திருச்சியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சுயஉதவிக்குழு துறையை என் தோள் மீது சுமந்தேன், இப்போது அந்த துறையை உதயநிதியிடம் கொடுத்துள்ளேன் அதை மேம்படுத்த அவர் பாடுபடுவார் என்று கூறினார்.
திருச்சியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இந்த விழாவில் பங்கேற்று உள்ளார். அவர் இந்த துறைக்கு தான் புதியவர். உங்களுக்கு புதியவர் அல்ல. அவரை அமைச்சராக நியமிக்கும்போது விமர்சனங்கள் வந்தது. அந்த விமர்சனங்களுக்கு தன்னுடைய செயல்பாட்டின் மூலம் பதில் அளிப்பேன் என்றார். அவரிடம் ஏராளமான பொறுப்புகள், துறைகள் உள்ளது.
அவர் சிறப்பாக பணியாற்றி அந்த துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதை அவரிடம் நான் எதிர்பார்க்கிறேன்.
சோதனையின்போது தான் நம் வலிமை தெரியும். எந்த வித விமர்சனங்கள் வந்தாலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் தொடரும். எந்த வித விமர்சனங்கள் வந்தாலும் நம் திராவிட மாடல் அரசு இன்னும் வேகத்துடன் செயல்படும்.

உலகப்புகழோடு செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தினோம். புயல், மழை வந்தது. அது வந்ததே தெரியாத அளவுக்கு பணியாற்றினோம். நேற்று வீட்டில் இருந்தபோது என்னுடைய உதவியாளர் ஒரு துண்டு சீட்டை கொடுத்தார். அதாவது ஒரு ஆண்டில் நான் 8549 கி.மீ. பயணம் செய்துள்ளேன். 648 நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறேன். அதில் 541 அரசு நிகழ்ச்சி. 96 கட்சி நிகழ்ச்சி. 1 கோடியே 3 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளோம்.
இதற்கு மத்தியில் கொரோனா வந்தது. அப்போதும் மக்கள் பணி நிற்கவில்லை. நம்பர் 1 முதல்வர், நம்பர் 1 தமிழ்நாடு என்றாலும், இங்குள்ள ஏழை, விளிம்பு நிலை மக்களின் சிரிப்பும், மகிழ்ச்சியும் தான் எங்களின் இலக்கு. ஏழை எளிய, அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றக்கூடிய ஆட்சியாக நமது ஆட்சி செயல்பட்டு வருகிறது.
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற இந்த அரசின் சாதனைகள் தொடரும். மகளிர் சுயஉதவிக்குழு துறையை இதுவரை என் தோள் மீது சுமந்தேன். இப்போது அந்த துறையை உதயநிதியிடம் கொடுத்துள்ளேன். அதை மேம்படுத்த அவர் பாடுபடுவார் என்றார்.
செய்தி: க.சண்முக வடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“