தி.மு.க குடும்பக்கட்சி தான். ஒற்றை கையெழுத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தி.மு.க குடும்ப கட்சி தான் என திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடி கிராமத்தில் தி.மு.க வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப்பட்டறை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “ஒளிமிகுந்த ஊரில் உங்கள் முகங்களையெல்லாம் பார்க்கும்போது உதயசூரியனை பார்ப்பது போல் தோன்றுகிறது. தினமும் காலை சூரிய ஒளியை பார்க்கும்போது ஏற்படும் உற்சாகம் உங்களை பார்க்கும்போது ஏற்படுகிறது. எனது சக்தியின் ரகசியமே நீங்கள்தான். தி.மு.க தொண்டர்கள் தான் எனக்கான உற்சாகம். திருவண்ணாமலையும் தீபமும் போலத்தான் திருவண்ணாமலையும் தி.மு.க.,வும், யாராலும் பிரிக்கமுடியாது. 2021 ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமைத்த ஊர் திருவண்ணாமலை. தி.மு.க.,வின் கோட்டையாக விளங்கும் ஊர் திருவண்ணாமலை.
பாராளுமன்ற தேர்தல் களம் நமக்காக காத்துக் கொண்டிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக் கனியை பறிப்போம். கடந்த மார்ச் மாதம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினோம். அப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். மாநிலம் முழுவதும் தேர்தல் பூத் கமிட்டிகளை அமைத்துள்ளோம். வாக்காளர் பட்டியலை வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சரிபார்க்க வேண்டும்.
வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரத்தை கட்சிக்காக ஒதுக்குங்கள். அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். யாருக்கு என்ன தேவையோ அதை பெற்றுக்கொடுங்கள். முதியோர் உதவித்தொகை உட்பட எந்த உதவி தேவையோ அதை கேட்டு உதவி செய்துக்கொடுங்கள். அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி புரியவையுங்கள்.
நமது திட்டங்களால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களும் ஏதோ ஒரு விதத்தில் பயனடைந்துக் கொண்டிருக்கிறது. அப்படி மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதனால் தி.மு.க ஆட்சி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
தி.மு.க ஆட்சிக்கு வந்து எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்று சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை தான் நாம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறோம் என்றும் மிகப்பெரிய பொய்யை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இந்த இரண்டரை ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியில் செய்த சாதனைகளை கூறவேண்டுமானால் எனக்கு தனியே 2 மணி நேரம் வேண்டும். அவ்வளவு சாதனைகள் படைத்துள்ளோம்.
மகளிர் உரிமைத்தொகை அ.தி.மு.க கொண்டுவந்த திட்டமா? பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அ.தி.மு.க கொண்டுவந்த திட்டமா? உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 கொடுப்பது பழனிச்சாமியின் திட்டமா? காலை சிற்றுண்டி திட்டம் யாருடையது அ.தி.மு.க திட்டமா? எடப்பாடி பழனிசாமி பச்சை பொய் பேசி வருகிறார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடைபெற்றதா? ஆட்சிக்கு வந்து ஆயிரம் நாட்கள் ஆகவில்லை, ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியிருக்கும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டின் நலன்களும், உரிமைகளும் பா.ஜ.க.,விடம் அடகு வைத்து காவு கொடுக்கப்பட்டது.
தி.மு.க குடும்பக்கட்சி தான். கோடிக்கணக்கான குடும்பங்களை வாழவைக்கும் கட்சி தி.மு.க. ஒற்றை கையெழுத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தி.மு.க, குடும்ப கட்சி தான். சம்பந்திக்கும், சம்பந்தியின் சம்பந்திக்கும் காண்ட்ராக்ட் கொடுத்து, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று ஓடிக்கொண்டிருக்கும் உங்களுக்கு, குடும்பக் கட்சி என்று விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.
வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி முழுமையாக தோற்கடிக்கப்பட இருக்கிறார். பா.ஜ.க.,வுடன் இருந்தால் டெபாசிட் கிடைக்காது என டெபாசிட்டை காப்பாற்ற தனியாக பிரிந்தது போல் உள்ளே வெளியே நாடகத்தை எடப்பாடி பழனிசாமி நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
சிறுபான்மை இனத்தவர் மீது திடீர் பாசம் பொங்குகிறது. குடியுரிமைச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமைச் சட்டம், முத்தலாக் என்று எல்லாத்தையும் கண்ணை மூடி ஆதரித்தவர் எடப்பாடி பழனிச்சாமி.
மக்களை பிளவுபடுத்தி, அடிமைப்படுத்தக்கூடிய பாசிச பா.ஜ.க.,வுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தல் களத்திற்கு திருவண்ணாமலை பாசறை கூட்டம் நல்ல வழிகாட்டியாக அமையட்டும். தீபம் தெரிவதை போல இந்தியாவுக்கு நம்பிக்கை ஒளி தெரிகிறது. இந்தியா வாழ்க இந்தியா கூட்டணி வாழ்க.” இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.