நீண்ட நாள் சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேச வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாட்டு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டபேரவையில் இன்று நீண்ட காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.
”இஸ்லாமிய மக்கள் மீது ஏன் திடீர் பாசம் ? இந்த விவகாரம் தொடர்பான மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது. தமிழக ஆளுநரை சந்தித்து அதிமுக அழுத்தம் கொடுத்திருக்கலாமே ” என்று முதல்வர் பேசினார்.
இஸ்லாமியர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று முதலமைச்சர் கூறியதற்கு நாங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏக்கள் அனுமதி கோரினர். ஆனால் சபாநாயகர் அனுமதியளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து பேசிய இ.பி.எஸ் “ பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்தது. அதுபோல் பேரரிவாளன் விடுதலைக்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது” என்று பேசினார்.
தீர்மானம் குறித்து அதிமுகவினருக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“