கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவியேற்பு விழாவில், 19-க்கும் மேற்பட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பதவியேற்பு விழா மேடை மிகவும் சிறியதாக இருந்ததால் மு.க. ஸ்டாலின் பின்னுக்கு தள்ளப்பட்டது, பேசு பொருளாகியுள்ளது.
இந்தியாவின் மிகவும் பழமையான பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சி, 2014-க்கு பிறகு, தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்தது. காங்கிரஸ் பா.ஜ.க-வின் விமர்சனங்களுக்கு முகம் கொடுத்தது. காங்கிரஸ் குடும்பக் கட்சி இல்லை என்பதை நிரூபிக்க, கட்சித் தலைமை பதவியில் இருந்து காந்திகள் ஒதுங்கிக் கொண்டனர். மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவரானார். ராகுல் காந்தி நேரு குடும்பத்தின் சவளைப்பிள்ளை வாரிசு இல்லை, வலிமையான ராகுல் என்பதை தனது பாரத் ஜோடோ யாத்திரை மூலம் நிரூபித்தார்.
இந்த சூழ்நிலையில்தான், கர்நாடகத் தேர்தல் வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. அசுர பலத்துடன் இருக்கும் பா.ஜ.க-வை வீழ்த்த, காங்கிரஸ் தலைமையில் இணையலாம் என்று எதிர்க்கட்சிகளுகும் கர்நாடக வெற்றிதான் நம்பிக்கை அளித்துள்ளது.
இதனால், கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்கும் நோக்கில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்திருந்தார். அவர்களில் 19 கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, காங்கிரசின் முக்கியக் கூட்டணிக் கட்சியான தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விமானம் மூலம் பெங்களூரு சென்றார்.
ஸ்டாலின் அன்று இரவு பெங்களூருவில் உள்ள தனது சகோதரி செல்வியின் வீட்டில் தங்கினார். சனிக்கிழமை காலை பலத்த பாதுகாப்புடன் பதவியேற்பு விழா நடக்கும் கண்டீரவா ஸ்டேடியத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
பதவியேற்பு விழா நடைபெறும் ஸ்டேடியத்தில் இருக்கும் வி.வி.ஐ.பி வரவேற்பு அறையில் சில நிமிடங்கள் அமர்ந்திருந்த மு.க. ஸ்டாலின், தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு, வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ஆகியோருடன் சிறிது நேரம் உரையாடினார்.
இதையடுத்து, மு.க. ஸ்டாலின், பதவியேற்பு விழா மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் அருகில் முக்கிய இடத்தில் அமர வைக்கப்பட்டார். இதையடுத்து, விழா மேடைக்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, ஃபரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரிடம் சில நிமிடங்கள் பேசினார். ஆனால், மு.க. ஸ்டாலின் உடன் பேசாமல் அமைதியாக இருந்தார். ஆனால், ராகுல் காந்தி டி.ஆர்.பாலுவுடன் மட்டும் பேசிக் கொண்டிருந்தார்.
கர்நாடக முதல்வராக பதவியேற்ற சித்தராமையா, துணை முதல்வராக பதவியேற்ற டி.கே.சிவகுமாரை வாழ்த்தி மு.க. ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார். முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்ற மேடை மிகவும் சிறியதாக இருந்ததால் ஆளுநர் அலுவலக ஊழியர்கள், கட்சிகளின் தலைவர்கள், பாதுகாப்பு வீரர்கள், புகைப்பட கலைஞர்கள் என நிறைய பேர் மேடையில் இருந்ததால் இட நெருக்கடி ஏற்பட்டது.
சித்தராமையா, டி.கே. சிவக்குமார் மற்றும் அமைச்சர்களின் பதவியேற்பு முடிந்த பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்ற 19 கட்சிகளின் தலைவர்களையும் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உடன் கைகளை உயர்த்தி போஸ் கொடுக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஏற்பாடு செய்தார். ஆனால், மேடையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் ராகுல், பிரியங்காவுக்கு மத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மு.க.ஸ்டாலின் கூட்ட நெருக்கடியில் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
விழா மேடையின் இடது ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருமாவளவன் இடம் கிடைக்காமல் ஓரம் கட்டினார். வலது ஓரத்தில் நின்றிருந்த கமல்ஹாசனுக்கும் இடம் கிடைக்காததால் பின்வரிசைக்கு தள்ளப்பட்டார்.
பதவியேற்பு விழா மேடை சிறியதாக இருந்ததால் இட நெருக்கடி காரணமாக, தமிழக தலைவர்கள் மட்டுமல்ல, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோரும் பின்னுக்கு தள்ளப்பட்டனர்.
எதிர்க்கட்சிகளை ஒன்றினைக்க 25 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு 19 தேசிய கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்ளும் மேடை சிறியதாக இருந்ததால் இந்த இட நெருக்கடி ஏற்பட்டது. இதனால், 19 கட்சிகளின் தலைவர்களின் கையை உயர்த்தும் குழு புகைப்படத்தில் பெரும்பாலானோர் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டது.
பதவியேற்பு விழா முடிந்ததும், மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா முடிந்து காங்கிரஸ் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே அங்கிருந்து வெளியேறினார். பின்னர், ஷாங்கிரி லா நட்சத்திர விடுதியில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தியுடன் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியிலும் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
பதவியேற்பு விழா மேடையில் தமிழக தலைவர்களுக்கு கூட்ட நெருக்கடியால், போதிய முக்கியத்துவம் கிடைக்கா விட்டாலும், கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் தமிழக தலைவர்களுடன் மிகுந்த அன்போடு பழகினர். மு.க.ஸ்டாலின், டி.ராஜா, திருமாவளவன், கமல்ஹாசன் ஆகியோருடன் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் வாஞ்சையோடு பேசினார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.