மாநிலத்தின் வளர்ச்சி ஒருவருக்கு புரியவில்லை, திராவிட மாடல் ஆட்சியில் கல்வியும் மருத்துவமும் இரு கண்கள் என்று ஆளுநரின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதையும் படியுங்கள்: ஆளுநரின் விமர்சனத்திற்கு பதிலளித்த அமைச்சர் மா.சு.
அப்போது ”திராவிட மாடல் ஆட்சியில் கல்வியும் மருத்துவமும் இரு கண்கள். கல்வி, மக்கள் நலனில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் உயர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு மட்டும் இது புரியவில்லை. மக்களை குழப்பும் வகையில் ஒருவர் தினந்தோறும் பேசி வருகிறார். தேசிய அளவில் பல்வேறு சுகாதாரக் குறியீடுகளில் முதல் 3 இடங்களில் தமிழ்நாடு இருக்கிறது. அவர் இதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை தற்போது அனைவரும் போற்றுகின்றனர்.
கடுமையான கொரோனா காலத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது. ஆனால், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தின் செயல்பாடுகளால், அந்தக் கடினமான கட்டத்தைக் கடந்தோம். அவருடன் பணியாற்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டதால் கடந்து வர முடிந்தது.
கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களைப் போன்று நகரங்களுக்கும் நலவாழ்வு மையங்கள் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் அறிவித்திருந்தேன். அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
ஆளுனர் ஆர்.என்.ரவி நேற்று முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை மறைமுகமாக விமர்சித்த நிலையில், ஆளுனரின் கருத்துக்கு மறைமுகமாக முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil