Advertisment

உபரி நீர் கடலில் கலப்பதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

மாபெரும் துரோகத்தை தமிழக விவசாயிகளுக்கு அ.தி.மு.க அரசு செய்திருக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உபரி நீர் கடலில் கலப்பதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகாவில் கனமழை பெய்வதால் கிடைக்கும் பயனை வேளாண்மைப் பணிகளுக்கு பயன்படுத்தி முறையாக அனுபவிக்க முடியாத கொடுமையில் தமிழக விவசாயிகளைத் தள்ளி, அ.தி.மு.க அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

Advertisment

இருமுறை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியும், அங்கிருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் வேளாண்மைக்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் பயன்படாமல் நேராகக் கடலில் கலப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

காவிரி டெல்டா பகுதியில் 2500-க்கும் மேற்பட்ட ஏரிகளும், குளங்களும் முறையாக உரிய காலத்தில் தூர்வாரப்படாத காரணத்தால், தினமும் 2 லட்சம் கன அடி நீர் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டும் கூட, அந்தக் குளங்களும், ஏரிகளும் நிரம்பவில்லை. குறிப்பாக, திருவாரூரில் உள்ள ஐநூற்று பிள்ளையார் கோவில் குளம் தண்ணீரே இல்லாமல் இன்னும் வறண்டே காட்சியளிப்பது, அ.தி.மு.க ஆட்சியின் மோசமான நீர் மேலாண்மைக்கு உதாரணமாகத் திகழ்கிறது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்தபோது தான், காவிரி டெல்டா பகுதியில் முதன்முதலில் தூர் வாரும் பணியை தலைவர் கலைஞர் அவர்கள் துவக்கி வைத்து, அதைச் சிறப்பாகச் செயல்படுத்தியும் காட்டினார். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலங்களைக் கட்டினார். ஏரி, குளங்களை தூர் வாரியும், அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதை தடுத்தும், காவிரி நீர் கடைமடைப்பகுதிக்கும் தேவையான அளவுக்குப் போகும் நிலையை ஏற்படுத்தினார்.

ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டவுடன், “குடிமராமத்துப் பணிகளை மீண்டும் துவங்கி வைத்து விட்டேன்” என்று கூறிய மாண்புமிகு முதலமைச்சர், முதற்கட்டமாக 2016-17ல் 100 கோடியும், பிறகு, 2017-18ல் 300 கோடியும் ஒதுக்கினார். தற்போது 2018-19 நிதி நிலை அறிக்கையில் கூட 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 3854 குளங்கள் மற்றும் ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுள்ளதாக சட்டமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர, நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதியுதவியுடன் 3008 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ் “பருவ நிலை மாற்றத் தழுவல்” திட்டத்தின் கீழ் காவேரி பாசனப் பகுதியில் மட்டும் 215.84 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அணைகள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் 362.02 கோடி செலவிடப்பட்டுள்ளதாக 2018-19 ஆம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டது.

ஏறக்குறைய நீர் மேலாண்மைக்காக சுமார் 4,735 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக அ.தி.மு.க அரசு அறிவித்தும், இன்றைக்கு நூற்றுக்கணக்கான டி.எம்.சி காவிரி உபரி நீர் வங்கக் கடலில் கலக்கிறது என்றால், ஏறக்குறைய 5 ஆயிரம் கோடி அரசு பணம் எங்கே போனது? கடலில் கலக்கும் உபரி நீரைத் தேக்கி வைப்பதில் தலைவிரித்தாடிய கமிஷன் தொகை எவ்வளவு? போன்ற கேள்விகள்தான் எழுகிறது.

அதுமட்டுமின்றி, மழைக்காலங்களில் காவிரியில் உபரியாக வரும் நீரை தேக்கி வைக்க கழக ஆட்சியில் நதி நீர் இணைப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. காவிரியாற்றினை அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, கோட்டைக்கரையாறு, வைகை மற்றும் குண்டாறுடன் இணைக்கும் இந்தத் திட்டம் 189 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் 9.2.2009 அன்றே பணிகளும் துவங்கப்பட்டன. சுமார் 54.26 கோடி வரையிலான பணிகள் கழக ஆட்சியிலேயே நிறைவேறிய நிலையில் 2011ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு, காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அத்திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டது.

மத்திய அரசிடம் நிதியுதவி கோருகிறோம் என்று ஒரு மாற்றுத் திட்டத்தை அறிவித்து தி.மு.க துவக்கி வைத்த நதிகள் இணைப்புத் திட்டத்தையும் முடிக்காமல், அறிவித்த புதிய திட்டத்தையும் நிறைவேற்றாமல் இன்றைக்கு காவிரி நீரை கடலில் கலக்க விடும் மாபெரும் துரோகத்தை தமிழக விவசாயிகளுக்கு அ.தி.மு.க அரசு செய்திருக்கிறது.

இதேபோல் 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி துறை ஏரிகள், 971 குளங்களுக்கு உபரி நீரைத் திருப்பி விடும் அத்திக்கடவு- அவினாசி திட்டப் பணி குறித்து கழக ஆட்சியில் வல்லுனர் குழு அமைத்து அதன் அறிக்கை 2009-ல் பெறப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்பட்ட அந்தத் திட்டத்தினை கடந்த ஏழு வருடங்களாக அ.தி.மு.க அரசு நிறைவேற்றாமல் முட்டுக்கட்டை போட்டு வைத்திருக்கிறது. 2016-17 திருத்திய நிதி நிலை அறிக்கையில் 3.27 கோடி ரூபாயும், 2018-19 நிதி நிலை அறிக்கையில் 250 கோடி ரூபாயும் ஒதுக்கினாலும், அதிமுக அரசு இத்திட்டத்தை மாநில அரசின் நிதியிலேயே நிறைவேற்ற எந்த விதமான ஆக்கபூர்வமான முயற்சிகளையும் எடுக்கவில்லை.

ஆகவே, உபரி நீர் எல்லாம் இன்று கடலில் கலப்பதற்கு, ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும். இதுதவிர, பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வறண்டு கிடக்கும் குளங்கள் மற்றும் ஏரிகளை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதை பரிசீலனை செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

தொலைநோக்குப் பார்வையற்ற அ.தி.மு.க அரசால், இன்றைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளும் சீரழிந்து நிற்கின்றன. தூர்வாரியதில் செய்த முறைகேடுகளால் கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி நேர் சென்றடைவதில் சிக்கலாக இருக்கிறது. வெள்ளமெனப் பாய்ந்து ஓடும் நீரை தேக்கி வைக்கவும் இந்த அரசால் முடியவில்லை. ஒருபுறம் கடலில் நீர் கலக்கிறது. இன்னொரு புறம் ஏரி, குளங்கள் வறண்டே காட்சியளிக்கிறது.

ஆகவே, அரசு கஜானாவில் இருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவழித்தும், ஏரி, குளங்கள், அணைகள் போன்றவற்றை மறு சீரமைப்பு செய்வதில் படுதோல்வியடைந்து, விவசாயத்திற்கு தேவைப்படும் உபரி நீரை இன்றைக்கு விரையம் செய்து விட்டு நிற்கும் அ.தி.மு.க அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனியாவது தொலைநோக்கு “நீர் மேலாண்மை” திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்தும், கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நதி நீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்றியும் கடலில் கலக்கும் காவிரி நீரைத்தடுத்து வேளாண்மைக்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் திருப்பி விடுமாறு அ.தி.மு.க அரசைக் கேட்டுக் கொள்கிறேன்." என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment