அவதூறு பேச்சில் ஈடுபட்ட எம்.எல்.ஏ கருணாசை உடனே கைது செய்த தமிழக அரசு ஹெச். ராஜா மற்றும் எஸ்.வி. சேகரை கைது செய்யாதது ஏன் என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் நடந்த மேடை நிகழ்ச்சி ஒன்றில், தமிழக அரசு, காவல்துறையை கொச்சை சொற்கள் பிரயோகித்து பேசினார் எம்.எல்.ஏ. கருணாஸ். மேலும் அதே மேடைப் பேச்சில் சாதி வெறியை தூண்டும் வகையிலும் அவர் பேசியதன் காரணமாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கருணாஸ் கைது! வீட்டிலேயே வைத்து கைது செய்த காவல்துறை!
Read More: கருணாஸ் கைது, ஆங்கிலத்தில் படிக்க...
இதே போன்று முன்னதாக பாஜகவை சேர்ந்த ஹெச். ராஜாவும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு பாராபட்சம் பார்க்கிறதா என்பது போன்ற கேள்வியை எழுப்பியுள்ளார் மு.க. ஸ்டாலின்.
மு.க. ஸ்டாலின் இன்று அளித்த அறிக்கையில் :
“மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகள் எந்தச் சூழ்நிலையிலும் வரம்பு மீறும் வகையில் இருக்கக்கூடாது என்பதிலும்; பொது அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பெருமளவுக்கு இருக்கிறது என்பதிலும்; இரு வேறு கருத்துகளுக்கு இடமே இல்லை. ஆனால் அதே நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் திரு கருணாஸ், தான் தெரிவித்த கருத்துக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த பிறகும், அவரை வேண்டுமென்றே கைது செய்திருப்பது, தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி, "ஆளுக்கொரு நீதி - வேளைக்கொரு நியாயம்” என்ற நிலையில்தான் அமல்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.
தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், உயர்நீதிமன்றத்தையும், தமிழ்நாடு காவல்துறையையும் ஒட்டுமொத்தமாக மிகவும் கேவலமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்ததாலும், இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களின் இல்லத்தரசிகளைப் பற்றி அநாகரிகமான முறையில் பேசியதாலும், பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டும், இதுவரை பா.ஜ.க. தேசியச் செயலாளர் திரு எச். ராஜா கைது செய்யப்படவில்லை.
அவர் காவல்துறைக்கே - காவல்துறையைக் கட்டுப்படுத்தும் தமிழக அரசுக்கே சவால் விடும் வகையில் "நான் தலைமறைவாகவில்லை" என்று மேடைதோறும் பேசி, அதற்கு காவல்துறை அதிகாரிகளே பாதுகாப்பு வழங்கி வருவது என்னவகை நியாயம் என்று புரியவில்லை. அதேபோல், பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து மிகவும் இழிவான கருத்துகளை வெளியிட்ட திரு எஸ்.வி.சேகரின் முன் ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு, உச்சநீதிமன்றமே கைது செய்ய தடை விதிக்க மறுத்தும் கூட, அவரை அ.தி.மு.க அரசு கைது செய்யத் தயக்கம் காட்டுவது, என்ன வகை அணுகுமுறை என்றும் விளங்கவில்லை.
ஆகவே, திரு கருணாஸுக்கு ஒரு சட்டம், திரு எச்.ராஜா மற்றும் திரு எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம் என்ற அ.தி.மு.க அரசின் பாகுபாடான போக்கு மிகவும் அநீதியானது, கண்டிக்கத்தக்கது. ஒரு போலீஸ் அதிகாரியை விமர்சித்தது குற்றம் என்றால், ஒட்டுமொத்த காவல்துறையையும், உயர்நீதிமன்றத்தையும் மிக மோசமாக விமர்சித்த திரு எச். ராஜாவை கைது செய்யாததைப் பார்க்கும் போது, எடப்பாடி திரு பழனிசாமியை முதலமைச்சராக்கிய "கூவத்தூர் மர்மமும் ரகசியமும்” வெளிச்சத்துக்கு வந்து விடக்கூடாது; தமிழ்மக்களின் ஏச்சையும் பேச்சையும் இதிலாவது தவிர்க்க வேண்டும்; என்ற காரணத்திற்காகவே திரு கருணாஸை கைது செய்திருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.
உலை வாயை மூடும் அற்ப எண்ணம் இதுவாகும். அ.தி.மு.க அரசில் "சட்டத்தின் ஆட்சி" குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல், சிதறிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதைக் கண்டு, பொதுமக்கள் வெட்கித் தலைகுனிகிறார்கள்! எனவே, கைது செய்ய வேண்டியவர்களை, அவர்களுடைய பின்னணியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தாமதிக்காமல் கைது செய்ய வேண்டும்; விடுவிக்க வேண்டியவர்களை உடனே விடுவிக்க வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.