தி.மு.க தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டபின், மாவட்ட செயலாளர்களுடன் காணொலி வழியாகப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பொதுத் தேர்தல் திருவிழா கலைகட்டி வருகிறது. தமிழ்நாட்டில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க, ஐ.யூ.எம்.எல், கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் இடையே தொகுதிபங்கீடு இறுதி செய்யப்பட்டு, காங்கிரஸ் தவிர மற்ற கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தேர்தல் அறிக்கை மற்றும் தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். மக்களவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட மு.க. ஸ்டாலின், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம், நாற்பதும் நமதே, நாடும் நமதே என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காணொலி வழியாக தி.மு.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் தி.மு.க உயர்மட்டத் பொறுப்பாளர்களுடன் மக்களவைத் தேர்தல் தொடர்பாகப் பேசினார். அப்போது, தி.மு.க நிர்வாகிகள் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் செயல்பட வேண்டும் என்றும் ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு குறைந்தாலும் மாவட்டச் செயலாளர் மற்றும் பொறுப்பு அமைச்சர்தான் பொறுப்பு, எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரித்து கண்டுப்புடன் பேசினார்.
தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்கள்ள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கணொலி வாயிலாக பேசியதாவது: “எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும். சட்டமன்ற தொகுதியில் வாக்கு குறைந்தால் அதற்கு மாவட்ட செயலாளரும், பொறுப்பு அமைச்சரும்தான் பொறுப்பு; கூட்டணி கட்சி தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். வீடு வீடாக சென்று வாக்கு கேட்பது மிகவும் முக்கியம். சமூக நீதி, மதச்சார்பின்மைக்கு எதிரான கருத்தியல்களை விதைக்கலாம் என்ற எண்ணம் இனிமேல் பா.ஜ.க.வுக்கு கனவிலும் வரக்கூடாது.
தொகுதி மட்டுமின்றி ஒன்றிய, நகரம், பகுதி, பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தை கண்காணிக்க உள்ளேன். தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை கடந்து தமிழ்நாட்டின் நலன் முக்கியம். நீண்டகாலமாக தோளோடு தோளாக கொள்கை உணர்வுடன் கூட்டணி கட்சியினர் நம்மோடு பயணிக்கிறார்கள். நட்புணர்வோடு கூட்டணி கட்சிகளுக்கு சில தொகுதிகள் பெற்று சில தொகுதிகளை விட்டுக்கொடுத்துள்ளோம். எல்லா தொகுதியிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“