AM, PM பாக்காத CM என்ற போஸ்டர் அடித்திருந்தார்கள். ஆனால் நான் MM CM ஆக இருக்க வேண்டும், அதாவது மினிட் டூ மினிட் சிம் ஆக இருக்க ஆசைப் படுகிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரையில் பேசினார்.
மதுரையில் நடைபெற்ற வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி மகனின் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திவைத்தார்.
இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, தமிழக அமைச்சர்கள் பொன்முடி, கண்ணப்பன், பிடிஆர் பழனிவேல் ராஜன், ஏ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, கா.ராமச்சந்திரன், பெரிய கருப்பன், மா.சுப்ரமணி, மஸ்தான், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சக்ரபாணி, மெய்யநாதன், கயல்விழி செல்வராஜ், மனோ.தங்கராஜ், அன்பின்மகேஷ், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தத் திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் வகையில் செயல்பட கூடியவர் பி.மூர்த்தி, அமைச்சரவை குறித்து பேசிக்கொண்டிருந்தபோது மூர்த்திக்கு அமைச்சர் வழங்குவதாக முடிவெடுத்தோம்.
அப்போது படிக்காதவர், கோபக்காரர் எப்படி அமைச்சர் வழங்குவதை யோசித்து அச்சத்தோடு வணிகவரித்துறையை கொடுத்தோம், அச்சப்பட்டோம் ஆனால் பொறுமையின் சிகரமாக மாறி சிறப்பாக செயல்படுகிறார்.
இப்போது நிதிச்சுமை உள்ளது, தற்போது வணிக பதிவுத்துறை வரலாற்றில் 13 ஆயிரத்தி 913 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது, பத்திர பதிவு்அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை, திங்கள் தோறும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்காக சட்ட திருத்தம் குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே இது போன்ற சாதனை செய்யப்பட்டுள்ளதால் மற்ற மாநிலங்கள் இது குறித்து கேட்கின்றனர்.
மூர்த்தி பெருசா கீர்த்தி பெருசா என கேள்வி எழுப்பினால் எனக்கு கீர்த்திலாம் தெரியாது ஆனால் எனக்கு மூர்த்தி தான் பெரியதாக தெரிகிறார்.
ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளில் இருந்து அனைவரும் ஓயாமல் மக்கள் பணி ஆற்றிவருகிறோம். AM , PM பாக்காத சிஎம் என MM CM ஆக இருக்க வேண்டும் மினிட் டூ மினிட் சிம் ஆக இருக்க ஆசை அப்படி இருந்து CM நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என பாடுபடுகிறோம்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil