Advertisment

பா.ஜ.க-வை வீழ்த்தாவிட்டால்… தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது - மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
MK Stalin, If BJP is not defeated, no one can save not only Tamil Nadu also India, பா.ஜ.க-வை வீழ்த்தாவிட்டால் தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது, மு.க.ஸ்டாலின், திமுக, திருச்சி, MK Stali, DMK, Trichy, BJP, Tamil Nadu, India

மு.க. ஸ்டாலின்

பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

திருச்சியில் நடந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில், தி.மு.க., தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பேசியதாவது:

திருச்சிக்கும் திமுகவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. 1957-ல் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தான் நாம் தேர்தலில் போட்டியிடலாம் என திட்டமிட்டோம். திருச்சியை திமுகவின் பாடி வீடு என அண்ணாவும், திருச்சி திமுகவின் தீரர்களின் கோட்டை என மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரும் சொல்வதுண்டு. கழகத்தின் தீரர்களின் கோட்டைதான் திருச்சி.

1971-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் தான் கலைஞர் அவர்கள் நம் கொள்கை முழக்கங்களை வெளியிட்டார். அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீர்வோம், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என ஐம்பெரும் முழக்கங்களை உருவாக்கித்தந்தார்கள்.

மிக முக்கிய மாநாடுகளை தலைவர் கலைஞர் திருச்சியை தேர்ந்தெடுத்துதான் நடத்துவார். திருச்சியில் பல்வேறு மாநாடுகள் ஆட்சிக்கு திருப்புமுனையாக அமைந்திருக்கின்றது கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த கூட்டம்தான் தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக இருந்தது. 10 நாட்களில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை நடத்திட வேண்டும் என திட்டமிட்ட நொடியே நான் நடத்துகிறேன் என பிரம்மாண்டமான நடத்திக் காட்டியவர் அமைச்சர் நேரு என புகழ்ந்து தள்ளினார்.

தி.மு.க-வின் 15 மாவட்டங்களில் இருந்து, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் வந்திருக்கின்றீர். நவீன தமிழகத்தை நாம் எடுத்த முயற்சிகள், திராவிட மாடல் ஆட்சி ஆகியவற்றை மனதில் வைத்து செயல்பட வேண்டும். திராவிட இயக்கம் துவங்கி, 75ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவையும் கொண்டாடி வருகிறோம்.

புதிதாக ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை முடிந்துள்ளது. இந்நிலையில், லோக்சபா தேர்தலை எதிர்க் கொள்ள இருக்கிறோம். தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி என்பதை அடிப்படையாக மனதில் கொண்டு கடமையாற்றி வருகிறோம்.கொரோனா முதல் அலையின் போது, தி.மு.க., ஆட்சியில் இல்லை. அதில், தி.மு.க.,வினர் சிலரை இழந்த போதிலும், முழுவீச்சில் நிவாரணப்பணி செய்யப்பட்டது.

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மீதுள்ள நம்பிக்கையில் தான், லோக்சபா தேர்தலில், ‘நாடும் நமது, நாற்பதும் நமது’ என்று முழங்கி இருக்கிறேன். வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை பின்பற்றி, வெற்றி ஒன்றே உங்களின் இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். ஓட்டுச் சாவடி பொறுப்பாளர்கள் அனைவரும், திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் என்ற புத்தகத்தை படித்து, அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மக்களுக்கு தேவையானவற்றை கண்டறிந்து, அதனை நிறைவேற்றிக் கொடுங்கள். கட்சியின் உயர்மட்ட மாவட்ட நிர்வாகிகள், அமைச்சர்கள் போன்றவர்கள் ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களின் கோரிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொறுப்பாளர்கள் கொண்டு வரும் தகுதியான கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றித் தரப்படும்.

எந்தக் கொம்பனும் குறைசொல்ல முடியாத அளவுக்கு, அனைவருக்கும் பொதுவான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் குறைகள் இருக்கலாம்; ஆனால், ஆட்சியில் எவனாலும் குறைகள் கண்டுபிடிக்க முடியாது. மக்கள் நம் ஆட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். உங்களுடைய பரப்புரையால், அவதுாறுகள் எல்லாம் சுக்குநுாறாக நொறுங்கிப் போகும். பரப்புரை பாணி மாறி விட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சமூக ஊடங்களில் கணக்கு துவங்கி, நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் அவதுாறுகளுக்கு பதில் சொல்லுங்கள். எதையாவது சொல்லி திசை திருப்புவதற்கு பலியாகி விடக்கூடாது. தெரிந்தோ தெரியாமலோ தமிழக கவர்னர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அவரை மாற்ற வேண்டும் என்று கேட்கவில்லை. தேர்தல் வரை அவரே இருக்கட்டும். நமக்கு ஓட்டுக்கள் அதிகரிக்கும். யார் ஆட்சி வர வேண்டும் என்பதை விட, யார் ஆட்சியில் இருக்கக் கூடாது, என்பது தான் முக்கியம். இந்தியாவின் கட்டமைப்பை பா.ஜ., கட்சி சிதைத்து விட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது. அதனால், இந்தியா முழுமைக்கும் நம் அணி ஆட்சிக்கு வர வேண்டும். பா.ஜ., ஆட்சி நீடித்தால், ஜனநாயகம், சமூக நீதி, அரசியல் அமைப்பு சட்டம் இவற்றை காப்பாற்ற முடியாது.

பழனிச்சாமி போன்ற ஊழல் பேர்வழிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு, பிரதமர் ஊழலை பற்றி பேசுகிறார், பேசலாமா? ஊழல் காரணமாக, கர்நாடகா மக்கள் விரட்டியடித்த சம்பவம் மறந்து விட்டதா? அவர்களை, இந்த தேர்தலில் முழுமையாக வீழ்த்தியாக வேண்டும். தமிழகத்தில் 40 தொகுதி போனாலும், மற்ற வடமாநில எம்.பி.,க்களை வைத்து ஆட்சியை பிடித்து விடலாம் என்று தப்புக் கணக்கு போடுகின்றனர். பல்வேறு மொழி, பல்வேறு சிந்தனை கொண்டவர்களுக்கு எதிரான கட்சி பா.ஜ., ஒற்றை கட்சி ஆட்சி அமைந்தால், ஒருவர் கையில் அதிகாரம் சென்று விடும். அதனால், இந்த தேர்தலில் பா.ஜ., வீழ்த்தப்பட வேண்டும். அதற்காக, 26 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி தான் இந்தியாவை காப்பாற்றப் போகிறது. இதை, பிரதமர் மோடியால் தாங்கிக் கொள்ள முடியாமல், ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வது போல், இது வாரிசுகளுக்கான கட்சிதான். ஆரியத்தை வீழ்த்த புறப்பட்ட திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள், என்பதை தைரியமாக, பெருமையுடன் சொல்லமுடியும். தமிழகத்தை, தமிழக மக்களை மட்டுமின்றி மற்ற மாநிலங்களையும், மணிப்பூர் போல் ஆகிவிடாமல் காப்பாற்ற வேண்டும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் போர்ப்படை தளபதிகள் நீங்கள். உங்களில் ஒருவனான நான், உங்களை நம்பி, லோக்சபா தேர்தலை ஒப்படைத்திருக்கிறேன். இந்தியா வெல்லும். அதை 2024 தேர்தல் சொல்லும் எனப் பேசினார்.

இந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம் ஆர் கே பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திமுக எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்துக்கொண்டனர்.

செய்தி: க. சண்முகவடிவேல்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment