சட்டமன்றத் தேர்தலில் மிஷன் 200; திமுகவினருக்கு ஸ்டாலின் நிர்ணயித்த இலக்கு

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கான வியூகத்தை நாங்கள் அமைத்திருந்தாலும் நீங்களும் ஒரு தனி வியூகம் அமைக வேண்டும் என்று கூறினார்.

mk stalin, dmk, திமுக, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், மிஷன் 200, முக ஸ்டாலின், dmk district secretaries meeting, mission 200 for victory, tn assembly elections, சட்டமன்றத் தேர்தல் 2020

திமுக மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக  200க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதற்காக மிஷன் 200 என்பதை இலக்காக கொண்டு உழைக்க வேண்டும்” என்று க்கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “இந்த கலந்துரையாடல் கூட்டத்தை நாம் மிக முக்கியமான காலகட்டத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த அரங்கத்தில் 1659 பேர் கூடி இருக்கிறீர்கள். இவர்களிடம் தான் தமிழகத்தின் 234 தொகுதியும் அடங்கியிருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. நம்மைத் தாண்டி நமக்கு 2 பலம் இருக்கிறது. ஒன்று அண்ணா, மற்றொன்று கலைஞர், அவர்கள் இருவரும் நமக்கு உள்ளே இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து அமைய இருக்கக்கூடிய ஆட்சி திமுக ஆட்சிதான். நம்மால்தான் தமிழகத்தை வெல்லமுடியும்; தமிழகத்தை ஆள முடியும்; தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களை சாதனைகளை படைத்திட முடியும். அதில் யாருக்கும் சந்தேகம் இருக்க போவதில்லை.

பொதுக்குழு கூட்டமாக இருந்தாலும் செயற்குழு கூட்டமாக இருந்தாலும் மாவட்ட செயலாளர்கள் கூட்டமாக இருந்தாலும் நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது என்னவென்றால் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். ஆனால், அந்த வெற்றியை மற்றவர்கள் நம்மை சாதாரணமாக பெறுவதற்கு விடமாட்டார்கள். மந்திரத்தால் மாங்காய் பழுத்துவிடும் என்பது போல் நாம் சாதாரணமாக வெற்றியைப் பெற்றுவிட முடியாது. அதற்கான செயலை உழைப்பை நாம் எந்த அளவுக்கு முடிக்கு விடுகிறோமோ அந்த அளவுக்குதான் நாம் முழுமையான வெற்றியை பெறக்கூடிய வாய்ப்பு வாய்ப்பை பெற்றுத் தரும்.

உங்களுடைய சக்தியை நீங்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். அப்படி கொடுத்தால் மட்டுமே இந்த முழு வெற்றியை நாம் பெற்றிட முடியும். ஒரு கட்சி ஆட்சி அமைக்க 117 இடங்கள் போதும். ஆனால், அந்த 117 இடத்தை பெறுவதற்காக நாம் இவ்வளவு உழைப்பு உழைக்க வேண்டிய அவசியமில்லை. 117 இடங்களுக்காக நாம் கட்சி நடத்தவில்லை; அப்படி நடத்தினால் நமக்கு பெருமை இல்லை. அண்ணா மறைவுக்குப் பிறகு 1956ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தலைவர் கலைஞர் தலைமையில் நடந்த தேர்தலில் திமுக 184 இடங்களில் வெற்றி பெற்று ஒரு பெரிய சரித்திர சாதனையை படைத்தது. அந்த வெற்றியை நாம் அடைய வேண்டும். 96 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் பெற்ற வெற்றியை இப்போது நாம் அடையவேண்டும். 2004ம் ஆண்டு தேர்தலில் பெற்ற வெற்றியை நாம் அடைய வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதி நீங்கலாக அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்ற வெற்றிதான் உண்மையான வெற்றி, முழுமையான வெற்றி. நாம் அந்த வெற்றியை அடைய வேண்டும். அந்த வெற்றிகளை பெறுவதற்கு என்னென்ன வழியை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்குதான் இந்த கூட்டத்தை கூட்டி இருக்கிறோம்.

