திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவறாக கணக்கு சொல்வதாக கிண்டல் செய்து ஒரு வீடியோவை சிலர் பரப்பி வருகின்றனர். ஆனால், அது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்பதையும், உண்மையில் அவர் என்ன பேசினார் என்றும் தெரிந்துகொள்ளலாம்.
ஹேட்டர்ஸ்கள் வீடியோ எடிட்டிங் செய்து பதிவிடும் சில வீடியோக்களால் அரசியலில் ஒரு புயலையே உருவாக்கிவிடுகின்றனர். இதை ஆளும் கட்சி எதிர்க்கட்சி உதிரிக்கட்சிகள் என்று பாரபட்சமில்லாமல் அதன் ஆதரவாளர்கள் செய்யும் எடிட்டிங் வீடியோக்கள் பரபரப்பை உருவாக்கி விடுகின்றன. அதனை அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும் என்றால் அப்படியான சர்ச்சை வீடியோக்கள் வெளியாகும்போது, அதைப் பற்றிய உண்மைத் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டியது. அவசியம். அதுவரை உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினை ஆற்றாமல் அதைப் பரப்புவதில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
அப்படி ஹேட்டர்ஸ்களால் எடிட்டிங் செய்யப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ அவரை கூட்டல் கணக்கு தெரியாதவர் என்று அவதூறு செய்து வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், பொங்கலுக்கு அதிமுக அரசு ரேஷன் அட்டைக்கு 2500 ரூபாய் தருவதாக அறிவித்துள்ளது. அதனுடன் 1,500 ரூபாய் சேர்த்து 5,000 ரூபாயாக வழங்க வேண்டும் என்று தவறாக கணக்கு கூட்டி சொன்னதாக எடிட் செய்யப்பட்டுள்ளது. ஒரு எதிர்க்கட்சி தலைவர் இப்படி சாதாரணமான ஒரு கூட்டல் கணக்குகூட தெரியாமல் பேசுவாரா என்று யோசிக்காமல் சிலர் எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன பேசினார். எங்கே பேசினார் என்பதைப் பார்ப்போம்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் திமுக தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. கிராம சபாக்களை நடத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதிமுகவை நிராகரிப்போம் என்று திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராணிப்பேட்டை மாவட்டம், அனந்தலையில் அதிமுகவை நிராகரிப்போம் என்று பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின், உண்மையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “அதிமுக அரசு பொங்கலுக்காக 2,500 ரூபாய் கொடுக்கப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். நாங்கள் அதை வரவேற்கிறோம். அதை வேண்டாம் என்று சொல்லவில்லை. அப்போதே வரவேற்றிருக்கிறோம். நாங்கள் 5,000 கொடுங்கள் என்று கூறினோம். ஆனால், அதிமுக 2,500 ரூபாய் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள். கொரோனா காலத்தில் முன்பு 1000 ரூபாய் கொடுத்தீர்கள் இப்போது 2,500 கொடுக்கிறீர்கள். உங்கள் கணக்குப்படி 2,500 உடன் 1,000 ரூபாயைக் கூட்டிக்கொள்ளுங்கள். 3,500 ரூபாய் ஆகிறது. அந்த 5,000-க்கு இன்னும் எவ்வளவு மிச்சம் இருக்கிறது? 1,500 ரூபாய் இருக்கிறது. அதனால், அந்த 1,500 ரூபாயையும் சேர்த்து கொடுங்கள் என்றுதான் கூறுகிறோம்” என்று பேசுகிறார்.
ஆனால், ஹேட்டர்களோ, ஸ்டாலினின் பேச்சை எடிட் செய்து அவர் பேசியதை தவறாக திரித்து அவருக்கு கணக்கு தெரியாதது போல சித்தரித்து அவதூறு செய்துள்ளார்கள். ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உண்மையில் சரியாகத்தான் பேசி இருக்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"