பெரியார் சிலை தாக்குதல் குறித்து ஸ்டாலின் : “சுயமரியாதை வெளிச்சம் பாய்ச்சிய தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் நாளில், அவரது சிலையை அவமானப்படுத்த முயற்சித்திருக்கும் மூடர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மானமுள்ள ஒவ்வொரு தமிழரும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளை இன்று சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே தலைவர் கலைஞர் அவர்கள் நிறுவிய தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மானத் தமிழர்கள் தங்கள் வாழ்க்கைக்கு சமூகநீதி - சுயமரியாதை வெளிச்சம் பாய்ச்சிய தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் நாளில், சில ஈனப் புத்திக்காரர்கள் பெரியாரை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க விஷமத்தனமாகத் திட்டமிட்டு வெறிபிடித்த மிருகம் போல செயல்படுகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தீவுத்திடல் பூங்காவில் உள்ள பெரியார் சிலையையும், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையையும் அவமதித்துள்ள கயமைத்தனத்திற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தன் வாழ்நாளிலேயே இதுபோன்ற தாக்குதல்களை நேரடியாக எதிர்கொண்டு, அஞ்சாமல் போராடி, எதிரிகளைப் பொடிப்பொடியாக்கியவர் பெரியார். கடலூரில் அவர் மீது செருப்பு வீசப்பட்ட இடத்திலேயே பின்னர் அவருக்கு சிலை வைக்கப்பட்டு, அவர் முன்னிலையிலேயே அதனைத் தலைவர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார் என்பது பெருமைமிகு வரலாறு.
அந்த வரலாறு அறியாத மூடர்கள் - திராவிட இயக்கத்தால் தமிழ்நாடு கண்டுள்ள சமுதாயப் புரட்சியை செரிமானம் செய்ய முடியாத மனநலன் பிறழ்ந்தவர்கள் அண்மைக்காலமாக இதுபோன்ற இழிவான - மலிவான -தரங்கெட்ட செயல்களை மதவெறி சக்திகளின் பின்னணியுடன் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலமாக தமிழ்நாட்டில் நிலவுகின்ற ஒற்றுமை உணர்வை - மதநல்லிணக்கத்தை - சமூக நீதிக் கொள்கையை தகர்த்து, மதவாதப் பேயாட்டம் போடலாம் எனத் திட்டமிடுபவர்களை ஒட்ட நறுக்க வேண்டியது அவசியமாகும்.
தமிழின விரோதிகள் சிலர் சமீப காலமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதை அ.தி.மு.க அரசு பதவியில் நீடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வளர விட்டு வேடிக்கை பார்ப்பது மிகவும் ஆபத்தான போக்கு. இது பெரியார் மண் என்பது ஆள்பவர்களும் அறிவார்கள் என்பதால், தந்தை பெரியார் சிலையை அவமானப்படுத்த முயற்சித்து, அதன் மூலம் பொது அமைதியைக் குலைக்கத் திட்டமிட்டவர்களை ஒட்டுமொத்தமாக கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்றும், இது போன்ற செயல்களைத் தூண்டும் அமைப்புகளை சட்டத்தின் இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: பெரியார் சிலை மீது ஷூ வீசியது யார்? திடுக்கிடும் தகவல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.