Advertisment

இந்து கோவில்களை, திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளதா? மோடி குற்றச்சாட்டுக்கு, ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை, திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் மோடி கூறுவது கண்டிக்கத்தக்கது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

author-image
WebDesk
New Update
Vallalar

Mk Stalin

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவானர் அரங்கில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் – 200” ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழா முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

Advertisment

அப்போது, வள்ளலாரின் இறைய அனுபவங்கள்" என்ற நூலினை வெளியிட்டு, வடலூரில் 100 கோடி ரூபாயில் வள்ளலார் பெயரில் அமையவிருக்கும் வள்ளலார் சர்வதேச மையத்திற்கான ஆணையினை வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக் குழு தலைவர் முனைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயரிடம், மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ’இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான மிக முக்கியமான வழிகாட்டி அருள்திரு வள்ளலார். இறையியல் என்பது அவரவர் விருப்பம், அவரவர் தனிப்பட்ட உரிமை. ஆனால் அதை ஒரு கூட்டம் அரசியலுக்கு பயன்படுத்தி அதன்மூலம் குளர்காய்கிறது.

அரசியல் வேறு - ஆன்மிகம் வேறு என்பதை பகுத்தறிந்து பார்க்கும் பகுத்தறிவாளர்கள் தான் தமிழ்நாட்டு மக்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை செய்ய வருகை வந்த பிரதமர் மோடி தமிழ்நாட்டுக் கோயில்களைப் பற்றிப் பேசி இருக்கிறார்கள். அவர் மத்தியப் பிரதேசத்திற்கு சென்று பேசினாலும், அந்தமானில் பேசினாலும், தெலங்கானாவில் பேசினாலும், தமிழ்நாட்டைப் பற்றித் தான் பேசுகிறார். அவரால் மறக்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களை, திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோவில் சொத்துகள் மற்றும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்று பகிரங்கமாக பேசி இருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். பிரதமருக்கு நான் எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்பு வாய்ந்த இந்திய நாட்டின் பிரதமர் தவறான அவதூறு செய்தியை சொல்வது சரியா? ஒரு மாநிலத்தின் செயல்பாடு குறித்து இன்னொரு மாநிலத்தில் போய் பேசுவது முறையா? தர்மமா?

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கோவில்களை அரசு ஆக்கிரமித்தது போலவும் வருமானங்கள் முறை கேடாக பயன்படுத்தப்படுவது போலவும் பொய்யான செய்தியை இந்திய நாட்டின் பிரதமர் கட்டமைக்க வேண்டிய அவசியம் என்ன? அவர் யாருக்காக பேசுகிறார்? யாருடைய குரலை எதிரொலிக்கிறார்?

இந்த இரண்டு ஆண்டு காலத்தில் ரூ.3,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இது தவறா? சொல்லுங்கள் இது தவறா? 1000 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம். இது தவறா?

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவறா?

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள 1250 திருக்கோயில்கள் மற்றும் 1250 கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணிகளையும் சேர்த்து இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது தவறா? எதைத் தவறு என்கிறார் பிரதமர்?

பிரதமர் பார்வையில்தான் தவறு இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரையும் எல்லார்க்கும் எல்லாம்என்ற பொதுத் தன்மையுடனான ஆட்சியை நடத்தி வருகிறோம். கருணையுள்ள ஆட்சியை நடத்தி வருகிறோம்.

அதனால்தான் கருணை வடிவிலான வள்ளலாரைப் போற்றுகிறோம்.அதற்கு அடையாளமாக வள்ளலார் – 200 நிகழ்ச்சியில் ஓர் அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.

கடலூர் மாவட்டத் தலைநகரில் 17 ஏக்கரில் அமைக்கப்பட இருக்கின்ற புதிய பேருந்து நிலையத்திற்கு அருள்பிரகாச வள்ளலார்பெயர் சூட்டப்படும்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வழியில், வாடிய உயிர்கள் அனைத்தையும் வாழ வைக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி என்றைக்கும் செயல்படும், இது உறுதி. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment