தமிழகம் மீட்போம் எனும் தலைப்பில் '2021' சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட சிறப்புப் பொதுக்கூட்டங்களை நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்தது.
இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " கழகத் தலைவர் அவர்கள் , பல்வேறு மாவட்டங்களில் மும்பெரும் விழாக்களில் காணொளிக் காட்சி மூலமாக கலந்து கொண்டதைத் தொடர்ந்து , "தமிழகம் மீட்போம்" எனும் தலைப்பிலான "2021- சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்பு பொதுக் கூட்டங்கள்" நடைபெறும். முதல் கட்டமாக சிறப்பு பொதுக் கூட்டங்கள் கீழே குறிப்பிட்டுள்ள தேதிகளில் வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட தி.மு. கழக மாவட்டங்களை ஒருங்கிணைந்து நடைபெறும்.
- நவம்பர் 1 - ஈரோடு
- நவம்பர் 2 - புதுக்கோட்டை ( முத்தமிழறிஞர்கலைஞர் சிலை திறப்பு விழா)
- நவம்பர் 3 - விருதுநகர்
- நவம்பர் 5 - தூத்துக்குடி
- நவம்பர் 7 - வேலூர்
- நவம்பர் 8 - நீலகிரி
- நவமபர் 9 - மதுரை
- நவமபர் 10 - விழுப்புரம்
இவ்வாறு தி.மு. கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 17 - பெரியார் பிறந்த நாள், திமுக தொடங்கப்பட்ட நாள், செப்டம்பர் 15 - அண்ணா பிறந்த நாள். இந்த 3 விழாக்களையும் இணைத்து கருணாநிதி முப்பெரும் விழாவாக நடத்தினார். இருப்பினும், இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த செப்டம்பர் 15ம் தேதியன்று, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மிகவும் எளிதாக முப்பெரும் விழா நடைபெற்றது.
இதற்கிடையே, திமுகவின் பெரும்பாலான மாவட்டக் கழகங்களுக்கும் மு. க ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் விழாவை காணொளி மூலம் நடத்தியது. திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நடைபெறக்கூடிய முப்பெரும் விழாவில் பேசிய ஸ்டாலின், " முப்பெரும் விழாவை காணொலிக் காட்சி மூலமாக நடத்துவதால் அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் முப்பெரும் விழாவிலும் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. மாவட்டக் கழகங்களுக்கும் தலைவரை வைத்து கூட்டம் நடத்தினோம் என்ற மனநிறைவைத் தந்திருக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும், கழக வரலாற்றில் முதன் முறையாக, உறுப்பினர் சேர்க்கையை இணைய வழியாக திமுக செயல்படுத்தியது. முப்பெரும் விழாவில் 'எல்லோரும் நம்முடன்' என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil