முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவின் சகோதரி ஜெயந்தி சரவணன் இல்ல திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. மு.க. ஸ்டாலின் தனது சகளை மகன் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்ததோடு, திருமண விழா மேடையில், மனைவி துர்காவுக்கு அனைவர் முன்னிலையிலும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி தனது அன்பை வெளிப்படுத்தி சர்ப்ரைஸ் கொடுத்தார்.
திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பேசியதாவது: முதலில் என்னுடைய துணைவியாருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். இரவு 12 மணிக்கே சொல்லிவிட்டேன். இருந்தாலும் எல்லோரும் மேடையில் சொன்னார்களே, நீங்கள் மட்டும் சொல்லவில்லையே என்று வீட்டிற்குச் சென்று பிறகு கேட்டுவிடக்கூடாது. பயந்து அல்ல, எல்லோரும் வாழ்த்திய அந்த அடிப்படையில் இன்றைக்கு 63-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் என்னுடைய துணைவியாருக்கு உங்களோடு சேர்ந்து நானும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” கூறினார். இதைக் கேட்டு திருமண நிகழ்ச்சி கலகலப்பானது.
தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின் கூறியதாவது: “எல்லோரும் பேசுகிறபோது, தளபதி வீட்டுத் திருமணம், நம்முடைய வீட்டுத் திருமணம் என்று அவர்களுக்குரிய வகையில் தம்முடைய வாழ்த்துரையை சொல்லுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார்கள். ஒட்டுமொத்தமாக ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், இது கழகக் குடும்பத்தின் திருமணம். அதே நேரத்தில் ஒரு பாரம்பரியத்தை பெற்றிருக்கும் ஒரு குடும்பத்தில் நடைபெறும் திருமணம்.
டி.என்.ராஜரத்தினம் பிள்ளை என்று பரவலாக அறியப்படுகிற திருமருகல் நடேச பிள்ளை ராஜரத்தினம் பிள்ளைக்கு கீர்த்தனைகளை வாசிப்பதற்கு கற்றுக் கொடுத்திருப்பவர்களில் மிக மிக முக்கியமாக இருந்தவர் யார் என்று கேட்டால், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய அருமைத் தந்தை - என்னுடைய தாத்தா முத்துவேலர் அவர்கள். தோடி ராகத்தை வாசிப்பதில் நாதஸ்வர கலைஞர்களுள் புகழ்பெற்ற ஒரு தன்னிகரில்லா விற்பனராக ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் விளங்கியிருக்கிறார்கள்.
இன்னொரு செய்தியும் நான் சொல்லியாகவேண்டும். 1905-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி ஆவடியில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு. அந்த மாநாட்டிற்கு ஜவகர்கலால் நேரு அவர்கள் வந்திருக்கிறார்கள். அந்த மாநாட்டையொட்டி ஊர்வலம் ஒன்று நடைபெறுகிறது. முதல் நாள் தலைவர்களை எல்லாம் வரவேற்று அந்த ஊர்வலம் நடக்கிறது, பேரணி நடக்கிறது. அந்த ஊர்வலம் நடைபெறுவதற்கு முன் வரிசையில் நின்று அங்கு நாதஸ்வரம் வாசித்தவர்தான் நம்முடைய பெருமைக்குரிய ராஜரத்தினம் பிள்ளை அவர்கள். தாழ்ந்து கிடந்த இசைக் கலைஞர்களை சமூக வாழ்க்கையில் தலைநிமிரச் செய்தவர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்கள்.
இன்னொன்று, அவருடைய ஸ்பெஷலட்டி என்னவென்று கேட்டீர்கள் என்றால், நாதஸ்வர கலைஞர்களில் முதல்முறையாக 'கிராப்' வைத்துக் கொண்டவரும் அவர்தான். அது மட்டுமல்ல, முதல் முறையாக 'கோட்' போட்டுக் கொண்டு, 'ஷெர்வாணி' ஆடைகளை அணிந்தவரும் நம்முடைய ராஜரத்தினம் பிள்ளைதான் அவர்கள். இத்தகைய ஆடைகளை அணிந்து கொண்டது மட்டுமல்ல, காலில் 'ஷூ'-வும் போட்டுக் கொண்டிருப்பார்.
இன்று டி.என்.ஆர் அவர்களுடைய கொள்ளுப் பெயரன் கருணா ரத்தினத்திற்கும் - செல்வி காவ்யா அவர்களுக்கும் என்னுடைய தலைமையில் திருமணவிழா நடந்தது என்றால் கழகத்தின்பால் இந்தக் குடும்பத்திற்கு ஒரு நீண்ட தொடர்பு இருந்திருக்கிறது என்பதை எண்ணி எண்ணி நாம் மகிழ்ச்சி அடைகிறோம். இங்கே நன்றியுரை ஆற்றிய டாக்டர் ராஜமூர்த்தி பேசியபோது குறிப்பிட்டுச் சொன்னார். இவருக்கு எவ்வாறு இந்தப் பெயர் கிடைத்தது என்று.
கருணாரத்தினம், இந்த கருணா பிறந்தவுடன் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களும், என்னுடைய மனைவி துர்கா அவர்களும் குழந்தையாக இருந்த கருணாவை கொண்டு சென்று தலைவர் கையில் கொடுத்துப் பெயர் வைக்கவேண்டும் என்று கேட்டார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் 'கருணாரத்தினம்' என்று பெயர் வைத்தார்கள். இதைக்கேட்டதும் சிலருக்கு இவ்வாறு ஒரு பெயர் வைத்து விட்டாரே, இதற்கு என்ன பொருள் என்று யாருக்கும் புரியவில்லை.
தலைவருடைய பெயர் கருணாநிதி, அந்தக் கருணா என்ற பாதி எழுத்தை எடுத்து, ராஜரத்தினம் பிள்ளையின் ரத்தினத்தைச் சேர்த்து 'கருணா ரத்தினம்' என்று பெயர் சூட்டியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்பதை நான் இந்த நேரத்தில் நினைவுப்படுத்த விரும்புகிறேன். அப்படிப்பட்ட பெருமைக்குரிய பெயரைத் தாங்கியிருக்கும் மணமகன் கருணாரத்தினம், என்னுடைய குடும்பத்தைப் பொறுத்தவரையில் அந்த அளவிற்கு அவர் பாசமாக இருந்திருக்கிறார்; இருந்து கொண்டிருக்கிறார்; இருக்கவும் போகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அவர் படித்து முடித்துவிட்டு வேலைக்காக அபுதாபிக்கு சென்றார். அபுதாபி சென்று, ஒரு வருடம் - இரண்டு வருடம் வேலை பார்த்திருப்பார். அதற்குப் பிறகு, என்னால் அங்கு இருக்க முடியாது, எனக்கு ஹோம் சிக் வந்துவிட்டது, நான் அம்மாவை பார்க்க வேண்டும், அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று சொல்வதைவிட நான் என்னுடைய அண்ணன் உதயநிதியைப் பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பி வந்தவர்தான் நம்முடைய கருணா அவர்கள். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், அந்த அளவிற்குக் குடும்பத்தின்மீது பற்றும் பாசமும் கொண்டவர். எனவே மணமகள் காவ்யா கவலைப்பட வேண்டாம். அவர் நிச்சயமாக உங்கள் குடும்பத்தின் மீதும் அளவுகடந்த பற்றும் பாசமும் வைத்து நிச்சயமாக வாழ்க்கையை நடத்துவார். அதற்கு நான் கேரண்டி கொடுக்கிறேன்.
எனவே ஒரு தமிழ் உணர்வோடு, தமிழ்ப்பற்றோடு இருந்த - இருந்து கொண்டிருக்கின்ற இந்தக் குடும்பத்தில் இந்தத் திருமணம் நடக்கிறது.
எனவே தமிழ் என்றால் நமக்குத் தானாக ஒரு உத்வேகம் வந்துவிடுகிறது. அது உள்ளூர் தமிழனாக இருந்தாலும் சரி, உக்ரைனில் இருக்கும் தமிழனாக இருந்தாலும் அவர்களையும் காப்பாற்றுகிற இயக்கம் இந்த இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியும்.
உக்ரைனில் இருப்பவர்கள் அங்கு அகதிகளாக ஆகிவிடுவார்களோ அல்லது ஆபத்தில் சிக்கி விடுவார்களோ என்று கருதிக் கொண்டிருந்த நேரத்தில் ஏறக்குறைய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 2000 பேர் அங்கு இருக்கிறார்கள் என்ற செய்தியை நாம் கேள்விப்பட்டவுடன் இந்தியாவில் எந்த மாநிலமும் முன்வராத நிலையில் முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் அவர்கள் அத்தனை பேரையும் இங்கு அழைத்து வருவதற்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அவர்கள் அத்தனை பேரையும் பத்திரமாக அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக என்னென்ன முயற்சிகள் எல்லாம் எடுத்து வந்தோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
நேற்றோடு அத்தனை பேரும் வந்து சேர்ந்து விட்டார்கள். கடைசியாக வந்த 9 பேரை வரவேற்பதற்காக நானே விமான நிலையத்திற்கு சென்று அவர்களை வரவேற்ற காட்சிகளை நீங்கள் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.
அதற்காக நம்முடைய திருச்சி சிவா அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து, அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, நம்முடைய அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் தம்பி டி.ஆர்.பி.ராஜா, அரசுத் துறையைச் சார்ந்திருக்கும் அதிகாரிகளை எல்லாம் குழுவாக அமைத்து, டெல்லியிலேயே பத்து நாள் தங்கி அத்தனை பேரையும் அழைத்து வந்திருக்கிறார்கள்.
எனவே தமிழன் எங்கிருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுகிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதற்கு இதை ஒரு எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். எனவே அப்படிப்பட்ட தமிழ்க் குடும்பத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் உள்ளபடியே நீங்கள் எல்லாம் கலந்து கொண்டு இங்கு மனதார வாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள்.
எனவே தலைமையேற்று நடத்தும் நானும் மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டு, வழக்கமாக நான் திருமண விழாக்களில் எடுத்துச் சொல்வது போல, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும் “வீட்டிற்கு விளக்காக - நாட்டிற்கு தொண்டர்களாக” மணமக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்ப்பவர்களாக வாழுங்கள் வாழுங்கள் என்று மனதார வாழ்த்தி விடைபெறுகிறேன்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.