காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டு இன்று முடிவுகள் வெளியாது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் நேரடியாக மோதினர். இதில், பெரும்பான்மையான வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வி.சி.க தலைவர் திருமாவளவன், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நெறிமுறைகளைப் பாதுகாக்க அனைவரும் போராடும் முக்கியமான காலத்தில் பொறுப்பேற்றுள்ளார் என்று காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சனாதனத்தின் பேரழிவிலிருந்து தேசத்தைக் காப்பது - அரசியலமைப்பைக் காப்பாற்றுவது என்ற காங்கிரஸ் கட்சியின் இலக்கை அடைய மல்லிகார்ஜுன கார்வுக்கு வாழ்த்துகள் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சனாதனத்தின் பேரழிவிலிருந்து தேசத்தைக் காப்பது - அரசியலமைப்பைக் காப்பாற்றுவது என்ற காங்கிரஸ் கட்சியின் இலக்கை அடைய வாழ்த்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அன்புமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு வாழ்த்துகள். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, அடித்தட்டு குடும்பத்தில் பிறந்த மல்லிகார்ஜுன கார்கே தமது கடுமையான உழைப்பால் மிக உயர்ந்த பொறுப்பை அடைந்திருக்கிறார். மக்களுடன் மக்களாக வாழ்ந்தவர், தொண்டர்களுடன் தொண்டர்களாக களப்பணியாற்றியவர். அப்பழுக்கற்றவர். தேசிய, மாநில அரசியலில் கார்கேவுக்கு உள்ள 50 ஆண்டுகளுக்கும் கூடுதலான பொதுவாழ்வு அனுபவம், புதிய பொறுப்பில் திறம்பட செயல்பட அவருக்கு உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"