scorecardresearch

கச்சத்தீவை மீட்க இதுதான் தருணம்; மோடி முன்னிலையில் ஸ்டாலின் பேச்சு

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கையிடம் இருந்து கச்சத் தீவை மீட்டெடுப்பதற்கு இதுதான் தருணம் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்திக் கூறினார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கையிடம் இருந்து கச்சத் தீவை மீட்டெடுப்பதற்கு இதுதான் தருணம் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்திக் கூறினார்.

சென்னை வருகை தந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று (மே 26) நடைபெற்ற அரசு விழாவில், ரூ.31,400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலை உரையாற்றினார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் மக்களின் பேராதரவோடு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கக்கூடிய முதல் அரசுவிழா இது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை தொடக்கிவைப்பதற்காக வருகை தந்துள்ளமைக்காக தமிழ்நாடு மக்கள் சார்பிலும், தமிழ்நாடு முதல்வர் என்ற அடிப்படையிலும் பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று தமிழ்நாட்டில் 5 நெடுஞ்சாலைத் துறை திட்டங்களும், 3 ரயில்வே திட்டங்களும் பைப்லைன் திட்டம் மற்றும் நகர்ப்புற வசதித் திட்டத்தின் மூலம் 1,152 வீடுகளின் திறப்பு விழாவும் நடைபெறுகிறது. இவை அனைத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான திட்டங்கள்.

தமிழ்நாடு பல்வேறு வகைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, திறன்மிகுஆற்றல் என பல்வேறு வகையிலும் தமிழ்நாடு ஒரு சிறப்பான மாநிலமாக நமது நாட்டின் வளர்ச்சியிலும் ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களையும் தமிழ்நாடு மிக முக்கிய பங்களிப்பை தருகிறது என்பது பாரத பிரதமர் அவர்களுக்கும் தெரியும் என்று நான் நம்புகிறேன்.

சிலவற்றை இங்கே எடுத்துரைக்க வேண்டும் என்றால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு. இது ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு; மொத்த உற்பத்தி ஏற்றுமதியில், இந்தியாவுடைய மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 விழுக்காடு; ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு; கார்கள் ஏற்றுமதியில் உற்பத்தி 32.5 விழுக்காடு; தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு. ஆனால், ஒன்றிய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டிற்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.12 விழுக்காடு மட்டுமே. எனவே, தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கும் வளர்ச்சிக்கும் அளிக்கக்கூடிய பங்களிப்புக்கு ஏற்ப ஒன்றிய அரசு திட்டங்களிலும் நிதியிலும் தனது பங்களிப்பை உயர்த்தி அளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அதுதான் உண்மையான கூட்டுறவு கூட்டாட்சி ஆக அமையும்.

ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களில் மாநில அரசின் பங்களிப்பு மகத்தானது. எடுத்துக்காட்டாக நெடுஞ்சாலைத் துறையில் நமது நாட்டிலேயே அதிகமான மூலதன செலவு மேற்கொள்ளக்கூடிய மாநிலங்களில் ஒன்றாக நமது தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளுக்காக தமிழ்நாட்டில் தற்போது 44 ஆயிரத்து 762 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்க கூடிய நிலையில் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு இந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ள தொகை 18 ஆயிரத்து 218 கோடியே 91 லட்சம் ரூபாய். எனவே, சாலை கட்டமைப்பில் உங்களோடு நாங்கள் இணைந்து பணியாற்றுவதில் முனைப்பாக இருக்கிறோம். மேலும், அதிக அளவிலான திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும்.

இப்படி நாம் இணைந்து நிறைவேற்றும் திட்டங்கள் குறித்து இரண்டு முக்கிய கருத்துக்களை நான் முன்வைக்க விரும்புகிறேன். ஒன்று இத்தகைய திட்டங்களை இந்திய அரசு தொடங்கும்போது தனது நிதி பங்கை அதிகமாக அளித்தாலும் காலப்போக்கில் தனது பங்கினை குறைத்து மாநில அரசு செலவு செய்ய வேண்டிய நிதி பங்கை உயர்த்தும் நிலையைப் பார்க்கிறோம்.

இரண்டாவது ஒன்றிய அரசு மாநில அரசின் நிதி பங்கை உயர்த்தும் நிலையைப் பார்க்கிறோம்.

ஒன்றிய மாநில அரசுகளின் பங்களிப்போடு பயனாளிகளின் பங்கையும் முன்னிறுத்தி பல திட்டங்கள் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இதில் அந்த தொகையை பயனாளிகள் செலுத்த முடியாதபோது மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிற மாநில அரசுதான் பயனாளிகளின் பங்களிப்பையும் சேர்த்து செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. இதனால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரிக்கிறது. எனவே, ஒன்றிய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் தொடக்கத்தில் குறிப்பிடக்கூடிய ஒன்றிய அரசின் பங்கானது திட்டம் முடியும் வரை தொடர வேண்டும் என்றும் பயனாளியினுடைய பங்களிப்போடு செயல்படுத்தக்கூடிய இடங்களில் அவர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்த முடியாதபோது ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து அதனை சமமாக ஏற்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டிற்கு பிரதமர் வருகை தந்து இருக்கக்கூடிய இந்த நேரத்தில் மேலும் சில முக்கிய கோரிக்கைகளை தமிழ்நாட்டின் மக்கள் சார்பாக இந்த நேரத்தில் நான் முன்வைக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் கடலோர மீனவ சமுதாய மக்களின் முக்கிய பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய வகையில், கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவ மக்களுடைய பாரம்பரிய மீன்பிடி பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க இது தகுந்த தருணம் என்பதை பிரதமருக்கு நான் நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

15.05.2022 வரை தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையானது 14 ஆயிரத்து 6 கோடி ரூபாய். இத்தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். பல்வேறு மாநிலங்களில் வருவாயானது முழுமையாக சீரடையாமல் இருக்கக்கூடிய நிலைமையில் ஜிஎஸ்டி இழப்பீடு காலத்தை ஜூன் 2022 பின்னரும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து தர வேண்டும் என்று நான் இந்த நிகழ்ச்சியில் வற்புறுத்திக் கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.
பழமைக்கும் பழமையாய் புதுமைக்கும் புதுமையாய் உலக செம்மொழிகளில் இன்றளவும் சீரிளமைத் திறத்தோடு உயிர்ப்போடு விளங்கக்கூடிய தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும் உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். இறுதியாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வான நீட் தேர்வை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இது குறித்து சட்டம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான அனுமதியை விரைந்து வழங்கிட பிரதமர் அவர்களை இந்த தருணத்தில் தமிழ்நாடு மக்கள் அனைவரின் சார்பில் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். இந்த கோரிக்கைகளில் இருக்கக்கூடிய நியாயத்தை நம்முடைய பிரதமர் அவர்கள் உணர்வார்கள் என்று நான் உளமாற நம்புகிறேன்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mk stalin says this is time to undertake katchatheevu island in the presence of pm modi