4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களைச் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி- மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு மனநிறைவு தருகிறது என்று கூறினார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துபாய் பயணத்தை முடித்த பிறகு, 4 நாள் பயணமாக புதன்கிழமை மாலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அங்கே பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை சந்திப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி, டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று பிரதமர் மோடியை சந்தித்து, டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதே போல, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது டெல்லி பயணத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் சந்தித்தது குறித்தும் தமிழகம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதலமைச்சரான பின் எனது 3வது டெல்லி பயணம் இது. என்னை சந்திக்க நேரம் ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி.
பிரதமருடனான இன்றைய சந்திப்பின்போது அவரிடம் தமிழகம் சார்ந்த 14 அம்ச கோரிக்கைகளை வழங்கினேன். கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
குறிப்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமரிடம் அழுத்தமாக பதிவு செய்துள்ளேன். நீட்விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதை சுட்டிக்காட்டினேன்.
மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளோம். மதுரவாயல் உயர்மட்ட சாலையை ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்கும்படி பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
இலங்கை தமிழர்களுக்கு உணவு, மருந்து வழங்க அனுமதி கோரியுள்ளோம். இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
கோரிக்கைகளை பொறுமையாக கேட்ட பிரதமர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். பிரதமர் உடனான சந்திப்பு மனநிறைவு தருவதோடு மகிழ்ச்சியையும் அளிக்கிறது. டெல்லியில் உள்ள தமிழ் மாதிரி பள்ளிகளை நாளை பார்வையிட உள்ளேன்.
தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூறி உள்ளேன். தமிழகத்தில் டிஆர்டிஓ ஆய்வுக்கூடம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தினேன்.
ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியிடம் தாம்பரம் செங்கல்பட்டு இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். சென்னை மதுராவாயல் சாலையை ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்க வலியுறுத்தினேன்.” என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.