தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19.9.2022) மறைமலைநகரில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நான்காவது தமிழ் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான சங்கத்தின் சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய தமிழ் மாநில பொது மாநாட்டில் உங்கள் அனைவரையும் சந்தித்து உரையாற்றக்கூடிய வாய்ப்பினைப் பெற்றமைக்கு என்னுடைய வணக்கத்தை, நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
எல்லோரும் குறிப்பிட்டதைப்போல, தலைவர் கலைஞர் அவர்கள் வைத்திருந்த அதே பாச உணர்வோடுதான் இங்கே நானும் வந்திருக்கிறேன், உங்கள் அழைப்பினை ஏற்று வந்திருக்கிறேன்.
தேர்தல் காலங்களில் மட்டும் உங்களையெல்லாம் சந்திப்பவன் அல்ல நான். இதோ, உங்கள் முகங்களைப் நான் பார்க்க வந்திருக்கிறேன். உண்மையான அக்கறையோடு வந்திருக்கிறேன்!
இந்த அக்கறை என்பது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்போதும் உண்டு. ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்று சொன்னாலும், என்றைக்கும் உங்களோடு இருக்கக்கூடியவர்கள் நாங்கள்.
குறிப்பாக, மாற்றுத்திறனாளி சகோதரர்கள் மீது அன்புகொள்ள வேண்டும் – அவர்களுக்குத் தேவைகளை உடனடியாக, அவர்கள் கேட்காமலேயே செய்துதர வேண்டும் என்பது, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வகுத்துத் தந்திருக்கக்கூடிய பாதை!
மாற்றுத் திறனாளிகள் என்று சுயமரியாதைப் பெயரைச் சூட்டியவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். ஒரு திறன் குறைந்தாலும், இன்னொரு திறன் மூலமாக வெல்லும் ஆற்றல் படைத்தவர்கள் நீங்கள். அந்த வகையில், மற்றவர்களை விட அதிகமான திறன் கொண்டவர்கள் நீங்கள். அதனால்தான், மாற்றுத்திறனாளிகள் என்று பெயர்சூட்டி, அதனையே அரசாணையாக மாற்றியவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். உங்கள் அனைவரையும் சகோதரர்கள் போல, சொந்தங்களைப் போல, தலைவர் அவர்கள் கருதினார்கள். அதனால்தான் அவர் மறைந்தபோது, சொந்தத் தந்தை மறைந்ததைப் போல நீங்களெல்லாம் வருந்திய காட்சியை நாங்கள் கண்கூடாகப் பார்த்தவர்கள்.
கழக அரசு அமைந்தவுடன், ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் துறைகளை நான் பிரித்துக் கொடுத்தேன். ஆனால், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையைப் பொறுத்தவரையில், தலைவர் கலைஞரைப்போல நானே வைத்துக் கொண்டேன். அதன் மூலமாக, என்னுடைய விருப்பங்களை உங்களுக்குச் செய்து தரவேண்டும் என்று நான் விரும்பினேன்.
திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும் மூன்று சக்கர மிதிவண்டி சக்கரநாற்காலிகள், காதுகளுக்கு பின்புறம் அணியக்கூடிய காதொலிக்கருவிகள், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், பேட்டரி பொருத்தப்பட்ட சக்கரநாற்காலிகள் ஆகிய 5 வகை கருவிகளின் 36 மாதிரிகளில் 7,219 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
நகர பேருந்துகளில் (White Board Bus) மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணமில்லாமல் சென்று வர ஆணையும் வழங்கப்பட்டது.
UDD Card வழங்குவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு 9 லட்சத்து 30 ஆயிரத்து 909 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 67 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
இடஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பு வழங்கவும், பொதுக் கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தடையற்ற சூழல்களை அமைக்க சமவாய்ப்புக் கொள்கை (Equal Opportunity Policy) அனைத்துத் தனியார் தொழிற்கூடங்கள் மற்றும் நிறுவனங்களில் நடைமுறைப்படுத்திட வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் சிறந்த அரசு நிறுவனம், தனியார் நிறுவனத்திற்கு 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் 2 மாநில விருதுகள் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுத் துறை கட்டடங்களில் முக்கியமாக வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான 790 கட்டடங்களில் ரூபாய் 4 கோடியே 74 லட்சம் செலவிலும், 200 சுற்றுலா இடங்களில் ரூபாய் 1 கோடியே 20 லட்சம் செலவிலும் தடையற்ற சுழல் அமைக்க தணிக்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு வேலைவாய்ப்புகளில் Group A மற்றும் Group B பிரிவுகளில் 559 பணியிடங்கள் கண்டறியப்பட்டு, 1096 பின்னடைவு காலிப் பணியிடங்களை தனிச் சிறப்பு நேர்வாக (Special Drive) தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மாநில ஆட்சேர்ப்பு பணியகம் (SRB) மாவட்ட ஆட்சேர்ப்பு பணியகம் (DRB) மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலமாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இங்கே குறிப்பிட்டுச் சொன்னதைப்போல, கொரோனா காலத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மருத்துவத்துறை இணைந்து சிறப்புத் தடுப்பூசி முகாம்களை மாவட்டந்தோறும் நடத்தியிருக்கிறது.
அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி பெறுவதற்குத் தனியாகப் பிரிவு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
வீட்டை விட்டு வெளியே செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்றும் தடுப்பூசி வழங்கப்பட்டது. இதில், 3 லட்சத்து 84 ஆயிரத்து 114 பேர் இத்திட்டத்தில் பயன்பெற்றிருக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கென 2021-2022-ஆம் நிதியாண்டில் ரூபாய் 813 கோடியே 63 லட்சம் அளவில் நிதி ஒதுக்கீடு செய்து, சிறப்பாக பல திட்டங்களை வகுத்துச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
2022-23 நிதியாண்டில் ரூபாய் 838 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்களைத் தீட்டி வருகிறோம்.
பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் மாதம் ரூ.1500 வழங்க உத்தரவிட்டோம்.
உலக வங்கி உதவியுடன் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் 6 ஆண்டு காலத்திற்கு 1,702 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
கடுமையான இயலாமை - கடுமையான அறிவுசார்குறைபாடு – தசைச்சிதைவு மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த பராமரிப்பு உதவித்தொகை 1,500 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.
செவித்திறன் குறைபாடுடைய 60 மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வியில் பி.காம்., பி.சி.ஏ பாடங்கள் படிக்க ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிய கடன் உதவி வழங்கும் திட்டத்தினை அறிவுசார் குறைபாடுடையோர், புற உலகச் சிந்தனையற்றோர் மற்றும் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கும் நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 400 பேர் பயனடைகிறார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவி திட்டத்தின் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியினை பாதித்தொகை ரொக்கமாகவும், மீதமுள்ள தொகையினை தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கும் முறையினை மாற்றி முழுத்தொகையும் ரொக்கமாக வழங்கப்படும் திட்டத்திற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிந்து வாழ்வில் முன்னேறுவதற்கு, தையல் இயந்திரம் வழங்குவதற்கான வயது உச்சவரம்பினை 45-இல் இருந்து 60-ஆக நீட்டித்து உள்ளோம்.
முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு இல்லங்கள் முதற்கட்டமாக திருப்பூர், கோயம்புத்தர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய அரசு, அரசு உதவிபெறக்கூடிய தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் 235 இல்லங்கள், சிறப்புப் பள்ளிகளில் உணவூட்டு மானியம் தொள்ளாயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து இருநூறு ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு வளாகங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்கத் தேவையான வாடகை, முன்தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டிக் கடை நடத்த நகர விற்பனைக் குழுவின் விதிமுறைப்படி முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு வேலைவாய்ப்பில் 4 விழுக்காடு இடஒதுக்கீட்டினை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க ஏதுவாக உயர்மட்டக் குழு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள் வழங்க தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை தரப்படும்.