அத்தகைய வெற்றியை முழுமையாகப் பெறுவதற்கு நீங்கள் எல்லாம் முழு முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு உங்கள் எல்லோருக்கும் ஒரே ஒரு பொது நோக்கம் இருக்க வேண்டும். இந்த தேர்தலில் யார் வேட்பாளர் என்றால் உதயசூரியன் தான் வேட்பாளர்; யார் வேட்பாளர் என்றால் கலைஞர் தான் நம் வேட்பாளர் என்ற ஒற்றை எண்ணம் தான் நம் உள்ளத்தில் இருந்திட வேண்டும்.

சட்டமன்றத் தேர்தலில் 200 பேர் சட்டமன்ற மன்ற உறுப்பினர் ஆவதற்கும் 30 பேர் அமைச்சராவதற்கும் இந்த தேர்தல் அல்ல என்பதை முதலில் மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அப்படி நினைத்திருந்தால் அதை மறந்து விடுங்கள். திமுக ஆட்சி மலர வேண்டும். அதுதான் நமது கொள்கையாக இருக்க வேண்டும். கலைஞருடைய கனவு நிறைவேற வேண்டும.

நாம் வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்காமல் நம்மை சுற்றி இருக்கின்றவர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக நாம் ஆட்சிக்கு வந்துவிட முடியும். ஒரு கை ஓசை ஆகாது; தனி மரம் தோப்பாகாது; தனிவீடு ஊராகது; தனி மனிதன் குடும்பமாக மாட்டான்; நான் என்பதை விடுங்கள் நாம் என்று பாருங்கள் நிச்சயம் நாம் அந்த வெற்றியை அடைந்து விட முடியும்.

பொதுவாக சிலர் பேசும்போது சொல்வார்கள் வாழ்வா, சாவா என்கிற மாதிரி சொல்வார்கள். அந்த உதாரணமே தவறானது என்பது தான் என் கருத்து. வாழ்வதற்காக முயற்சி செய்யாதவர்கள்தான் அப்படிச் சொல்கிற சமாதானம். வாழ்வதற்கு தான் அனைவரும் முயற்சிக்கிறார்கள்.

தமிழகத்தை வாழ வைப்பதற்கான தேர்தல் இது. ஐந்து முறை ஆட்சியிலிருந்த நாம் என்று இன்றும் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆறாவது முறையும் நாம் ஆட்சிக்கு வந்தோம் என்ற பெருமையை நாம் பெற்றாக வேண்டும். நாம் இந்தமுறை அடையும் வெற்றி ஐந்து முறை பெற்ற வெற்றிக்கு சமமானது என்பதன் உண்மையான பொருளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை எல்லோரும் நீங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

மத்தியிலே பாஜக ஆட்சி அதன் அதிகாரம் பலம் வேற; இன்னொரு பக்கம் மாநிலத்தில் அதிமுக ஆட்சி அதனுடைய பணபலம் மற்றொரு பக்கம். இந்த இரண்டு பேருக்கும் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து ஊடகங்களும் நமக்கு எதிரான செய்திகளை போடக்கூடியவர்களாக மட்டுமல்லாமல், பாஜகவின் ஊதுகுழல்களாகவும் அதிமுக ஊதுகுழலாக அனைத்து ஊடகங்களும் மாறிவிட்டது என்பது இன்னொரு பக்கம். இரு முனைத் தாக்குதல் அல்ல நாம் மும்முனைத் தாக்குதலில் இப்போது மாட்டிக் கொண்டிருக்கிறோம். இது ஒன்றும் திமுகவிற்கு புதிது அல்ல. இதை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

நாம் புதுப்புது அஸ்திரங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் எதிர்கொள்ள முடியாத புதுசு புதுசா பலர் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். பலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க செய்கிறார்கள். எல்லா சதிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இப்படி தாக்குதல் நடத்துகிறார்கள் என்று நாம் பலவீனமாகி விடக்கூடாது; சோர்ந்து விடக்கூடாது. மேலும், உழைக்க வேண்டும் ஆறாவது முறை வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஆறு மடங்கு உழைக்க வேண்டும்.

