பா.ஜ.க-வுக்கு எதிரான கட்சிகள் ஆளும் மாநிலங்களில், பதவி வகிக்கும் ஆளுநர்களுக்கும் அந்த மாநில அரசுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆளும் தி.மு.க அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, ஆளுநர் ஆர்.என். ரவி மாநிலத்தில் போட்டி அரசாங்கம் நடத்துவதாக குற்றம் சாட்டி வருகிறது. அதே போல, காவி ஆடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படம் பகிர்ந்தது, ஜி.யு. போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பை விமர்சித்தது, சனாதனம் குறித்த கருத்து, மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தியது என பல விவகாரங்களில் மோதல் நிலவி வருகிறது.
அதே போல, தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனுக்கும் தெலங்கானாவில் அம்மாநில முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
அதே போல, கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுக்கும் அம்மாநில ஆளுநர் ஆரீஃப் முகமது கானுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரள அரசால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார் என்று சி.பி.எம் குற்றம்சாட்டியது.
கேரள ஆளுநர் ஆரீஃப் முகமது கானுக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தது. அப்போது, பஞ்சாப், தமிழ்நாடு மாநில அரசுகள் ஆளுநர்களான பன்வாரிலால் புரோஹித், ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஆளுநர்களுக்கு எதிராக கடுமையான கருத்துகளை முன்வைத்தது. இருப்பினும், இந்த மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
அதே நேரத்தில், தமிழ்நாடு அரசு மற்றும் கேரள அரசு ஆகிய இரு மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளதாகவும் உரிய நிதியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது அமைச்சரவை அமைச்சர்கள், எல்.டி.எஃப் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் பிப்ரவரி 8-ம் தேதி கேரளா ஹவுஸில் இருந்து ஜந்தர்மந்தர் வரை பேரணியாகச் சென்று, தங்கள் மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியைத் விடுவிக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என்று கடந்த ஜனவரி 16-ம் தேதி அறிவித்தார்.
அதன்படி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது அமைச்சரவை அமைச்சர்கள், எல்.டி.எஃப் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள், மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பிப்ரவரி 8-ம் தேதி போராட்டம் நடத்த உள்ள நிலையில், கேரள அமைச்சரவைப் போராட்டத்தில் தி.மு.க-வும் பங்கேற்கும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
டெல்லியில் நாளை மறுநாள் ( பிப்ரவரி 8) கேரள அமைச்சரவை நடத்தவுள்ள போராட்டத்தில், தி.மு.க.வும் பங்கேற்கும் என தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
கூட்டுறவுக் கூட்டாட்சியை நிலைநாட்டி, மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் வரை நம் உரிமைக்குரல் ஓயாது. உயிர்த்தீயாய்ச் சுடர்விடும் மாநில சுயாட்சி முழக்கத்தைப் பாசிச பா.ஜ.க-வால் ஒருபோதும் அணைத்துவிட முடியாது. நிதி, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் மாநிலங்களுடைய உரிமைகள் நிச்சயம் நிலைநாட்டப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“