அறிவுசார் குறையுடையோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான 8 இல்லங்கள் திருநெல்வேலி, சேலம், திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் 91 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இவை எல்லாம் பதினைந்தே மாதத்தில் செய்யப்பட்டிருக்கக்கூடிய நலத்திட்டங்கள்! இவர்களுக்காக மட்டும் கடந்த பதினைந்து மாதத்தில் 759 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் நிறைவேற்றித் தரப்பட்டுள்ளது.
நான் செல்லும் இடங்களில் எல்லாம் மனமகிழ்ச்சியோடு, சிரித்த முகத்தோடு அந்த மாற்றுத்திறனாளித் தோழர்களைப் நான் பார்த்ததுண்டு. அவர்களைப் பார்த்ததும் என்னுடைய காரை நிறுத்தச் சொல்லி, காரிலிருந்து இறங்கி, அவர்களுக்கு அருகிலே சென்று அவர்களைப் போய் பார்த்து கை கொடுப்பது என்னுடைய வழக்கமாகவே நான் வைத்திருக்கிறேன். உங்களுக்காக நான் இருக்கிறேன் என்று நான் அவர்களிடம் சொல்வேன். நான் சொல்லவில்லை என்றாலும், நமக்காக இருப்பவர் இந்த ஸ்டாலின் என்று அந்தத் தோழர்களுக்குத் நன்றாகப் புரியும். இத்தகைய நம்பிக்கையைப் பெறுவதுதான் மிகப் பெரிய சாதனை!
வயது முதிர்வின் காரணமாக, நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தினார்கள். அவரது உடல் எடையைத் தாங்கும் சக்தி அவருடைய கால்களுக்கு இல்லாத நிலையில் அவர் அதனை பயன்படுத்தினார். காலமெல்லாம் இதனைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளித் தோழர்கள் எவ்வளவு சிரமத்தை அனுபவித்திருப்பார்கள் என்பதை அவர் எண்ணிப் பார்த்துதான் இந்தத் துறையைக் கண்ணும் கருத்துமாக நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் கவனித்தார்கள். எங்களையும் அப்படி கவனிக்கச் சொன்னார்.
எண்ணற்ற நலத்திட்ட உதவிகளைப் பெற்ற மாற்றுத்திறனாளிகளின் முகத்தில் இன்றைக்கு மகிழ்ச்சியை நான் பார்க்கிறேன்.
கட்டணமில்லாப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் முகத்தில்-
கல்லூரிகளுக்குப் படிக்க வந்ததால் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை பெறும் அரசுப் பள்ளி மாணவிகள் முகத்தில் –
பசிப்பிணி போக்கும் காலைச் சிற்றுண்டி உண்ணும் குழந்தைகளின் முகத்தில் –
இலவச மின்சாரம் பெறும் உழவர்களின் முகத்தில் –
நகைக்கடன் தள்ளுபடி பெற்ற மகளிர் முகத்தில் –
கூட்டுறவுக் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் முகத்தில் காண்பது உண்மையான மகிழ்ச்சி!
தங்கள் கையில் அதிகாரம் இருந்தபோது நாட்டைப் பற்றியோ, நாட்டு மக்களைப் பற்றியோ கவலைப்படாதவர்கள், சொன்னார்களே, 10 ஆண்டு காலம் எப்படி இருந்தது என்று அந்த கொடுமைகளை சுட்டிக்காட்டினார்களே! இன்றைக்கு இந்த ஆட்சியின் மீது இட்டுக் கட்டிய கதைகள் எல்லாம் அவதூறாக பரப்ப நினைக்கிறார்கள். ஆக, இப்போது போடுகிற ஆர்ப்பாட்ட கோஷங்கள், இது எல்லாம் மக்களுக்குத் தெரியாதா? மக்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களா?
நான் தொடக்கத்தில் சொன்னது போல, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளும்கட்சியாக இருந்தபோதும் சரி, நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கக்கூடியவர்கள். அதிகாரத்துக்கு வந்துவிட்ட காரணத்தால் விலகிச் செல்வபவர்கள் அல்ல நாங்கள். உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்துவதற்காகத்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்!
இங்கே கூட நம்முடைய மதிப்பிற்குரிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் இருக்கிறார். கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், அவ்வப்போது எங்களுக்கு ஆலோசனைகளைச் சொல்லி வருபவர்தான் அவர். ஆகவே, சொல்லக்கூடிய அந்தக் கோரிக்கைகளின் நியாயத்தை அறிந்து, புரிந்து அதனை எந்த அளவுக்கு நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்பது அவருக்கும் தெரியும், உங்களுக்கும் புரியும். இப்படி அனைத்து மக்களுடைய அரசாக ஒரு நல்லாட்சியை திராவிட முன்னேற்றக் கழக அரசு நடத்தி வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஏதோ நான்கு முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் ஒரு புதிதாக ஒன்று கண்டுபிடித்து பேசிக் கொண்டிருக்கிறார். நான்கு முதலமைச்சர்கள் அல்ல - யாரெல்லாம் நல்ல ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குகிறார்களோ, அந்த ஆலோசனைகள் எல்லாம் செயல்வடிவம் பெறுகிறதோ, அவர்கள் அனைவரும் சேர்ந்து தான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சொன்னாரே அந்த ஆட்சிதான் நடக்கிறது!
இது ஒரு கட்சியின் ஆட்சியாக நீங்கள் கருதவேண்டிய அவசியம் இல்லை. இனத்தினுடைய ஆட்சி என்று அதனால்தான் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால் இன்றைக்கு சொந்தப் புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லாமல், கடந்த கால அ.தி.மு.க அரசு இருந்ததே அதைப் போன்ற ஆட்சி அல்ல இந்த ஆட்சி.
இந்த ஆட்சியை வழிநடத்துவது திராவிட மாடல் என்ற பெரும் தத்துவம்! இத்தகைய திராவிட மாடல் ஆட்சி அனைவருக்கும் நன்மை செய்யும் ஆட்சியாக அனைவரும் விரும்பக்கூடிய ஆட்சியாக அனைவரின் ஆட்சியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்பட்டிருக்கிறது. இன்னும் பல கோரிக்கைகள் இருக்கிறது, நான் மறுக்கவில்லை, மறைக்கவில்லை, அதை நான் மறந்துவிடவும் மாட்டேன். அவைகளை எல்லாம், எந்தெந்த நிலையில், நிதி ஆதாரங்களைப் பொறுத்து, சில சட்ட விதிகளை அடிப்படையாக வைத்து அவைகளை எல்லாம் உறுதியாக நிறைவேற்றப்படும். அந்த உறுதியை நான் தர விரும்புகிறேன். இன்னும் சொல்கிறேன், நீங்கள் கவலைப்படாதீர்கள். இது உங்கள் ஆட்சி. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், நிரந்தரமாக ஆளப் போகிற ஆட்சி இது தான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிதான். இதை ஏதோ என் மீது இருக்கக்கூடிய இறுமாப்பில் நான் பேசுகிறேன் என்று நீங்கள் நினைத்து விடக்கூடாது, உங்கள் மீது இருக்கக்கூடிய நம்பிக்கையின் அடிப்படையில் நான் சொல்கிறேன்!
உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவேன். உங்களுக்கு குறைந்துள்ள திறனை, ஒரு கருவியின் மூலமாக நீங்கள் ஈடு செய்து கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கருவியைப் போல உங்களுக்கு உதவி செய்யக்கூடியவனாக நான் எந்நாளும் இருப்பேன்.
என்னையும் உங்களில் ஒருவனாக எண்ணி இந்த மாநாட்டுக்கு அழைத்து இருக்கிறீர்களே அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது, ஒரு நம்பிக்கையோடு அழைத்திருக்கிறீர்கள்.