கலைஞர் சொல்வது போல உண்மையான வீரனுக்கு தெரியவேண்டியது கிளி என் கருத்து தானே தவிர, கிளியல்ல மரம் அல்ல, கிளை அல்ல, மரம் அல்ல கிளியின் கழுத்து மட்டும் தான் தெரிய வேண்டும். அது போல திமுகவினர் வைத்த குறி தப்பாது என்பதை நாம் நிரூபித்தாக வேண்டும்.

கடந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். நமக்கும் அவர்களுக்கும் ஒரே ஒரு சதவீதம் தான் வித்யாசம். ஒரு சதவீத வித்தியாசத்தில் நாம் ஆட்சிக்கு வர முடியாத சூழல் அன்றைக்கு ஆகிவிட்டது. காரணம் அன்றைக்கு நாம் வெற்றி பெற்று விடுவோம் என்று ஒரு மிதப்பு நம்மிடத்தில் இருந்தது. அதனால்தான் சில தொகுதிகளை நாம் இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அத்தகைய மிதப்பு நம் மனதில் இருந்து விடக்கூடாது. நமக்குள்ளே இருக்கக்க்கூடிய மாறுபாடுகள் வேறுபாடுகள் சண்டைகள் சச்சரவுகள் எல்லாவற்றையும் தயவுசெய்து தூக்கி எறியுங்கள். அவை தான் நம்முடைய வெற்றிக்கு முதல்படியாக அமையப்போகிறது.

திமுகவை யாரும் வீழ்த்த முடியாது திமுகவினர் தான் வீழ்த்த முடியும் என்று அன்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி சொன்னார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் உட்பகை தான் காரணம்.

கழக நிர்வாகிகள் உங்களுக்கு உள்ளே இருக்கக்கூடிய மாறுபாடுகளை வேறுபாடுகளை இன்றோடு இந்த இடத்தோடு விட்டாக வேண்டும்.

நம்மவர்களை நாமலே வீழ்த்த நினைத்தால் அது உண்ட வீட்டுக்கு செய்யக்கூடிய துரோகம். கலைஞர் அவர்கள் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள் சொந்த கட்சிக்கு துரோகம் செய்து ஆளுங்கட்சிக்கு அனுசரணையாக இருப்பவர்கள் அதைவிட மோசமானவர்கள் என்று மறந்துவிடக்கூடாது. இதை போன்ற குற்றச்சாட்டுகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

இந்த தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கான வியூகத்தை நாங்கள் அமைத்திருந்தாலும் நீங்களும் ஒரு தனி வியூகத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.

அவர்கள் நிற்கிற தொகுதியில் பணம் அதிக அளவில் விளையாடும். அதனால், நம் பலத்தால் வென்று காட்ட வேண்டும். தேர்தலுக்கு பணம் முக்கியம் தான். பணம் மட்டும் முக்கியம் அல்ல. பணம் கொடுத்தால் ஜெயித்து விடலாமா? பணம் கொடுத்து பல தேர்தலில் அதிமுக தோற்றுப் போயிருக்கிறது. அப்படியானால், அதையே காரணமாக சொல்லிக்கொண்டிருக்க முடியாது. பணத்தை கொடுத்து அதிமுக வெற்றி பெற்றுவிட்டது; போலீசை வைத்து அராஜகத்தை பயன்படுத்தி அதிமுக வெற்றி பெற்று விட்டது என்று சொல்லமுடியாது; சொல்லவும் கூடாது. ஆளும் கட்சியிடம் ஏராளமாக பணம் இருக்கிறது. ஏராளமாக கொள்ளை அடித்து வைத்திருக்கிறார்கள். கொள்ளை அடித்துக் கொண்டும் இருக்கிறார்கள். இந்த ஆட்சியிலே பயனடைய தொழிலதிபர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக பணம் கொடுப்பார்கள்.

