தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி இரவு அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் தொழில் முதலீட்டாளா்களைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டார். இந்த பேச்சுவார்த்தை மூலம், 18 முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ. 7,616 கோடி முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
மேலும், சென்னை அருகே மூடப்பட்ட முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளை சந்தித்து மீண்டும் உற்பத்தியை தொடங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அத்துடன், உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்டாலின், சிகாகோ விமான நிலையத்தில் இருந்து, சென்னைக்கு புறப்பட்டார். ஸ்டாலின் வருகைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிகாகோ விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் திமுக கொடி மற்றும் பதாகைகள் ஏந்தி வழியனுப்பி வைத்தனர்.
சுமார் 18 மணி நேர பயணத்துக்கு பிறகு நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். சென்னை திரும்பும் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“