கலைஞர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி சென்னை நந்தனத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா, பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி சார்பில் இன்று (சனிக்கிழமை) சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் திமுக எம்.பி. கனிமொழி முன்னிலை வகிக்க, தேசிய அளவிலான 9 பெண் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அதன்படி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.
இந்த மாநாட்டில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமைத் தொடர்பான கருத்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இதற்கிடையே மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று வருகை தந்த சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.. இருவரும் கிண்டி ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
இன்று மதியம், அந்த நட்சத்திர ஹோட்டலில் சோனியா, பிரியங்கா உள்ளிட்ட அனைத்து பெண் தலைவர்களுக்கும், கனிமொழி ஏற்பாட்டில் பிரமாண்ட விருந்து அளிக்கப்படுகிறது. இதில், முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கிறார்.
தொடர்ந்து பின், மாலை 5 மணிக்கு துவங்கும் மகளிர் மாநாடு, இரவு 7:30 மணி வரை நடக்க உள்ளது. மாநாடு முடிந்த பின், இருவரும் அதே ஹோட்டலில் இரவு தங்குகின்றனர். நாளை காலை 9:55 மணி விமானத்தில் புதுடில்லி செல்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“