மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: கூட்டணி சர்ச்சைக்கு முடிவு

MK Stalin - Thol Thirumavalavan Meeting: மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

MK Stalin – Thol Thirumavalavan Meeting At Anna Arivalayam: மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். வைகோ என்ன செய்யப் போகிறார்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

திமுக தமிழ்நாட்டில் பாஜக.வுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் ஆகியவை திமுக.வுடன் இணைந்து போராட்டங்களில் பங்கெடுத்து வருகின்றன.

இதற்கிடையே அண்மையில் தந்தி டி.வி.க்கு பேட்டியளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், ‘காங்கிரஸும், முஸ்லீம் லீக்கும் எங்கள் கூட்டணிக் கட்சிகள். மற்றக் கட்சிகள் நட்புடன் இருப்பவை. தேர்தலின்போது சில கட்சிகள் வரலாம். சில கட்சிகள் போகலாம்’ என்கிற ரீதியில் பேசினார்.

இது குறித்து பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘துரைமுருகன் கருத்து எங்கள் தொண்டர்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. திமுக தலைவர் இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்’ என்றார். ஆனால் ஸ்டாலின் வெளிப்படையாக இது குறித்து எதுவும் சொல்லவில்லை.

இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், ‘நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோமா? என்பதை திமுக.தான் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றார். திருமா, வைகோ இருவரும் வெவ்வேறு தருணங்களில் ஆளும்கட்சிக்கு ஆதரவாகவும் பேசியிருக்கிறார்கள். இதை வைத்து மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகியன திமுக அணியில் இருந்து விலகுகின்றனவா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்தச் சூழலில் இன்று (நவம்பர் 27) மதியம் 12 மணிக்கு சென்னையில் திமுக தலைமையகமான அறிவாலயத்திற்கு திருமாவளவன் சென்றார். அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திருமா சந்தித்தார். பரஸ்பர சால்வை அணிவிப்புகளுக்கு பிறகு இரு தலைவர்களும் சிறிது நேரம் பேசினர். கூட்டணி சர்ச்சைகளுக்கு அப்போது முடிவு கட்டியதாக தெரிகிறது.


இதற்கிடையே வைகோ-திமுக இடையே உருவான உரசலுக்கும் இதே பாணியில் முடிவு கட்டப்படுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. வைகோ இதேபோல மு.க.ஸ்டாலினை சந்திப்பாரா? என்கிற எதிர்பார்ப்பும் இரு கட்சித் தொண்டர்களிடமும் இருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close