கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக, சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோடநாடு கொலை விவகாரத்தில், தவறு செய்தவர்கள் எப்படிப்பட்டவர்கள், யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5, 2016-ல் மறைந்த பிறகு, அவருடைய மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. ஜெயலலிதா தங்கி வந்த கோடநாடு பங்களாவும் கவனம் பெற்றது. கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோடநாடு எஸ்டேட்டில் காவல் பணியில் இருந்த ஓம் பகதூர் என்ற செய்யூரிட்டி படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
கோடநாடு வழக்கில் சயான் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் பெயரும் அடிப்பட்டது. கனகராஜ் சேலத்தில் சாலை விபத்தில் இறந்தார். சயான் கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு மனைவி, குழந்தையுடன் செல்லும்போது கார் விபத்துக்குள்ளானது. சயான் பிழைத்துக் கொள்ள, மனைவியும், குழந்தையும் இறந்தனர்.
இப்படி, கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களைப் பற்றி விலகாத மர்மங்கள் பல இருக்கின்றன. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு தலைமையிலான காவல்துறை கோடநாடு வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரித்து வருகிறது.
2021-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரின்போது, கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கோடநாடு வழக்கு விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்படி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், என்ன நோக்கத்திற்காக விசாரணை நடத்த வேண்டும் என கேள்வி எழுப்பினர்.
முதலமைசர் மு.க. ஸ்டாலின் அறிவிப்புக்குஅ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை எனவும் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.
இந்நிலையில், தற்போது நடைபெற்றுவரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில், கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோடநாடு கொலை விவகாரத்தில், தவறு செய்தவர்கள் எப்படிப்பட்டவர்கள், யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய (அக்டோபர் 11) நிகழ்வில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கோடநாடு கொலை கொள்ள சம்பவத்தில் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “கோடநாடு பங்களாவில் நடந்த கொலை , கொள்ளை சம்பவத்தின், குற்றவாளிகள் மீது முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கோடநாடு, கொள்ளை வழக்கில், காவல்துறை உயர் அதிகாரிகள் அங்கு சென்று பார்க்கவில்லை, 90 நாட்களில் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவதாக முதலமைச்சர் கூறியதாக சுட்டிக்காட்டி பேசினார்.
முதலமைச்சரை கெஞ்சிக் கேட்கிறேன். எங்களை வளர்த்து ஆளாக்கிய அம்மா (ஜெயலலிதா) வாழ்ந்த வீட்டில் கொலை-கொள்ளை நடந்திருக்கிறது. சொல்லாததை செய்பவர் முதலமைச்சர் என்றார்கள். ஆனால், அவர் சொன்னதை ஏன் செய்யவில்லை?” என்று வைத்திலிங்கம் கேள்வி எழுப்பினார். மேலும், குற்றவாளி எந்த உயரத்தில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடைபெற்று வருகிறது. மிக விரைவில் குற்றவாளி யார் என்பது தெரியவரும் எனவும் உறுதியளித்தார்.
மேலும், கோடநாடு கொலை விவகாரத்தில், தவறு செய்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“