பண பலத்தை உடைத்து நாம் வெற்றி பெற்றாக வேண்டும். பணமா, மக்கள் மனமா என்று கேட்டால் மக்கள் மனமாற்றத்தை பயன்படுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வேன். நீங்கள் மக்கள் மனதை மாற்ற வேண்டும். அதற்காகத்தான் இந்த பிரசார வியூகம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக்த்தில் 16,000 மேலாக உள்ள ஊராட்சி சபைகளை சந்திக்க வேண்டும். திமுக நிர்வாகிகள் எல்லாம் அந்த கூட்டங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். இந்த பிரச்சார வியூகத்தை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதிமுக ஆட்சி கடந்த பத்து ஆண்டுகளாக இருக்கிறது. பத்து ஆண்டுகளாக இந்த ஆட்சி எந்த நன்மையும் செய்யவில்லை. உறுப்பினர்கள் தொகுதி பக்கமே வரவில்லை என்ற கோபம் மக்களிடம் இருக்கிறது அந்த கோபம் தான். தேர்தல் நேரத்திலே நமக்கு பயன்படப்போகிறது. தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் சந்தி சிரிக்க வைத்திருக்கிறார்கள். அந்த அவலங்களை சரிவுகளை தோல்விகளை மக்களுக்கு நாம் கொண்டுசேர்க்கும் வகையில் பிரச்சாரத்தை தொடங்கி ஆக வேண்டும.

மாவட்டக் கழகச் செயலாளர்கள், மாநகரக் கழகச் செயலாளர்கள், நகர – ஒன்றிய – கிளை – பகுதிக் கழகச் செயலாளர்கள் நடத்த இருக்கிறீர்கள். டிசம்பர் 23-ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து பத்து நாட்கள் உங்கள் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டு, பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அந்த கிராமத்தில் ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அதிமுகவை நிராகரிக்கும் எண்ணத்தோடு இருக்கும் மக்களிடம் அதை தீர்மானமாக நிறைவேற்றித் தர வேண்டிய பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை – குடிநீர் வசதி கிடைக்கவில்லை – பள்ளிகளில் வசதிகள் இல்லை – ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை – ரேசன் கடைகள் இல்லை; கடைகள் இருந்தாலும் பொருட்கள் இல்லை – முதியோர் பென்ஷன் கிடைக்கவில்லை – அரசு உதவித் தொகைகள் வரவில்லை – என்று அடுக்கடுக்கான கோரிக்கைகளை கிராமப்புற மக்கள் சொல்வார்கள். அவை அனைத்தையும் பொறுமையாக நீங்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

திமுக ஆட்சி அமைந்ததும் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், குறைகள் களையப்படும் என்ற நம்பிக்கையை நீங்கள் அவர்கள் மனதில் உருவாக்க வேண்டும்.

மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக விளக்கம் சொல்லுங்கள். திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது அந்த பகுதிகளுக்கு செய்த நன்மைகளை எடுத்துக் கூறுங்கள். இப்போது செய்யக்கூடிய பணிகளையும், ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் செய்யவுள்ள பணிகளையும் எடுத்துக் கூறுங்கள்.

ஒரு ஒன்றியச் செயலாளர், அந்த ஊருக்கு பிரச்சாரத்துக்கு வருகிறார் என்றால் கிளைச் செயலாளராக இருப்பவர், ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை அந்தக் கூட்டத்துக்கு அழைத்து வர வேண்டும். உங்கள் வீட்டுத் திருமணத்துக்கு அழைப்பதைப் போல – ஊர்த் திருவிழாவுக்கு அழைப்பதைப் போல அழைக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளர் மனதிலும் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற உணர்வை விதைக்க வேண்டும்.

