/indian-express-tamil/media/media_files/2025/06/05/DDBWJ5SifxhxaocluBQW.jpg)
பசுமைப் பொருளாதாரமே இலக்கு: உலக சுற்றுச்சூழல் தின விழாவில் ஸ்டாலின் பேச்சு
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரசு சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வனத்துறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
காடுகள் என்றால் மேப்பில் உள்ளதை போன்று பச்சை திட்டு என யாரும் நினைத்து விடக்கூடாது. காடுதான் புவி மூச்சுவிட உதவும் நுரையீரல், காடுகளை எளிதாக நினைக்க கூடாது. நாம் வாழும் பூமி கடும் நெருக்கடியில் உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
கடந்த 4 ஆண்டுகளாக தொலைநோக்குடன் பல முன்னெடுப்புகளை தமிழக அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது. இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக எந்த மாநிலத்திலும் இவ்வளவு திட்டங்கள் கிடையாது. ராம்சார் அங்கீகாரம் பெற்ற 21 ஈர நிலங்கள் பெற்ற மாநிலம் தமிழ்நாடு என சாதனை பெற்றுள்ளோம். இப்போது நாம் செய்யும் செயல்களை பொறுத்துதான் குழந்தைகளின் எதிர்காலம் அமையும்.
தமிழ்நாட்டில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். சதுப்பு நில காடுகளை மீட்டு எடுத்திருக்கிறோம். பசுமை இயக்கம் மூலம் 10 கோடிக்கு மேலான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. புதிய அலையாத்தி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. வனப்பரப்பை அதிகரித்துள்ளோம்.
அருகி வரும் உயிரினங்களை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம். யானைகள், புலிகள் போன்ற வன உயிரினங்களை பாதுகாப்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது தமிழகம். காடுகளின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் வனத்துறையினர். 7 வன உயிரின காப்பகங்கள் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. 1 ட்ரில்லியன் பொருளாதாரம் என்பது பசுமை பொருளாதாரமாக இருக்க வேண்டும் என்பதுதான் இலக்கு.
2021ல் பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்து போராட மீண்டும் மஞ்சப்பை திட்டம் உருவாக்கினோம். நெகிழி மாசுபாட்டை ஒழிப்போம் என்பதுதான் இந்தாண்டின் சுற்றுச்சூழல் விழாவுக்கான மையக்கருத்து. வீட்டை விட்டு வெளியேறும்போது செல்போன் சார்ஜ் போட்டு எடுத்து செல்வதைபோல், மஞ்சப்பை எடுத்துச் செல்ல வேண்டும். ஐரோப்பிய நாடுகளை போல் நமது நாடு மாற வேண்டும் என்றால் அந்த மக்கள் போல் நாமும் சுய ஒழுக்கத்துடன் மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.