சென்னை மாநகராட்சியின் துணை மேயர் பதவி, உதயநிதிக்கு நெருக்கமான சிற்றரசுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ‘நோ’ சொன்னதால் திமுகவில் மகேஷ் குமார் என்பவர் துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக ஸ்வீஸ் செய்து வெற்றி பெற்றது. அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் திமுகவே கைப்பற்றியது. திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் சில இடங்களில் திமுகவின் போட்டி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
இருப்பினும், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தலைவராக படித்த இளம் உறுப்பினர்களைக்கொண்ட கூட்டத்தை திமுக தலைமை தேர்வு செய்துள்ளது. திமுக மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் 20 மாநகராட்சிகளுக்கு மேயர் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. 15 துணை மேயர் வேட்பாளர்களை களமிறக்கி ஆறு துணை மேயர் பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியுள்ளது.
திமுகவில் மேயர் வேட்பாளர்களில் 11 பேரும், துணை மேயர் வேட்பாளர்களில் 5 பேரும் பெண்கள் என்பது கவனத்தைப் பெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியை மீண்டும் வலிமைப்படுத்த இளைஞர்கள் மற்றும் படித்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் கவனம் செலுத்துவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, திமுக தலைமை, படித்த, இளம் வேட்பாளரக்லை அறிவித்ததற்கு காரணம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு கட்சியில் பணியாற்றுவதற்கான தலைவர்களை உருவாக்குவதே நோக்கம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிடும் 35 பேரில் 30 பேர் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள், அதுமட்டுமல்ல அவர்களில் ஒருவர் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“திமுக தலைமையின் நோக்கம் குறித்து திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. திமுக தலைவர் இறுதிப் பட்டியலில் சில மாற்றங்களைச் செய்துள்ளார்” என்று திமுகவின் மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
திமுக வேட்பாளர்களில் அப்படி என்ன மாதிரியான மாற்றங்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார் என்றால், சென்னை மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கான வேட்பாளர் கடைசி நேர மாற்றங்களில் ஒன்று என்று வட்டாரன்க்கள் தெரிவிக்கின்றன. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் என்.சிற்றரசு, இவர் துணை மேயர் பதவிக்கான பட்டியலில் இருந்தார். ஆனால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடைசி நிமிடத்தில் மாற்றியதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது துணை மேயர் பதவிக்கு மகேஷ் குமார் நிறுத்தப்பட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக முதல்முறை கவுன்சிலரான கல்பனாவை தேர்வு செய்ததால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் கல்பனா வெற்றி பெற்று கோவையின் முதல் பெண் மேயராகவும் கோவையின் முதல் திமுக மேயராகவும் ஆகியுள்ளார்.
திமுக தலைவரின் ஆசிர்வாதம் பெறுவதற்காக அவர் சென்னைக்கு பேருந்தில் பயணம் செய்தார். கல்பனாவை விரும்பத்தக்க பதவிக்கு தேர்வு செய்ததன் மூலம், சாதாரண பின்னணியில் உள்ள திமுக தொண்டர்கள் அங்கீகரிக்கப்பட்டு பொறுப்புகள் வழங்கப்படும் என்று திமுக தலைவர் தெரிவித்துள்ளார் என்று திமுகவினர் கூறுகின்றனர்.
கோவை மேயராகியுள்ள கல்பனா கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர், அதனால், துணை மேயர் பதவிக்கு நாயுடு சமூகத்தைச் சேர்ந்த ஆர் வெற்றிசெல்வனை வேட்பாளராக நிறுத்தி திமுக சமன் செய்துள்ளது. அதிமுகவின் முக்கிய தலைவரான எஸ்.பி. வேலுமணி உள்ள 92வது வார்டில் வெற்றிச்செல்வன் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதே போல, மாநகராட்சி மேயர் வேட்பாளர்களில் மற்றொரு சுவாரஸ்யமான வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ், அவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக இருந்த நிலையில் வேலையை விட்டுவிட்டு, அரசியலில் களம் இறங்ன்கினார். இவர் காஞ்சிபுரத்தில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எப்படியானாலும், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு வேட்பாளர்களை கடைசி நிமிடத்தில் சில மாற்றங்களை செய்துள்ளார். குறிப்பாக, சென்னை மாநகராட்சி துணை மேயராக உதயநிதிக்கு நெருக்கமான சிற்றரசு பட்டியலில் இருந்த நிலையில், உதயநிதிக்கு நோ சொல்லி மாற்றியுள்ளார். கடைசி நேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலில் திருத்தம் செய்வது ஜெயலலிதாவின் அதிரடி பாணி, அதை தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.