அதிமுகவால் கடந்த பத்தாண்டு காலம் பாழாகிவிட்டது என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும். அதிமுகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று மக்கள் மனதில் உருவாக்க வேண்டும். இதுதான் முதல் படி. அதனால்தான் 234 தொகுதியும் உங்கள் கையில் இருக்கிறது என்று நான் சொன்னேன்.

கடந்த ஆறு மாத காலம் கொரோனா பாதிப்பு காலம்; அந்த நேரத்திலும் நாம் சும்மா இல்லை; ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மக்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்தோம்.

கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவிவரும் காலமாக இருந்தாலும், ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான மக்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்திருக்கிறோம். உயிரையே பணயம் வைத்து பணியாற்றிய உங்களுக்கு நன்றி. அப்படிப்பட்ட பணிகளைச் செய்த நீங்கள், இந்தப் பணியையும் வெற்றிகரமாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையை 20-க்கும் மேற்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் நடத்தி வருகிறார்கள். அனைத்து இடங்களிலும் மக்கள் பெரும் வரவேற்பு தருகிறார்கள்.

அநேகமாக ஜனவரி முதல் வாரத்தில் இருந்து என்னுடைய பிரச்சாரப் பயணத்தை தொடங்க இருக்கிறேன். தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்றும் சொல்கிறார்கள். அதனால், நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும் என்பதற்காக இப்போதே தயாராகிறோம்.

யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை தொகுதி, என்னென்ன தொகுதி, யார் வேட்பாளர் – என்பதை எல்லாம் தலைமை முடிவு செய்து கொள்ளும். வெற்றி பெறக்கூடியவர்கள்தான் வேட்பாளர்கள். உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது, ‘வெற்றி’ என்ற ஒற்றை வார்த்தைதான்!

அந்த வெற்றிக்கான சூத்திரங்களை மட்டும் பயன்படுத்துங்கள். எந்த வாக்குப்பெட்டியைத் திறந்தாலும் உதயசூரியன் உதிக்கவேண்டும். அப்படி ஒரு நிலையை உருவாக்க உங்களால் முடியும். உங்களால் மட்டுமே முடியும். அதிமுகவை நிராகரிக்க வைப்போம். திமுகவை ஆட்சியில் அமர வைப்போம்.

நம்முடைய இலக்கு 200 தொகுதிகளுக்கு மேல் தான் என்று நாம் உறுதி எடுத்தாக வேண்டும். ‘மிஷன் – 200’ என்ற இலக்கை நோக்கி நாம் சென்றாக வேண்டும்., 200-க்கு ஒரு தொகுதி அல்ல; ஒரு இஞ்ச் கூட குறையக் கூடாது. இன்று முதல் ஒவ்வொரு 24 மணிநேரமும் உழைத்தால்தான் 200-க்கும் மேல் என்பது சாத்தியம்.” இவ்வாறு மு.க.ஸ்டாலின் என்று கூறினார்.

முன்னதாக, அதிமுகவை நிராகரிப்போம் என்ற திமுகவின் தேர்தல் பரப்புரை வீடியோ வெளியிடப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mk stalin says mission 200 for victory in tn assembly elections 2020 in dmk district secretaries meeting

Next Story
காந்திய மக்கள் இயக்க தலைவர் போக்சோ சட்டத்தில் கைது; குண்டர் சட்டமும் பாய்ந்ததுGandhian movement leader arrested under POCSO act, காந்திய மக்கள் இயக்க தலைவர் கைது, போக்சோ சட்டத்தில் காந்திய மக்கள் இயக்க தலைவர் கைது, Gandhian movement leader arrested under Goondas Acts, Gandhian movement leader arrested in erode, erode district, ஈரோடு, குண்டர் சட்டம், pocso act
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com