தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.12.2024) ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஈரோட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது; “ஈரோடு, இந்த மண் தான் தமிழ்நாட்டின் புதிய வரலாற்றுக்கான தொடக்கம்! காரணம், தந்தை பெரியாரைக் கொடுத்த மண் இந்த மண்! தந்தை பெரியார் அவர்கள் நமக்கு பேரறிஞர் அண்ணாவையும், முத்தமிழறிஞர் கலைஞரையும் கொடுத்திருக்கிறார். அவர்கள் இல்லாமல், திராவிட இயக்கம் இல்லை! இன்றைய வளர்ச்சி நிறைந்த அறிவார்ந்த தமிழ்நாடும் இல்லை! நாமும் இல்லை” என்று கூறினார்.
“சில நாட்களுக்கு முன்புதான், ‘ஈரோட்டு பூகம்பம்’ தந்தை பெரியார் நிகழ்த்திக் காட்டிய, ‘வைக்கம் புரட்சி’-யின் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கேரளத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடினோம். கேரள மக்கள் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியைப் பார்த்து பாராட்டுகிறார்கள். இந்த ஈரோடு மண்ணின் மைந்தரான தந்தை பெரியார் அமைத்த அடித்தளம் தான் அதற்குக் காரணம். பல புரட்சிகரமான தொடக்கம் விளைந்த இந்த ஈரோட்டு மண்ணில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன்” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் . ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய மு.க. ஸ்டாலின், “தந்தைப் பெரியாரின் பேரன் அவர். ஒன்றிய அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக மிகச் சிறப்பாக செயல்பட்டவர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள். அவருடைய இழப்பு ஈரோடு தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பு. இன்றைக்கு அவர் நம்மோடு இந்த மேடையில் இருந்திருந்தால் நம்முடைய திராவிட மாடல் அரசின், சாதனைகளை செயல்திட்டங்களைப் பற்றி எடுத்துச் சொல்லியிருப்பார். அவருக்கு இந்தக் கூட்டத்தின் வாயிலாகவும் என்னுடைய அஞ்சலியை நான் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.” என்று கூறினார்.
மேலும், “இந்த விழாவின் மூலமாக 951 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 559 புதிய திட்டங்கள் திறப்பு விழா நடைபெற்றிருக்கிறது. 133 கோடியே 66 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 222 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. 284 கோடியே 2 இலட்சம் ரூபாய் அளவுக்கான நலத்திட்ட உதவிகள் 50 ஆயிரத்து 88 பேருக்கு வழங்கப்படவிருக்கிறது. மொத்தமாக சொன்னால், ஆயிரத்து 368 கோடியே 88 இலட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களின் விழாவாக ஏற்பாடு செய்துள்ள ஈரோட்டு அமைச்சர் முத்துசாமி பாராட்டுகிறேன்” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.
கடந்த மூன்றாண்டு காலத்தில், ஈரோடு மாவட்டத்திற்கு திராவிட மாடல் அரசு செய்த பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பட்டியலிட்டுப் பேசினார். மேற்கு மண்டல மக்களின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை, கடந்த ஆகஸ்ட் 17-ம் நாள் தொடங்கி வைத்தோம். இதன்கீழ் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 357 ஏரிகளுக்கு நீர் வழங்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்துக்கான திட்டங்களை அறிவித்துப் பேசினார், மு.க. ஸ்டாலின் கூறுகையில், “முதலில், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் உங்கள் அரசின் முதல் அறிவிப்பாக நான் சொல்வது, ஈரோடு மாநகராட்சி, அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய சாலைகள் 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
இரண்டாவது அறிவிப்பு - ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு 15 கோடியே 37 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடமும், ஈரோடு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகத்திற்கு 8 கோடியே 3 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்களும் கட்டப்படும்.
மூன்றாவது அறிவிப்பு - சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட 50 கிராமங்கள், சென்னிமலை, சித்தோடு, நசியனூர், கே.சி.பாளையம் பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் 15 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். இதுமட்டுமல்லாமல், சத்தியமங்கலம் மற்றும் நம்பியூர் ஒன்றியங்களுக்கான கூட்டுக்குடிநீர்த் திட்டம், 27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பவானிசாகர் ஒன்றியத்திற்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.
நான்காவது அறிவிப்பு - அந்தியூர் ஒன்றியத்திலுள்ள கத்திரிமலைப் பகுதி மலைகிராம மக்களின் நீண்டகாலக் கனவை நிறைவேற்றும் வகையில், 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மின் இணைப்பு வசதிகள் வழங்கப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு – மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டத்தில் குரங்கன்பாளையம் நீர்ப்பாசன அமைப்புத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் உழவர்களுக்கு பலனளிக்கும் வகையில், 15 கோடி ரூபாய் செலவில், இந்தத் திட்டம் மேம்படுத்தப்படும்.
அடுத்து, ஆறாவது அறிவிப்பு - உயர்கல்வித் துறையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில், 10 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், உலகத் தரத்திலான விளையாட்டு மைதானம், நூலக வசதிகள் மற்றும் குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும்.
ஏழாவது அறிவிப்பு - ஈரோடு மாவட்டத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய 15 துணை சுகாதார நிலையங்களுக்கு, 6 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.
எட்டாவது அறிவிப்பு - பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் திருக்கோயில் மற்றும் வீர நாராயணப் பெருமாள் திருக்கோயில் பக்தர்களுக்கான வசதிகள், 10 கோடி ரூபாய் செலவில் அமைத்துத் தரப்படும். இவை எல்லாம் விரைவில் நிறைவேற்றப்படும்!
வெறும் அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, கண்டுகொள்ளாமல் போகும் முந்தைய அரசு இல்லை இது. சொன்னதை செய்வோம் என்று செய்து காட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நடக்கும் உங்கள் ஸ்டாலினுடைய திராவிட மாடல் அரசு இது” என்று கூறினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேலும் பேசுகையில், “இப்படி தொடர் திட்டங்களை தருகின்ற காரணத்தினால்தான், மக்களாகிய நீங்களும் எங்களுக்கு தொடர் வெற்றிகளை தந்து கொண்டிருக்கிறீர்கள்! இதை கடந்த கால ஆட்சியாளர்கள், அதாவது, தற்போது எதிர்க்கட்சியாக இருக்கின்றவர்களால், இந்த வெற்றிகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை…
அவர்களைப் பொறுத்தவரைக்கும் தி.மு.க. அரசு தொடர்ந்து திட்டங்களை அறிவிக்கிறார்களே, சொன்னபடி நிறைவேற்றுகிறார்களே, அதனால் அவர்களுக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவும் கிடைக்குதே என்று வயிற்றெரிச்சல் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய பழனிசாமி புலம்பிக்கொண்டே இருக்கிறார்” என்று சாடினார்.
தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், “ஒரு எதிர்க்கட்சித் தலைவர் ஆளும்கட்சியை விமர்சிக்கலாம். தவறு கிடையாது. நியாயமான புகார்களாக இருந்தால் சொல்லலாம். ஆனால், தி.மு.க. ஆட்சி மேல் குற்றம் சாட்ட எதுவும் இல்லாமல், எதுவும் கிடைக்காமல் பொய் சொல்லக்கூடாது. பழனிசாமி என்ற தனிநபராக அவர் பொய் சொல்லவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக சொல்கிறார். அது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.” என்று கூறினார்.
ஃபீஞ்சல் புயல் பாதிப்பில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுப் பேசிய மு.க. ஸ்டாலி, “ஒன்றிய அரசின் நிதி கூட வருகிறதா, வரவில்லையா என்பது பற்றியெல்லாம் காத்திருக்காமல், கவலைப்படாமல், மாநில அரசே உடனடியாக இது எல்லாவற்றையும் செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். இதை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல், இட்டுக்கட்டிய கற்பனைக் குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இன்றைக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
முன்னெச்சரிக்கை செய்யாமல் சாத்தனூர் அணையை திறந்துவிட்டார்கள் என்று ஒரு பொய்யை பரப்பினார். ஆனால், உண்மை என்ன? ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. கரைகளிலுள்ள கிராமங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அபாய எச்சரிக்கை அனுப்பப்பட்டது. முன்கூட்டியே எச்சரிக்கை செய்ததால்தான், பெரிய அளவில் உயிரிழப்புகளை நாங்கள் தவிர்த்திருக்கிறோம். இதுதான் உண்மை” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.