப் கேமராக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தேர்தல் பணியை கண்காணிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஈரோடு கிழக்கு மக்கள் வாக்களிக்கத் தயாராகி வரும் நிலையில், பல தசாப்தங்களாக தமிழக அரசியலில் தலைகாட்ட முடியாமல் திணறி வரும் காங்கிரசுக்கும், ஆளும் கட்சிக்கும் இந்தத் தேர்தல் முடிவு முக்கியமானதாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“