நான் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறபோது, ஒரு நிகழ்ச்சியிலிருந்து இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்கிறோம் என்றால், 15 நிமிடம், 20 நிமிடத்தில் சென்றுவிட முடியும். ஆனால் ஏறக்குறை 2 மணி நேரம், 3 மணி நேரம் ஆகிறது. என்ன காரணம்? செல்லுகிற வழியெல்லாம், மக்கள் சாலையின் இருமருங்கிலும், நின்று கொண்டு இளைஞர்கள், மாணவர்கள், பெரியவர்கள், முதியவர்கள், தாய்மார்கள், மகளிர், குறிப்பாக நம்முடைய மாற்றுத் திறனாளிகள் வரவேற்கிற அந்த காட்சியை பார்க்கிறேன். அதனால் அவர்களுடைய வரவேற்பை, அதையும் தாண்டி சிலர் மனுக்களோடு நிற்கிறார்கள். அந்த மனுக்களை தருகிறபோது கூட என் கையில் தான் தரவேண்டும் என்று விரும்புகிறார்கள். என்னிடம் கையில் கொடுத்தால், நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை இன்றைக்கும் மக்களிடத்தில் வந்திருக்கிறது. சில மனுக்களை சில தோழர்கள், தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் தருகிறபோது, நான் அதை இறங்கி வாங்கினால், உடனே நன்றி என்று சொல்கிறார்கள். காரியம் முடிந்து விட்டது போன்று நன்றி என்று உடனே சொல்கிறார்கள். காரணம், அந்த அளவுக்கு ஒரு நம்பிக்கை. எனவே, நான் உறுதியோடு சொல்கிறேன், அந்த நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது. அந்த நம்பிக்கையோடு தான் நாம் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். எனவே நான் உங்களையெல்லாம் மீண்டும் விரும்பி, வேண்டி, கேட்டுக்கொள்ள விரும்புவது நீங்கள் மிகுந்த சிரமப்பட்டு, பல்வேறு இடையூறுகளை எல்லாம் ஏற்றுக் கொண்டுதான் இந்த மாநாட்டிற்கு வந்திருக்கிறீர்கள். அதுவும் எனக்கு புரிகிறது.
அப்படிப்பட்ட மாற்றுத் திறனாளிகளாக வந்திருக்கக்கூடிய தோழர்களை நான் கேட்டுக் கொள்ள விரும்வுது, நீங்கள் திரும்பிச் செல்கிறபோது மிகுந்த கவனத்தோடு பயணம் செய்ய வேண்டும். தம்முடைய இருப்பிடங்களுக்குச் செல்கிறபோது தயவுகூர்ந்து மிகுந்த கவனத்தோடு நீங்கள் செல்ல வேண்டும். அவர்களுக்கு உதவியாக சிலர் வந்திருக்கிறீர்கள். அப்படி உதவியாக வந்திருக்கக்கூடிய அவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன், அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு போய் அவர்களுடைய இல்லத்தில் சேர்க்கவேண்டிய பொறுப்பும், கடமையும் உங்களுக்கு இருக்கிறது. அதை நீங்கள் தயவு செய்து மறந்துவிடாதீர்கள் என்று நான் இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக்கொண்டு, இந்த மாநாட்டு நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், எந்த நோக்கத்தோடு இது நடத்தப்படுகிறதோ, இங்கே எடுத்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய சில கோரிக்கைகள், அந்தக் கோரிக்கைகளை, நிச்சயமாக இந்த ஆட்சி நிறைவேற்றித் தரும், நிறைவேற்றித் தரும் என்பதை மாத்திரம் இந்த நேரத்திலே எடுத்துச் சொல்லி, காரணம் நான் வெறும் ஸ்டாலின் அல்ல, கலைஞர் பெற்றெடுத்திருக்கக்கூடிய மகன் என்பது உங்களுக்குத் தெரியும்.
அதனால்தான், நான் தேர்தலில் வெற்றி பெற்று கவர்னர் மாளிகையில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது, பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது சொன்னேன், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்’ சொன்னேன். ஆகவே, அதை மனதில் வைத்துத்தான் இந்த திராவிட மாடல் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. எனவே, நம்பிக்கையோடு இருங்கள், நிச்சயமாக உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என்ற உறுதியை மாத்திரம் இந்த நேரத்திலே எடுத்துச்சொல்லி, இந்த நல்ல வாய்ப்பைத் தந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிசொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.